நான் வித்யா விஜய் | National Awarded hero vijay

வெளியிடப்பட்ட நேரம்: 13:43 (06/04/2015)

கடைசி தொடர்பு:13:44 (06/04/2015)

நான் வித்யா விஜய்

ந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார் கன்னட நடிகர் சன்சாரி விஜய். ஆனால் அவர் நடித்த படம், ஒரு தமிழரின் வாழ்க்கை வரலாறு. எழுத்தாளர், வலைப்பதிவாளர், நாடக நடிகர் என்று பன்முகம் கொண்ட திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யாவின் ‘நான் சரவணன் வித்யா’ என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து உருவான ‘நான் அவனல்ல அவளு’ என்ற படத்தில் நடித்த விஜய்க்கு இந்த விருது.

“சிறந்த நடிகருக்கான ரேஸில் என்னோடு அமீர்கான், மம்முட்டி போன்ற ஜாம்பவான்களும் இருந்தார்கள் என்பதும் கடைசியில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்பது என்னைப் புல்லரிக்கச் செய்கிறது” என்று வியப்புடனே தொடங்கினார் சன்சாரி விஜய்.

“கர்நாடகாவில் சிக்மகளூருக்கு அருகே 50 குடிசைகள்கொண்ட சாதாரண கிராமத்துப் பையன் நான். சின்ன வயசிலே அப்பா, அம்மா இறந்து போய்விட்டார்கள். பெங்களூர் வந்து, கிடைத்த சின்னச்சின்ன வேலைகளைச் செய்தேன். ஒரு சிலர் நான் படிக்க உதவினார்கள். பள்ளிப்படிப்பு முடித்து ஸ்காலர்ஷிப்பில் இன்ஜினீயரிங் சீட் கிடைத்தது. கல்லூரிக் காலத்தில் மேடை நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கல்லூரி முடித்ததும் தனியார் கல்லூரியில் லெக்சரராக வேலை பார்த்துக்கொண்டே மேடை நாடகங்களிலும் நடித்தேன். 2011-ல் நடிகரும் இயக்குநருமான ரமேஷ் அரவிந்த்தின் படமான ‘ரெங்கப்ப ஹோப்டானே’வில் ஒரு சின்ன ரோல் கிடைத்தது. அதுதான் என் சினிமா என்ட்ரி.

அதற்குப் பிறகு மற்ற டைரக்டர்களிடம் நானாகவே போய் அறிமுகமாகி, அவர்களுக்குத் தொடர்ந்து எஸ்.எம்.எஸ் அனுப்பி சான்ஸ் கேட்பேன். சில பேர் சலித்துக்கொள்வார்கள். சில பேர் ‘மைண்ட்ல வெச்சிருக்கேன். கூப்பிடுறேன்’ என்பார்கள். அப்படி கிடைத்ததுதான் ‘ஹரிவு’ என்ற படத்தின் கேரக்டர். இந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது ஒரு சந்தோஷம் என்றால், ‘ஹரிவு’ படத்துக்கு சிறந்த மாநில மொழிப் படம் கிடைத்தது இரட்டிப்பு சந்தோஷம்.

‘நான் அவனல்ல அவளு’ படத்துக்காக லிவிங் ஸ்மைல் வித்யாவின் புத்தகத்தைப் படித்தேன். படிக்கப் படிக்க என்னையறியாமல் விம்மி அழுதேன். ‘வாழ்க்கையில் நம்மைப் போலவே துயரம் நிறைந்த மனிதர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள்’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இந்தப் படம் திருநங்கைகளின் வலியையும் வேதனையையும் பார்வையாளர்களிடம் பதிவுசெய்யும்.

என்னுடைய இந்த கேரக்டரைக் கேள்விப்பட்ட பிரகாஷ்ராஜ் ‘உன் சமையலறையில்’ படத்தில் என்னைத் திருநங்கையாக நடிக்கவைத்தார். முதன்முதலாகத் தமிழ்ப் படத்தில் நடித்தேன். தொடர்ந்து தமிழ்ப் படங்கள் கிடைத்தால், அதைவிட சந்தோஷம் எதுவுமே கிடையாது. தேசிய விருதுக்குப் பிறகு நான்கைந்து இந்திப் பட வாய்ப்புகள் வந்துள்ளன. தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட காலக் கனவு. ஷங்கர், முருகதாஸ் இருவரும் என் ஆதர்ச இயக்குநர்கள். என் மானசீக குருவாக நான் நினைக்கும் பாரதிராஜாதான் என்னை சிறந்த நடிகனாகத் தேர்தெடுத்தார் என்பதைவிட, என்ன பெரிய வரம் கிடைத்துவிடப் போகிறது?’’ என்று நெகிழ்கிறார்.

இந்தக் கதையின் அசல் நாயகி ‘லிவிங் ஸ்மைல்’ வித்யாவிடம் பேசினேன். 

“என்னுடைய ‘நான் சரவணன் வித்யா’ புத்தகத்தை சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியை  தமிழ்ச்செல்வி மொழிபெயர்த்து பெங்களூரில் வெளியாகும் பிரபல நாளேடான ‘கன்னட ப்ரபா’வின் ஞாயிறு பதிப்பில் தொடராக எழுதினார். அது பின்னர் பிரகிருதி பவுண்டேஷன் நிறுவனத்தால் ‘நான் அவனல்ல அவளு’ என்கிற பெயரில் நாவலாக வெளியாகி, சிறந்த மொழிமாற்ற நாவலுக்கான சாகித்ய அகாடமி விருதும் பெற்றது. இயக்குநர் லிங்கதெவரு என்னைத் தொடர்புகொண்டு படமாக எடுக்க அனுமதி கேட்டார். ஒரு திருநங்கையின் துயரத்தை அழுத்தமாகப் பதிவுசெய்த லிங்கதெவருக்கும் நடித்த விஜய்க்கும் நன்றி என்ற ஒரு சொல் போதுமா என்ன?

ஒரு பக்கம் இந்த விருதால் மகிழ்ச்சி என்றாலும், திருநங்கைகள் குறித்த சமூகத்தின் பார்வை முழுவதுமாக மாறும்போதுதான் மனம் நிறைவாகும்” என்கிறார் வித்யா!

- செந்தில்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்