“ரஜினியோட ஸ்டூடன்ட் நான்!” | சாமிநாதன், நான் ரஜினியின் ஸ்டூடண்ட்,

வெளியிடப்பட்ட நேரம்: 14:59 (28/01/2015)

கடைசி தொடர்பு:14:59 (28/01/2015)

“ரஜினியோட ஸ்டூடன்ட் நான்!”

‘‘ ‘யோவ்... என்னய்யா நீயி... உனக்கு சுத்தமா நடிப்பே வரலைய்யா... இன்னும் நல்லா பண்ணு... நல்லா பண்ணுன்னு’ என் பொண்டாட்டிக்கிட்ட அடிக்கடி திட்டு வாங்கிட்டே இருப்பேன். டி.வி-யில ஏதாச்சும் என்னோட காமடி ஓட்டிட்டு இருந்தா போதும். நைஸா அந்த இடத்தைவிட்டு ஓடிருவேன். ப்ளீஸ் நீங்களாச்சும் சொல்லுங்க...எனக்கு நடிப்பு வருதா இல்லையா?’’ 
ஜாலியான மூடில் நகைச்சுவை நடிகர் சாமிநாதன்.

‘‘இவ்ளோ பெரிய தொந்தியை வெச்சுகிட்டு ஸ்டூடன்ட்டா நடிச்சுட்டு இருக்கீங்களே...?”

‘‘ஹாஹாஹா....நான் சின்னப்பிள்ளையில் இருந்தே ஸ்டூடன்டா நடிச்சுட்டு இருக்கேன். எனக்கு அப்போ 20 வயசு இருக்கும். அப்பவே ‘நான் சிகப்பு மனிதன்’ படத்துல ரஜினி சாருக்கு ஸ்டூடன்ட். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா டெவலப்பாகி ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்துல ஸ்டூடன்ட்டா நடிச்சு அரியர் வெச்சப் பசங்க எல்லாருக்கும் கம்பெனி கொடுத்தேன். அந்தப் படத்துல நடிக்கிற வரைக்கும் கும்பகோணத்துல ஷூட்டிங்னு மட்டும்தான்  தெரியும். ஆனா ஒன்ஸ் அபான் எ டைம் நான் படிச்ச அதே ஸ்கூல்ல அதே கிளாஸ்ல நான் நிஜமாவே அரியர் வெச்சிட்டு ஓடி வந்திருக்கேன். படத்துலேயும் அதே லொகேஷன்ல எக்ஸாம் எழுதினேன். ரியல் லைஃப்ல அப்போ நான் ஃபெயில் ஆனாலும் படத்துல அந்த காமடி ஹிட் அடிச்சு நான் பாஸ் ஆயிட்டேன். ரெண்டு தலைமுறையோடவும் நடிச்சாச்சு. இந்த 55 வயசுலேயும் ஐ யம் ஹாப்பி.”


“திரைப்படக் கல்லூரியின் முன்னாள் மாணவர் நீங்க. அதைப்பத்தி சொல்லுங்க”

“எனக்கு சொந்த ஊர் கும்பகோணம் பக்கத்துல தென்னூர் கிராமம்.  கடைக்குட்டிப் பையன் நான்.  சினிமா மேல எனக்கு இருந்த ஆசையைப் பாத்துட்டு எங்க அம்மா சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கையில கொடுத்து மெட்ராஸுக்கு அனுப்பி வெச்சாங்க. 1978-ல் அடையாறு திரைப்படக் கல்லூரியில் சீட் கிடைச்சுது. படிச்சிட்டு இருந்தப்பவே ஹீரோவா நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா எனக்கு ஆசை வரல. காமெடியும் குணச்சித்திரமும்தான் வொர்க் அவுட் ஆகும்னு முடிவு பண்ணி அதையெல்லாம் ரிஜெக்ட் பண்ணேன். படிச்சப்போ கிடைச்ச சினிமா வாய்ப்புகள்கூட அதுக்கப்புறமா எனக்கு கிடக்கலை.”

“ஆனந்தவிகடன் அலுவலகத்தில்கூட வேலை பார்த்தீங்க போலிருக்கே?”

“உண்மையைச் சொன்னா திட்ட மாட்டீங்கல்ல? படிச்சபிறகு சினிமாவுல வாய்ப்பில்லாம ஆட்டோ மொபைல் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். 100 ரூபாய்தான் சம்பளம். ஒரு வேளை சாப்பாடுதான் சாப்பிட முடிஞ்சுது. கார்ல வர கஸ்டமர்கள்கிட்டகூட சினிமா பத்தியே தொண தொணன்னு பேசிட்டு இருந்தேன். நீ இதுக்கு சரிபட்டு வர மாட்டேனு கடையோட ஓனர் கழுத்தைப் பிடிச்சு துரத்திட்டார். அப்புறம் ஆனந்த விகடன்ல சந்தா மற்றும் விநியோகப் பிரிவுல வேலைக்கு சேர்ந்தேன். அங்கே வந்தும் கொடுத்த வேலையை ஒழுங்கா பாக்காம விகடனுக்கு வர்ற கதைகளை எல்லாம் பிரிச்சுப் படிக்க ஆரம்பிச்சேன். அங்கயும் என்னோட தேடல் சினிமாவைப் பத்தியே இருந்துச்சு. அவங்களா எதுவும் சொல்றதுக்கு முன்னாடி நமக்கு இதுவும் சரிப்பட்டு வராதுனு முடிவுபண்ணி திரும்பவும் முழு மூச்சா சினிமாவைத் தேடி ‘மெரினா நாடகக் குழு’வுல சேர்ந்தேன்.

