’அஜித்,விஜய் இருவரும் என் இதயத்தில் இருக்கிறார்கள்’ எஸ்.ஜே.சூர்யா சிறப்பு பேட்டி! | இசை, எஸ்.ஜே.சூர்யா, சத்தியராஜ், sathyaraj, isai, s.j.surya,

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (30/01/2015)

கடைசி தொடர்பு:12:08 (15/10/2015)

’அஜித்,விஜய் இருவரும் என் இதயத்தில் இருக்கிறார்கள்’ எஸ்.ஜே.சூர்யா சிறப்பு பேட்டி!

அஜித், விஜய் என இரு பெரும் துருவங்களின் சினிமா பயணத்தில் மைல் கல்லை உருவாக்கியவர். வித்தியாசமான கதை, இளைஞர்களை சுண்டி இழுக்கும் வசனங்கள், சீன்கள் என இப்போதும் இவருக்கு க்ரேஸ் குறையவில்லை. அப்படிப்பட்டவர் பத்து வருடம் கழித்து இப்போது 4 வருட கடும் உழைப்பிற்கு பிறகு தனது ‘இசை’ படத்தை முழுமையாக முடித்து ரிலீஸ் செய்யப்போகும் திருப்தியில் இருந்தார். டிக்கெட் புக்கிங்கும் முடிந்துவிட்டது என மனநிறைவோடு நமக்கு ஹாய் என்றார் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. நாமும் நம் ஹாயை போட்டுவிட்டு சில கேள்விகளையும் தட்டினோம்..

ஏன் இந்த பத்து வருஷம்?

சில காரணங்கள் , வேற இயக்குநர்களோட படத்துல நடிக்க போனேன். அது தப்பாயிடுச்சு. அந்த தவற இதுல சரி பண்ணி ஒரு நடிகனா நான் நிம்மதியா இருக்கேன். பல விஷயங்கள கத்துக்கணும்னு நினச்சேன். கத்துக்கிட்டேன். இன்னும் ரசிகர்கள் என்னை ஞாபகம் வெச்சுருக்காங்கன்னு நினைக்கும் போது ரொம்ப திருப்தியா இருக்கு. எல்லா டிக்கெட்டும் புக்காயிடுச்சு இதுவே எனக்கு கிடச்ச வெற்றி.

இசை’ படத்துக்கு ஏன் இவ்ளோ கேப்?

இந்தப் படத்துக்காக நானே இசையமைக்கணும்னு நெனச்சேன். அத கத்துகிட்டு நானே படத்துல பாட்டு மட்டுமில்லாம , பேக் க்ரவுண்ட் மியூசிக்கும் நானே செஞ்சுருக்கேன். ஈடுபாட்டோட கத்துக்கிட்டேன் இப்போ கை மேல பலன், நெறைய பேர் பாராட்டினாங்க.

 

நீங்களே மியூசிக் பண்ணதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் என்ன சொன்னார்?

என்னை நீங்க ஏன் மியூசிக் பண்ணக்கூடாதுனு கேட்டவரே அவருதான். ரொம்ப பாராட்டினார். அவர் மட்டுமில்ல நிறைய பேர் பாராட்டினாங்க. படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. இந்த படத்துக்கு ஏன் நானே மியூசிக் பண்ணேன்னு சில பேர் கேட்டாங்க. படத்தோட கதையே ஒரு இரு இசை கலைஞர்களோடதுதான். அந்த கேரக்டராவே வாழணும்னு நெனச்சேன் அதான் நானே மியூசிக்கையும் கையில எடுத்தேன்.

இசை’ என்ன சொல்லப்போகுது?

ஒவ்வொரு மனுஷனுக்குள்ளயும், கோபம், சந்தோஷம், எதிர்ப்பு, இப்படி எல்லாமே இருக்கு. அதுல பொறாமையும் இருக்கு. அந்த பொறாமைய எப்படி சொல்லலாம்னு நெனச்சேன். இரு விளையாட்டு வீரர்களா? அரசியல் வாதிகளா? என்னென்னமோ தோணுச்சு. ஆனா கடைசியா ஏன் இரு இசை கலைஞர்கள வெச்சு சொல்லக்கூடாதுன்னு நெனச்சேன். அதுலயும் பொறாமை என்ன நிலையாக்கும்னு மெஸேஜா இருக்கும் கண்டிப்பா அட்வைஸா இருக்காது. நாம யாரு மத்தவங்களுக்கு அட்வைஸ் சொல்ல. இப்போ ‘இசை’ உருவாகி ரிலீஸும் ஆயிடுச்சு.

உங்க படம்னாலே ரொமான்ஸ், கிளாமர் கொஞ்சம் தூக்கலா இருக்கே?

