Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிக்ஸ்பேக் சீக்ரெட் சொல்லும் அதர்வா!

மிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக அறிமுகம் ஆனவர்தான். ஆனால் 'பரதேசி’ புரட்டிப் போட்டது. மூன்றாவது படத்திலேயே சின்சியர் சிகாமணியாக உழைப்பைக் கொட்டி, தற்போது 'ஈட்டி’ படத்துக்காக பாலிவுட் ஹீரோக்கள் ஸ்டைலில் உடலைச் செதுக்கி சிக்ஸ்பேக்குக்கு மாறிய ஹாட் அண்ட் ஸ்வீட் ஹீரோ அதர்வா.

'வறுமையில் வாடிய ஒல்லிக்குச்சி 'பரதேசி’ ராசா, 'ஃபிட் அன்ட் டைட்’ 'ஈட்டி’ வீரனானது எப்படி?'

'நான் தீவிரமான சாப்பாட்டு ராமன். ஆனா, பரதேசி’ படத்தில் நடிக்கிறதுக்காக, என்னை நானே மாத்திக்கிட்டேன். ஆரம்பத்துல ரெண்டு மூணு நாள் ஒழுங்கா சாப்பிடாம, ரொம்பக் கஷ்டமா இருந்தது. ஆனா சினிமா  மீது எனக்குத் தீராத தாகம். அதனால் பிரியாணியில் ஆரம்பிச்சு, பிடிச்ச பல விஷயங்களைத்் தியாகம் செஞ்சேன். அந்தப் படத்தின்  கிளைமாக்ஸ் காட்சிகளில் நடிக்கிறப்போ, ரொம்பவே ஒல்லியாகிட்டேன். அதுக்கப்புறம், ஈட்டி’ ப்ராஜெக்ட்டுக்குத் தடகள வீரனாக நடிக்கணும், உடம்பை மெருகேத்தணும், செம  ஃபிட்டா இருக்கணும்.  ரெண்டு மாசம் நல்லா சாப்பிட்டு உடம்பைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்தேன். இதுக்காக, என்னோட தினசரி வேலைகள், உணவு, வொர்க்அவுட்ஸ் எல்லாத்தையும் தலைகீழா மாத்தினேன். இப்படியே உடம்பை வெச்சுக்கிறது ரொம்பப் பிடிச்சிருக்கு.'

'உங்கள் தினசரி மெனு என்ன?'

'தினமும் காலை 4.45 மணிக்கு எழுந்திடுவேன்.  2 லிட்டர் தண்ணீர் குடிப்பேன்.  அப்புறம் வொர்க் அவுட்ஸ்.  7  மணிக்கு கொஞ்சம் பழங்கள், வேகவைத்த முட்டையின் வெள்ளைப் பகுதியை தேவையான அளவு சாப்பிட்டுட்டு ஷூட்டிங் போயிடுவேன். ஷூட்டிங்கின் இடையிடையே எனர்ஜி தேவைப்படும். அப்பப்போ ஜூஸ் குடிப்பேன். ஷூட்டிங் இல்லாத நாட்களில் வொர்க் அவுட்ஸ் செய்வேன். அப்போ வைட்டமின்சி உணவு அதிகம் தேவை என்பதால்,  ஆரஞ்சு ஜூஸ், இல்லைன்னா லெமன் ஜூஸ் குடிப்பேன்.  வேக வெச்ச மீன்  காய்கறிகள் மட்டும்தான் என் மதியஉணவு. சாயங்காலம் ஓட்ஸ், கொஞ்சம் பழங்கள்... ராத்திரி மசாலா தடவாத சிக்கன் அல்லது  மீன் எடுத்துப்பேன். நைட் 7 மணிக்கெல்லாம் சாப்பிட்டுடுவேன். ராத்திரி உணவு சாப்பிட்டு, உடனே தூங்கினா வெயிட் போடும். அதனால் டின்னர் விஷயத்துல நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.'

'சிக்ஸ்பேக் ஆரோக்கியமானது இல்லை என்கிறார்களே?'