அதுக்கப்புறம்தான் முதல் முதலா ‘நான் சிகப்பு மனிதன்’ படத்துல ஆரம்பிச்சு நிறைய படங்கள்ல நடிச்சுட்டேன். ‘சின்னப் பூவே மெல்லப் பேசு’ படத்துல ‘பூரான் மீசை பூபதி’ கேரக்டர் எனக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுத்துச்சு.”

‘‘ரம்யாகிருஷ்ணன்கூட ரேப் சீன் நடிச்ச அனுபவம் பத்தி...?”

‘‘அனுபவமா? ஏடாகூடமான கேள்வியா இருக்கே? ‘புதிய சரித்திரம்’ படத்துல நான் வில்லனோட பையனா நடிச்சிருக்கேன். அந்தப் படத்துல தான் அந்த அம்மாவைத் துரத்திட்டுப் போய் ரேப் பண்ண முயற்சி பண்ற மாதிரி ஒரு சீன். ஷூட்டிங் நடக்குறதுக்கு முன்னாடி  ‘உங்க கையை காலா நினைச்சு கேக்குறேன்மா, தயவுசெஞ்சு மன்னிச்சுருங்க’னு அவங்ககிட்ட  மன்னிப்பு கேட்டேன். உடனே டைரக்டர் பதறிப்போய் ‘யோவ், உணர்ச்சி வசப்பட்டு ஒரிஜினலா ஃபீல் பண்ணிடாதப்பா... இது வெறும் சீன்தான்’னு தலையைத் தட்டி அனுப்பிவிட்டார். அதுக்கப்புறம் சீன்ல ராம்கி என்னை நிஜமாவே அடிச்சு துவைச்சதெல்லாம் தனிக்கதை.”

“உங்க வீட்டுக்கு பாம் வைக்கிற அளவுக்கு அப்படி என்ன பண்ணீங்க?”

“சின்னத்திரையில விஜய் டி.வி-யில் லொள்ளு சபா எனக்கு பேர் வாங்கிக் கொடுத்த நிகழ்ச்சி. அந்த டீம்ல இருந்த 4 பேரோட வீட்டுக்கும் ஒரு பார்சல் வந்துச்சு. சாமி பிரசாதமா இருக்கும்னு ஒருத்தர் அதை வாங்கி பீரோவுல வெச்சிட்டார். நான் அவசர அவசரமா அதை பிரிச்சுப் பாத்தேன். ‘இன்றுடன் உன் சாவு நிச்சயம். என் வெற்றி நிச்சயம்’னு அதுல எழுதி இருந்துச்சு. கைகால் வெலவெலத்துப் போய் போலீஸைக் கூப்பிட்டேன். 2 மோப்ப நாய்ங்க வந்ததும் பார்சலைப் பிரிச்சா, அதுல நாட்டு வெடிகுண்டு. அடப்பாவிங்களா....என் மேல எதுக்குய்யா இவ்ளோ காண்டுனு விசாரிச்சா, அவருக்கு லொள்ளு சபாவுல சான்ஸ் கிடக்கலைனு இந்த வேலையைப் பாத்தாராம். இப்பவும் விசாரணை கோர்ட்ல நடந்துட்டு இருக்கு.”

“சந்தானத்துக்கும் உங்களுக்கும் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க்-அவுட் ஆகுதே?”

“அவர் லொள்ளு சபாவுல இருந்தே எனக்கு நல்ல நண்பர். அவர்கூட 10 படங்கள் பண்ணியிருப்பேன். எல்லாமே நல்ல ஹிட். தொடர்ந்து நாங்க ரெண்டு பேரும் பட்டையைக் கிளப்பணும்னு ரசிகர்கள் சொல்லிட்டு இருக்காங்க. நாங்க உண்மையாகவே ஒருத்தருக்கொருத்தர் ஒரிஜினல் ஃப்ரெண்ட்ஸ். அதனாலதான் கெமிஸ்ட்ரியும் அள்ளுது.”

“30 வருடங்களுக்கும் மேல சினிமாவுல இருக்கீங்க. உங்க அடுத்தக்கட்ட ஆசை?”

“சின்னப்பசங்க எல்லாம் ‘டே....மிட்’ ‘டே....மிட்’னு இழுத்து இழுத்து  கூப்புடுறப்போ, ‘இஷ்க்...இஷ்க் அங்கிள்’ ‘பாவாடைச் சாமி அங்கிள்’னு கூப்புடுறப்போ, அவங்களைப் பாத்து கலகலன்னு சிரிக்கிற சந்தோஷம் இருக்கிறப்போ இதைவிட பெரிசா என்ன ஆசை இருக்கப் போகுது? இதுவரைக்கும் 300 படங்களுக்கு மேலேயும் 30 டி.வி சீரியல்லேயும் நடிச்சாச்சு.நாகேஷ், சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன், சுருளி இவங்க நகைச்சுவை  இயல்பா இருக்கும். நானும் அவங்களைப் போலவே பேர் எடுத்தா போதும்.”

ஆமாங்கண்ணே...எங்களுக்கும் இஷ்க் இஷ்க் என்றுதான் கேட்கிறது!

- பொன்.விமலா-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்