‘பிரகாஷ் ராஜிடம் ஒண்ணு சொல்லணும்!’’ -'விடுகதை' நீனா ...

'விடுகதை' படத்தின் கதாநாயகி நீனாவை நினைவிருக்கிறதா?
இயக்குநர் அகத்தியனின் இயக்கத்தில், 17 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'விடுகதை' படத்தில், வயதான கதாபாத்திரத்தில் வரும் பிரகாஷ் ராஜை, திருமணம் செய்துகொள்ளும் துடுப்பான இளம்பெண் கதாபத்திரம் ஏற்று சபாஷ் வாங்கிய நீனா... பெரியத் திரை, சின்னத் திரைகளையெல்லாம் விட்டு விலகி, இப்போது கடல் கடந்த தேசமொன்றில் 'நீனா ஹேப்பி அண்ணாச்சி' என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
செம ஜாலி மூடில் இருந்தவரிடம் ஒரு லைவ் சாட்.

''2004 மார்ச் 18&ம் தேதி கல்யாணம் ஆச்சு. அதுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவில் (மெல்பர்ன்) அவரோட செட்டில் ஆகிட்டேன். இப்பதான் கல்யாணம் ஆன மாதிரி இருக்கு. அதுக்குள்ள 11 வருஷம் எப்படிதான் போச்சுனு தெரியல. மெல்பர்ன் ரொம்ப அழகான ஊர். கணவர் வீட்டுல கிட்டத்தட்ட 35 வருஷத்துக்கு மேல மெல்பர்ன்ல இருக்காங்க. நார்த் இண்டியன் ரெஸ்டாரண்ட் நடத்திட்டு இருக்கோம். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? நானும் இந்த பிசினஸ்ல கணவரோட பங்கெடுத்துட்டு இருக்கேன். 

சொல்ல மறந்துட்டேன்... கணவர் பேரு செந்தில். முழுக்க அரேஞ்டு மேரேஜ்தான். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் நிறையவே லவ் பண்றோம். அவர் ரொம்ப லவ்லி பெர்சன். மெல்பர்ன் அழகோட, அவரோட காதலையும் சுகமா ரசிச்சிட்டு இருக்கேன். எங்களுக்கு 2 குட்டீஸ். பொண்ணு சோனியாவுக்கு 10 வயசு. பையன் சஞ்சய்க்கு 5 வயசு. ரெண்டு பேருமே துறுதுறு வாலுங்க. பசங்களோடயும், கணவரோடயும் விளையாடுறது போக டென்னிஸ் என்னோட பொழுதுபோக்கு.

இந்தியாவை நான் ரொம்ப மிஸ் பண்றேன். லீவு விட்டா போதும்... அப்பா இங்க வந்துடுவார்.
விடுகதை படத்துல நடிச்சப்ப என்னோட வயசு வெறும் 15. முதல் படமே என்னை தனிச்சு அடையாளப்படுத்துச்சு. இப்பவும் அகத்தியன் சார், அப்பா மாதிரியான அக்கறையோடதான் என்கிட்ட பழகிட்டிருக்கார். அவரோட 3 பொண்ணுங்களும் என்கூட இப்பவும் சகோதரிகளா பழகிட்டு இருக்காங்க.
தமிழ்ப்படங்கள் நிறைய பாக்குறேன். இப்ப உள்ள புதுமுக இயக்குநர்களும் நடிகர்களும் ரொம்பவே இயல்பா நடிச்சு அசத்துறாங்க. நடிகைகள்ல எல்லாருமே நான், நீனு போட்டி போட்டு நடிக்குறாங்க. திரும்பவும் நடிக்க வர்றதைப் பத்தி இப்போதைக்கு எந்த எண்ணமும் இல்ல. ஆனா, பிரகாஷ் சாரை பார்த்தால் ஒண்ணு சொல்ல ஆசைப்படுறேன்.
’சார், யூ ஆர் ஆஸம்’!

-பொன்.விமலா-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!