லவ் லெட்டர் வந்திருக்கு... ஆனா சீக்ரெட் .... தீபா சன்னிதி பேட்டி! | தீபா சன்னிதி, எனக்குள் ஒருவன், deepa sannidhi, enakkul oruvan

வெளியிடப்பட்ட நேரம்: 11:52 (27/01/2015)

கடைசி தொடர்பு:11:52 (27/01/2015)

லவ் லெட்டர் வந்திருக்கு... ஆனா சீக்ரெட் .... தீபா சன்னிதி பேட்டி!

சித்தார்த்துடன் ‘எனக்குள் ஒருவன்’, ஆர்யாவுடன் ‘யட்சன்’ படங்களின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் கன்னட நடிகை தீபா சன்னிதி. கோலிவுட்டுக்கு வந்திருக்கும் இந்த அழகுப் புயலிடம் நலம் விசாரித்தால், தமிழிலேயே ‘வணக்கம்’ வைக்கிறார். அவருடன் அடித்த ஜாலி அரட்டை.

‘‘வழக்கம்போல நீங்களும் ஆக்ஸிடென்ட்டாதான் நடிக்க வந்தீங்களா?’’

“மத்தவங்க எப்படியோ, நான் நடிக்க வந்தது உண்மையிலேயே ஆக்ஸிடென்ட்தான். சின்ன வயசுல இருந்தே படிக்கிறது, எழுதுறது, ஸ்கூல், காலேஜ் மேடை நாடகங்கள்ல நடிக்கிறதுனு ஆல்வேஸ் பிஸி. பிரின்ட் விளம்பரங்கள்ல நிறைய போஸ் கொடுத்திருக்கேன். அந்த போட்டோக்களைப் பார்த்துதான் ‘சாரதி’ங்கிற கன்னடப் படத்துல தர்ஷன் ஜோடியா நடிக்கிற வாய்ப்பு கொடுத்தாங்க. அப்படியே பரபரனு 5 கன்னடப் படங்களில் நடிச்சுட்டேன். இப்போ தமிழ்ல, தொடர்ந்து வாய்ப்புகள். ஆனா, நான் நடிக்கிறதை முழு நேர வேலையா எடுத்துக்காம, நல்ல கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்னு பார்க்கிறேன். நாலு படம் நடிச்சாலும் நச்சுனு இருக்கணும். கிடைக்கிற கேப்புல எல்லாம் கிடா வெட்டுறது எனக்குப் பிடிக்காது.’’

‘‘உங்க ஹீரோக்கள் சித்தார்த், ஆர்யா எப்படி?”

“சித்தார்த் பேசிக்கலி ரொம்ப இன்டலக்சுவல். நிறைய விஷயங்கள் பேசுவார். ஆர்யா ரொம்ப ஜாலியான, அன்பான ஆளு. ரெண்டு பேரோடவும் பதற்றம் இல்லாம நடிக்க முடிஞ்சுது.”

“தமிழ் ஆடியன்ஸைக் கவனிச்சீங்களா?”

‘‘கவனிச்சேன். செம. நடிகர், நடிகைகள் மேல இவ்வளவு வெறித்தனமான அன்பு வெச்சிருக்கிறதைப் பார்த்தா, சந்தோஷமா இருக்கு. என்னையும் இவங்க கொண்டாடணும்னா, போறபோக்குல நடிக்காம பொறுப்பா நடிக்கணும்னு கத்துக்கிட்டேன்.”

‘‘தமிழ் ரொம்ப நல்லா பேசுறீங்களே?”

“தமிழ்ல நடிக்க சான்ஸ் வந்ததுமே தமிழ் கத்துக்க ஆரம்பிச்சுட்டேன். அதனால தமிழ் எப்.எம் கேட்கிறது, தமிழ் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறது, அவ்வளவு ஏன்? தமிழ்ல ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருந்தாலே அவங்க என்ன பேசுறாங்கனு ஆர்வமா பக்கத்துல போய் நின்னுக்குவேன். தவிர ஷூட்டிங்ல வேலை பார்த்த எல்லாரோடவும் கஷ்டப்பட்டாவது தமிழ் பேசிடுவேன். இப்போ மத்தவங்க பேசுற தமிழை நல்லா புரிஞ்சுக்க முடியுது. கவலைப்படாதீங்க. கூடிய சீக்கிரம் தமிழ்ப்பெண்ணா மாறிடுவேன்.”

‘‘நடிப்பு தவிர...”

“சிறுகதை, நாவல், கவிதைகள், வரலாறுனு புத்தகங்களைப் படிப்பேன். கலீல் கிப்ரான், அயன் ராண்ட் என்னோட ஃபேவரைட் எழுத்தாளார்கள். போட்டோ கிராஃபியும் ரொம்பப் பிடிக்கும். இதுதவிர, நகைகளை டிசைனிங் பண்ற படிப்பை முடிச்சிருக்கேன். ஆர்க்கிடெக்சரும் படிச்சு முடிச்சிடணும்னுதான் சேர்ந்தேன். சினிமாவுக்கு வந்ததினால அதை பாதியிலேயே விட்டாச்சு. திரும்பவும் அதைத் தொடரணும்.

நானும் நிறைய கவிதைகள் எழுதுவேன். கோபம், மகிழ்ச்சி, சோகம்னு நான் எமோஷனலாகி உணர்வதைக் கவிதையாக்கிடுவேன். ஏன்னா, கவிதை எழுதுவது எனக்கு மெடிடேஷன் மாதிரி. எழுதி முடிச்சதுக்கு அப்புறம் ஒரு புத்துணர்வு கிடைக்கும்.”

‘‘தமிழ்ல ஒரு கவிதை சொல்லுங் களேன்?”

(சத்தமாகச் சிரிக்கிறார்) ‘‘அய்யய்யோ... தமிழ் மொழியின் அருமை பெருமைகளைப் பத்தி நிறையப் படிச்சிருக்கேன். அப்படிப்பட்ட மொழியை நாசமாக்க நான் விரும்பலை.’’

‘‘ யாராவது இன்ஸ்பிரேஷன் இருப்பாங்களே?”

‘‘அப்பா சிக்மங்களூர்ல காபி எஸ்டேட் வெச்சிருக்கார். அம்மாவும் அங்கேதான். ஸ்கூல், காலேஜ்னு நான் படிச்சதெல்லாம் பெங்களூர். ஸோ... வீட்டுல இருந்ததைவிட நான் ஹாஸ்டல்ல இருந்ததுதான் அதிகம். ரொம்ப அமைதியா இருப்பேன், யார் என்ன பேசினாலும் கூர்ந்து கவனிப்பேன். அவங்க விவாதிச்ச விஷயத்துல ஏதாவது சந்தேகம் வந்தா, நானே தேடிப் படிச்சுத் தெரிஞ்சுக்குவேன்.”


‘‘லவ் லெட்டர் வந்திருக்கா?”

‘‘ம்... வந்திருக்கு. ஆனா, அதுக்கு நான் என்ன பதில் சொன்னேன்னு சொல்ல மாட்டேன். சீக்ரெட்!’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்