(சிரிக்கிறார்). என்னங்க மனுஷன் தியேட்டருக்கு வர்றதே சந்தோஷத்துக்காகத்தான் . அதுல ரொமான்ஸ், கிளாமர் இருந்தா சந்தோஷமா பாத்துட்டு போங்களேன். மலர் தோட்டமா? , முட்புதரானு கேட்டா மலரத்தான பாப்போம். அப்டிதான் சினிமாவுல ரொமான்ஸ், கிளாமர் ரெண்டும் மலர்த் தோட்டம் மாதிரி என்ஜாய் பண்ணுங்க.

ஏன் சாவித்திரி?

கண்டிப்பா சாவித்திரி தமிழ் சினிமாவுக்கு கிடச்ச பொக்கிஷம். அந்த பொண்ணு அப்டியே எனக்கும் பழைய நடிகை சாவித்திரிய நியாபகப் படுத்தினாங்க. அதான் பேராவே வெச்சுட்டேன். 124 பொண்ணுங்க அதுல தேர்வு செஞ்ச பொண்ணு. இதுக்கு மேல நீங்க பாத்து அந்த பொண்ண பத்தி சொல்லுங்க.

இசையோட இன்னொரு ஹீரோ பத்தி சொல்லுங்களேன்?

இந்த படத்துக்காக நான் வெயிட் பண்ணதுக்கு இன்னொரு ரீசன் இந்த வில்லன் பாத்திரத்துக்கான தேடல்னு கூட சொல்லலாம். இந்த கேரக்டருக்கு முதல்ல ரகுவரன் சாரத்தான் நெனச்சேன். இப்பவும் அவரு உயிரோட இருந்துருந்தா அவரத்தான் நடிக்க வெச்சுருப்பேன். அப்பறம் பிரகாஷ்ராஜ் சார். சில காரணங்களால அவரும் இல்லாம இப்போ சத்யராஜ். அவரு என்ன மனுஷங்க. இவரு வில்லனா, கேரக்டர் ரோல் பண்றாரா, இப்படி எதுமே சொல்ல முடியாது. எல்லாமுமா அவரு நடிச்சுருக்காரு. ஒரு மனுஷன் தனக்கான அங்கீகாரத்த இழந்து நிக்கும் போது அந்த ஆக்ரோஷம், எப்படி உருவாகும். அத சத்தியராஜ் சாரால மட்டுந்தான் பண்ண முடியும். தம்பி ராமையா வைரமுத்து மாதிரி தமிழ் பேசுற ஒரு சர்ச் ஃபாதர பாத்துருக்கீங்களா? அவருக்கு என்ன ஒரு பாடி லாங்குவேஜ். அப்படி பண்ணியிருக்காரு. படம் பாருங்க கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்.

 

இது இளையராஜா, .ஆர்.ரஹ்மான் கதைனு ஒரு டாக் இருக்கே?

அவுங்க ரெண்டு பேரும் நல்லா மியூசிக் போட்டுட்டு இருக்காங்க. நல்ல நிலமையில இருக்காங்க. ஆனா இந்த கதை ஒருத்தர் இன்னொருத்தர் இசைய முடக்குவாங்க, இவர் அவரோட புகழ முடக்குவாரு. ஒரு கட்டத்துல என்னால பியானோவதொட முடியாத நிலைக்கு கூட நான் ஆளாவேன். அப்படியா இப்போ அவுங்க ரெண்டு பேரும் இருக்காங்க.

அஜித், விஜய் என்ன சொன்னாங்க?

எல்லாரும் அஜித் ,விஜய்க்கு நான் லைஃப் கொடுத்ததா சொல்றாங்க. எனக்குதான் அவங்க ரெண்டு பேரும் வாழ்க்கை குடுத்துருக்காங்க. அதுலயும் விஜய் அவ்ளோ பெரிய ஹீரோ இன்னும் எனக்காக அவர் மனசுல இவ்ளோ பெரிய இடம் கொடுத்திருப்பார்னு நான் நெனைக்கவே இல்ல. இத்தனை வருஷம் கழிச்சு ஒரே வார்த்தைல நான் 10 வருஷம் சினிமாவுல இல்லைங்கறத மக்கள் மறக்குற மாதிரி செஞ்சுட்டாரு. நான் கடந்து வந்த பாதைக்கு முதல் விதை போட்டவரு அஜித். நல்ல மனுஷன் இப்போ கொஞ்சம் நாளா தன்ன தனிமை படுத்திட்டாரு. அவரு போன் கூட யூஸ் பண்றதில்லை. மெயில் அனுப்பியிருக்கேன் என்னோட டிரெய்லர அஜித் பாத்துருப்பாருன்னு நம்பறேன்.

அஜித் விஜய்யொட அடுத்து ஒரு படம் எதிர்பார்க்கலாமா?

