’சினிமாங்கிறது சாமி மாதிரி’ ’உண்மையாக உழைத்தால் வளரலாம்’ - சமுத்திரகனி சிறப்பு பேட்டி | Special interview with samuthirakani

வெளியிடப்பட்ட நேரம்: 16:14 (03/04/2015)

கடைசி தொடர்பு:16:14 (03/04/2015)

’சினிமாங்கிறது சாமி மாதிரி’ ’உண்மையாக உழைத்தால் வளரலாம்’ - சமுத்திரகனி சிறப்பு பேட்டி

லக்கியம் , சமூகம் , நட்பு  , கொஞ்சம் தூக்கலாக சினிமா ! என எதுவும் பேசலாம் ,  இயக்குனர் சமுத்திரகனி அவர்களிடம் . பேசினோம்.

சமீபத்தில் அதிகமாக நடிகர் அரிதாரம் பூசியிருக்கீங்களே சார் ?

      அது தானாக நடக்குது . தம்பி பொன்ராமின் “ ரஜினி முருகன் “ படத்தில் ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கான கேரக்டர்  , வெங்கட் பிரபுவின் மாஸ் ஒரு கமர்ஷியல் வில்லன் .  ஒரே மாதிரி கேரக்டர் பண்ணாம வெவ்வேறு தளங்களில் நம்முடைய பதிவு இருக்கவேண்டுமுன்னு ஆசைப்பட்டேன் . அது கிடைக்கையில் தொடர்ந்து பயணம் செய்கிறேன் . அதோடு சுசீந்திரன் இயக்கத்தில் விஷாலுடன் ஒரு படத்துல நடிக்கிறேன் . விமலுடன் காவல் , வெற்றி மாறன் இயக்கத்தில் விசாரணை ஆகிய படங்கள் முடிக்கப்பட்டு ரிலீஸூக்காக வெயிட்டிங் . இதுல விசாரணை படம் கனடா திரைப்பட விழாவுக்கும் அனுப்பப்பட்டிருக்கு .

உங்களுடைய நண்பர் குருசாமி அவர்களின் குடும்பத்தை சந்திச்சீங்களா ?

       நேற்று வீட்டுக்கு போயிட்டு வந்தேன் .  “ அன்னைக்கு வந்தப்ப என் மகனை மனசுல நினைச்சிருந்ததால உன்னை சரியாகவே பாக்கலப்பா . இன்னைக்குதாப்பா உன் முகத்தை பாக்குறேன்னு  “ அப்பா சொன்னார் . அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க . தம்பி ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படிச்சிட்டு இருக்கார் . வருகிற ஆகஸ்ட் 23 ஆம் தேதி  அவருக்கு எக்ஸாம் .

 

 

சமீபத்தில் நீங்கள் படித்த புத்தகங்களில் உங்களுக்கு பிடித்தது ?

       எட்கர் தஸ்கன் எழுதிய “ தென்னிந்திய குலங்களும் குடிகளும் “ என்ற ஆய்வுக்கட்டுரை  தஞ்சை பல்கலைக்கழக்கத்தில் போடப்பட்டுள்ளது . என்னுடைய ஒரு படத்திற்கான சில விசியங்களுக்காக புத்தகத்தை வாசித்தேன் . அய்யா சிவனடிகள் எழுதிய “ இந்திய  சரித்திர களஞ்சியம் “ , சு.வெங்கடேஷனின் காவல் கோட்டம் ஆகிய புத்தங்களை வாசிக்கிறேன் . என்னுடைய படமான கிட்ணாவும் கூட   சு. தமிழ்ச்செல்வி எழுதிய “கீதாரி “ என்ற நாவல் தான் . அவரிடம் அனுமதி வாங்கி நானே திரைக்கதை எழுதி இயக்குகிறேன் .

கலை என்ற ஒரே குடையின் கீழ்தான் இலக்கியங்களும் , சினிமாவும் இருந்தாலும் இரு தளங்களுக்கும் இடையில் நீண்ட இடைவெளி இருப்பது போன்று தோன்றுகிறதே ? உதாரணமாக மாதொருபாகன் நூலுக்கு எதிராக எதிர்ப்பு வந்தபோதும் சரி , விஸ்வரூபம் , தலைவா , கத்தி என கொம்பன் வரை யிலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்ததாகக்கூட செய்திகள் வரவில்லையே ?

இடைவெளி இருப்பதுபோன்று பிம்பம் இருக்கிறதே தவிர அது உண்மையில்லை . நீங்கள் வருவதற்கு முன்பு காமுத்துரை அய்யா வந்தார் . கொஞ்சம் நேரத்துல ஆறு கதைகள் வரைக்கும் பேசிட்டோம் . இருதரப்பினருக்கும் இடையில ஒரு முழுமையான ஆதரவு இருக்கு . சில பிரச்சனைகள்  சாதிரீதியாக எடுத்துச்செல்லப்படும் போதுதான் அது சிக்கலாகிவிடுகின்றன . இருந்தாலும் ஒரு படைப்பாளிக்கு பிரச்சனை என வரும்போது இன்னொரு படைப்பாளி கூட நிற்பான் .

நட்பு குறித்த புதிய அலையை ஏற்படுத்திய சசிகுமார் – சமுத்திரகனி நட்பு பற்றி  ?

      நிஜமான நட்பு . இறைவன் எல்லாருக்கும் நேரிடையா உதவி பண்ண முடியாது  . சில நபர்களின் மூலமா உதவி செய்கிறார் . அதுதான் நட்பு . அது நல்ல தளத்தில் இயங்கும்போது சுகமாக இருக்கும் . நட்புங்கிறது தினமும் காலையில எந்திருச்சு புதுப்பிக்கிறது கிடையாது . சில நேரங்கள்ல நானும் சசியும் ஒரு மாசம் , ஆறு மாசம் வரைக்கும்கூட பேசாம இருப்போம் . மறுபடியும் பேசுறப்ப , ஏற்கனவே விட்ட இடத்துல இருந்து பேசுவோம் .எங்களுக்கிடையிலான  ஒரே அலைவரிசை அதுக்கு காரணம் .

உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது மாதிரி ஆபாசம் சிறிதுமில்லாத , சாதிய உணர்வுகளை தூண்டாத , இரட்டை வசன வார்த்தைகல் இல்லாத சினிமா தமிழ் சாத்தியமா சார் ?

      நிச்சயமாக ! பாலா அண்ணன் படங்களை உதாரணமாக சொல்லலாம் . அதோடு சசி குமார் படங்கள் , நம்முடைய கிராமத்து சாயல் படங்கள் அப்படி வருகின்றனவே . நீதிமன்றம் தெரிவித்துள்ள மாதிரியான படங்கள் தமிழில் நிச்சயமாக சாத்தியம் .

இன்றைய சினிமா ?

      எப்பவும் சினிமாங்கிறது சாமி மாதிரி , உண்மையாக உழைத்தால்  வளரலாம் . நிஜமான உழைப்பை போட்டவர்கள் இன்று உயர்ந்திருக்கிறார்கள் . சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் உழைச்சதுனால தான் இந்த நிலைக்கு வந்துருக்காங்க . உழைப்பு நேர்மையான இருந்தா அதுக்கான பலன் நிச்சயம் கிடைக்கும் !


உ.சிவராமன் & ம. மாரிமுத்து (மாணவப்பத்திரிக்கையாளர் )

படங்கள் : வீ. சக்தி அருணகிரி . 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்