'என்னைப் பொறுத்தவரை சிக்ஸ்பேக் வெச்சுக்கிறதால் உடலுக்கு எந்தத் தீங்கும் இல்லை. பாலிவுட்டிலும் ஹாலிவுட்டிலும் சிக்ஸ்பேக் வெச்சுக்கிறவங்களுக்கு இதுவரைக்கும் எந்தப் பிரச்னையும் வந்ததே இல்லை. எந்த ஒரு விஷயத்துக்குமே கால அவகாசம் தேவை. அதை விட்டுட்டு மூணு மாசத்துல சிக்ஸ்பேக் கொண்டுவர்றதும், மிகக் கடுமையான வொர்க்அவுட்ஸ், மாத்திரைகள், ஸ்டீராய்டு எடுத்துக்கறதுனு தவறான முறைகளைக் கடைபிடிப்பவர்களுக்குத்தான் பிரச்னையே.எனக்கு சிக்ஸ்பேக் கொண்டுவர்றதுக்கு ஒரு வருஷத்துக்கும் மேல ஆச்சு. படிப்படியா ஒவ்வொரு நிலையையும் முறையாக கடைப்பிடிச்சுதான் கொண்டுவந்தேன். அதுக்கான வொர்க்அவுட்டில் இருக்கும்போது அடிபட்டுக் காயம் வந்துச்சுன்னா, உடனே ஆறாது. அதனால் முகத்தில் ஆரம்பிச்சு கால் வரைக்குமே காயம்படாமக் கவனமா இருக்கணும்.

சிக்ஸ்பேக் வைக்க கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கு. இது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. காலையில் எந்திரிச்சு தினமும் வொர்க் அவுட் செஞ்சே ஆகணும்னு மனசு சொல்லுது. சிக்ஸ்பேக் வெச்சிருக்கிறதுன்னா தண்ணியை குறைவா குடிக்கச் சொல்வாங்க. ஆனால், தினமும் நான் 4 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிப்பேன். அதை வொர்க் அவுட்டில் சரிக்கட்டிடுவேன். சிக்ஸ்பேக் வெளியே தெரியும்படி எடுக்கப்போற சீனுக்கோ அல்லது போட்டோ ஷூட்டுக்கோ மட்டும் வயிற்றில் ஷார்ப்நெஸ் தெரியணுங்கிறதுக்காக, அதற்கேற்ப ஒரு வாரம் கொஞ்சம் கஷ்டப்பட்டு டயட்ல இருப்பேன். தண்ணீர் குடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைச்சுக்கிட்டு, கடைசி 24 மணி நேரத்துக்கு தண்ணீர் குடிக்காமலேயே இருப்பேன்.  ஷூட் முடிஞ்சிடுச்சுன்னா, மெள்ள மெள்ளப் பழைய நிலைக்கு வந்திடுவேன்.

ஒரு வருஷம் கஷ்டப்பட்டும் இஷ்டப்பட்டும் வெச்ச சிக்ஸ்பேக்கை நான் கலைக்க மாட்டேன். ஏன்னா, வேணுங்கிறப்ப வெச்சிக்கிறதும், வேணாங்கிறப்ப கட்ஸை’ கலையவிட்டுட்டும் இருந்தால்,  உடம்பு வீணாப்போகும். நாம கலக்குவோம் பாஸ்!'

இளைஞர்களுக்கு அதர்வாவின் டிட்பிட்ஸ்

 ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள். நமது உடல் நன்றாக இருந்தால் தான் எதையுமே சாதிக்க முடியும்.

உங்க உடலுக்கு எது செட்டாகும், எந்த வொர்க் அவுட்ஸ் கரெக்ட் என்பதை பயிற்சியாளிடம் ஆலோசனை பெற்று நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

சிக்ஸ்பேக் கொண்டுவர வேண்டும் என்று நினைப்பவர்கள் முறையான பயிற்சியாளரின் துணையோடு, பயிற்சி செய்யுங்கள். சீக்கிரம் சிக்ஸ்பேக் வேண்டும் என்று குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுக்காதீர்கள்.

 

பு.விவேக் ஆனந்த் படங்கள்: கே.ராஜசேகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்