“மறுபடியும் படம் தயாரிப்பேன்!” | interview of winner movie producer,

வெளியிடப்பட்ட நேரம்: 16:12 (02/04/2015)

கடைசி தொடர்பு:16:12 (02/04/2015)

“மறுபடியும் படம் தயாரிப்பேன்!”

மீபத்தில் வெளியான ‘கள்ளப்படம்’ படத்தில் ஒருகாலத்தில் சினிமா தயாரிப்பாளராக இருந்து, இப்போது தெருவில் திரிந்து கொண்டிருப்பவராக நடித்தவரின் பெயர் ராமச்சந்திரன். படத்தைப்போலவே நிஜத்திலும் ‘வின்னர்’ என்ற ஹிட் படத்தைத் தயாரித்து, பிறகு பணத்திற்கு வழி இல்லாமல் ஹோட்டலில் வேலை பார்த்தவர். சில பல முயற்சிகளுக்குப் பிறகு இப்போது நடிகர் ஆகிவிட்டவர், “மீண்டும் தயாரிப்பாளரும் ஆகப்போகிறேன்” என்கிறார் உற்சாகமாக.

“80கள்ல எங்க ஊர் தூத்துக்குடிப் பக்கம் நடந்த கமல், பாரதிராஜா சாரோட படங்களின் ஷூட்டிங்கைப் பார்க்குறதுல எங்களுக்கு அவ்வளவு ஆர்வம். கொஞ்சம் விபரம் தெரிஞ்ச வயசுல எங்க ஏரியா கமல் ரசிகர் மன்றத்துக்குத் தலைவர் ஆனேன். அப்பவே சினிமா மேல ஆசை வந்துச்சு. அப்புறம் சென்னைக்கு வந்து சம்பாதிச்சு, ஏற்கெனவே இருந்த சொத்து, நிலத்தை வித்து ஒரு சினிமா எடுக்கணும்னு ஆசைப்பட்டு ஆரம்பிச்சதுதான் ‘வின்னர்’ படம். 2 கோடி பட்ஜெட்ல முடிச்சிருக்கவேண்டியது.

சில பிரச்னைகளால நாலு கோடியை நெருங்கிடுச்சு. ஆனா, அப்போதைய நிலவரப்படி அந்த படத்துக்கு மதிப்பு ரெண்டு கோடிதான்னு வினியோகஸ்தர்கள் கையை விரிச்சுட்டாங்க. என்ன பண்றது? சினிமாவுல இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்சுதான் வர்றோம். அப்புறம் யாரைக் குத்தம் சொல்லி என்ன பண்ண? இப்பவும் டி.வி.யில் ‘வின்னர்’ படக் காட்சிகள் போட்டா, ரசிகர்கள் விழுந்து சிரிச்சுப் பார்க்கிறாங்க. ஆனா, எங்க வீட்டுல மட்டும் அந்தப் படம் போட்டா டிவியை ஆஃப் பண்ணிட்டு எந்திருச்சுப் போயிடுவாங்க!” - ஃப்ளாஷ்பேக்குடன் ஆரம்பித்துத் தொடர்ந்தார் ராமச்சந்திரன்.

“அப்புறம் நண்பரோட ஹோட்டல்ல ரிசப்ஷனிஸ்ட்டா வேலைக்குச் சேர்ந்துட்டேன். அந்தக் கஷ்டகாலத்துல  எனக்கு உதவியா இருந்தது தயாரிப்பாளர் சங்கத்துல இருந்த நண்பர்களும், என் சொந்தக்காரங்களும்தான். படத்துக்காக பலபேர்கிட்ட கடன் வாங்கியிருந்தாலும், எல்லோரும் ‘இவன் எப்படியாவது ஜெயிச்சிடு வான்’னு நம்பிக்கை வெச்சிருந்தாங்க. தவிர, எனக்கும் சினிமாவை விட்டுட்டு வேற தொழில் பார்க்கணும்னு தோணலை. அதனால, எந்த சினிமாவுல முதலாளியா இருந்தேனோ, அதே சினிமாவுல தொழிலாளியா வாழ்க் கையை ஆரம்பிக்கலாம்னு என் புகைப்படங்களை எடுத்துக்கிட்டு நடிக்க வாய்ப்பு தேடிக் கிளம்பிட் டேன். தயாரிப்பாளரா இருந்தப்போ இருந்த அத்தனை நண்பர்களும் எனக்கு உதவி பண்ணத் தயாரா இருந்தாங்க.

 ‘அரும்பு மீசை குறும்புப் பார்வை’ படத்துல நடிகரா அறிமுகமானேன். சின்னச் சின்ன கேரக்டர்களா இருந்தாலும் 70 படங்க ளுக்கும் மேல நடிச்சுட்டேன். நான் தயாரிப்பாளரா இருந்தவன்ங்கிறதால எந்த ஒரு தயாரிப்பாளர்கிட்ட சம்பளம் வாங்கும்போதும் ‘இவர் போட்ட பணம் கிடைச்சுடணும்’னு வேண்டிக்குவேன். ஏன்னா, தயாரிப்பாளார்களோட நிலைமை அப்படி!’’ என்று விரக்தியாகப் பேசிக்கொண்டிருந்தவர், சட்டென உற்சாக மூடுக்கு மாறுகிறார்.

“நான் பேசுறதைக் கேட்டா ‘இனிமே நான் தயாரிப்பு பக்கமே தலை வெச்சுப் படுக்க மாட்டேன்’னு நினைச்சிருப்பீங்களே? அதான் இல்லை. நடிப்பு தவிர, சைடு கேப்புல ரியல் எஸ்டேட் பிசினஸும் பண்ணிக்கிட்டு இருக்கேன். முன்னெல்லாம் படத் தயாரிப்புல இருந்த சூட்சமம் தெரியாமப் போச்சு. இப்ப அப்படி இல்லை. இதுதான் படம் தயாரிக்கிறதுக்கு சரியான நேரம்னு நினைக்கிறேன். ஆனா, படத்துக்குப் பூஜை போடுறதுல இருந்து ரிலீஸ் பண்றவரைக்கும் நம்ம கையில தேவையான பணத்தை வெச்சுக்கிட்டுதான் படம் தயாரிக்கணும்னு பார்க்கிறேன். அதுக்கான நேரம் கண்டிப்பா வரும். மீண்டும் நான் தயாரிப்பாளரா ஒரு ரவுண்டு வருவேன். ஏன்னா, முதல் படம் பண்ணப்போ ‘சினிமாவைவிட ஒரு மோசமான தொழில் உலகத்துல கிடையாது’னு தோணுச்சு. இப்போ ‘சினிமாவைவிட ஒரு நல்ல தொழில் உலகத்துல எதுவுமே கிடையாது’னு தோணுது!’’ செமத்தியான பன்ச் டயலாக்குடன் முடிக்கிறார் ராமச்சந்திரன்.

- கே.ஜி.மணிகண்டன்
படங்கள் : ப.சரவணக்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்