நாம நெனைக்கறது எல்லாம் நடக்கறது இல்லை. மேல இருக்கறவன் என்ன கணக்கு போட்டு வெச்சுருக்கானு தெரியல. அப்டி உண்மையாவே ஒரு வாய்ப்பு இருந்தா கண்டிப்பா பண்ணுவேன். அஜித் ,விஜய் இருவரும் என் இதயத்தில் இருக்கிறார்கள்.

இயக்குநர் , நடிகர், இசையமைப்பாளர் அடுத்து எஸ்.ஜே.சூர்யா என்ன பண்ணப்போறார்?

இதையே கண்டினியூ பண்ண போறேன். அவ்ளோதான்.

எப்படி இவ்ளோ சின்ன கேப்ல மியூசிக்க கத்துக்கிட்டீங்க? உங்க குரு யாரு?

நான் எப்படி இசையை கத்துகிட்டேனு ‘இசை’ படத்துலயே சீன் வரும் கண்டிப்பா அந்த சீன ரசிப்பீங்க. எனக்கு குரு நெறையா பேர் இருக்காங்க. யார் யார் கிட்டருந்தெல்லாம் மியூசிக் கத்துகிட்டேன்,. எதுல இருந்தெல்லாம் சூர்யா மியூசிக் எடுத்துருக்கானு நீங்களே பாருங்க.

இப்போல்லம் ஒரு படம் ரிலீசாகி அடுத்த ஷோ ஆரம்பிக்கிறதுக்குள்ள ரிசல்ட் தெரிஞ்சுடுதே, இந்த வளர்ச்சிய எப்படி பாக்குறீங்க?

ஆரோக்கியமான விஷயம். காத்து எப்படி யாருக்கும் சொந்தமில்லையோ அப்டிதான் கருத்தும் யார் வேணும்னாலும் அவங்க கருத்த சொல்லலாம். நல்ல வளர்ச்சி. ரசனைங்கறது மனுஷனுக்கு மனுஷன் வேறுபடும். அவங்கவங்க கருத்த பதிய வைக்க ஒரு இடம் இருக்குன்னா அத வரவேற்கலாம். அதே சமயம் உலகம் நல்லா இருக்கு நம்ம மனசு எப்டிங்கறத பொருத்துதான் அந்த உலகம் நமக்கு நல்லதாவும் ,கெட்டதாவும் அமையறது.

காப்பி, இன்ஸ்பிரெஷன், கதைத் திருட்டு இப்படி விதவிதமான சிக்கல்கள் இப்போ சினிமாவுல இருக்கே, எப்படி உங்க ’இசை’ படத்தோட கதைய ரிலீஸ் பண்ணீங்க?

இசை’ படத்தோட ஆரம்பத்திலேயே கதைய சொல்லிட்டேன். ஏன் இந்தாங்க என்னோட அடுத்த படத்தோட கதையும் சொல்றேன். படத்துக்கு பேரு ஏழுமலை சித்ரா. கதை திருநெல்வேலி பையன் ஏழுமலை, அமெரிக்காவுல இருக்கற என்.ஆர்.ஐ பொண்ணு சித்ராவ, எப்படி லவ் பண்ணி கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணினாங்கறதுதான் கதை. யார் வேணும்னாலும் என் கதைனு கேஸ் போடுங்க . என்ன வேணும்னாலும் பண்ணிக்கங்க. ஏன் படத்த நான் ரிலீஸ் பண்ணுவேன்.

எப்போ பாஸ் உங்களுக்கு கல்யாணம்?

 (திரும்ப சிரிக்கிறார்). நான் கல்யாணம் பண்ணியிருந்தா இப்படி மியூசிக் கத்துகிட்டு , ஒரு ஸ்டூடண்டா , இயக்குநரா, தயாரிப்பாளரா, நடிகனானு வந்துருப்பனா? அதுக்காக கல்யாணம் தப்புன்னு சொல்லல. அது என் லைஃப்க்கு தேவைப்படல. சினிமா என்ன முழுசா பாத்துக்குது. இந்திய அளவுல ஒரு பெரிய சினிமா கலைஞனா , தொழில் ரீதியாவும் முன்னேறணும், பேரு வாங்கணும் அதுக்கப்பறம் தெரியல இப்ப வரைக்கும் யாரும் இல்ல, இனிமே இருக்குமான்னு பாப்போம். இப்படி ஒரு கொஸ்டீன் கேட்டுட்டீங்களே..

இசை’ படம் பாருங்க. உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும். எனக் கூறி நம்மை வழியனுப்பி வைத்தார்நாமும் ’இசை’க்கு வாழ்த்துகளை கூறிவிட்டு விடைபெற்றோம்.

-ஷாலினி நியூட்டன் - 

படங்கள்: க.பாலாஜி 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்