'என் டைட்டிலில் நெருப்புக்கு இடம் இல்லை!'

இந்த ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட 'நிலா வானம் காற்று மழை' என்ற தமிழ் குறும்படம் தேர்வாகியுள்ளது. சந்தோஷத்தில் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்துக்கொண்டிருந்த குறும்பட இயக்குநரான ஜான் ரோமியோவைப் பிடித்துப் பேசினோம். இவர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

''கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட என் குறும்படம் தேர்வாகும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. இன்னும் அந்த சந்தோஷத்துல இருந்து நான் வெளிவரல'' என்று மகிழ்ச்சி துள்ளலுடம் பேச ஆரம்பித்தார் ஜான். ''இது என்னுடைய இடண்டாவது குறும்படம். மொத்தம் 25 நிமிடங்கள் ஓடக்கூடியது. இது கெளரவக் கொலை சார்ந்த படம். சாதி சார்ந்து மட்டும்தான் கெளரவக் கொலை நடக்கும் என்பது கிடையாது. ஒரே சாதியா இருந்தாலும் பொருளாதாரத்தின் அடிப்படையிலும் பல கொலைகள் நடக்கும். அந்த கருப்பொருளை மையமாகக் கொண்டதே படம்.

காதலியை முத்தமிடத் துடிக்கும் காதலன். அவனின் பிறந்த நாளன்று முதல் முத்தம் தருவதாக சொல்கிறாள் காதலி. பிறந்த நாளும் வருகிறது. 'முத்தம் தா' என்று கேட்க, அந்த நேரத்தில் மாடிக்கு அவனின் நண்பன் வருகிறான். இருவரும் மறைந்துவிடுகிறார்கள். அவங்க இரண்டு பேருமே ஆவிகள்னு ஆடியன்ஸ்க்கு அப்போதான் தெரியும். எதற்காக இறந்தார்கள்... என்ன நடந்துச்சி... இதுதான் மீதி கதை. ரொமான்ஸ் கலந்த காதல் கதைதான் ‘நிலா வானம் காற்று மழை.''

ஏன் இந்த டைட்டில்?

''பொதுவாகவே இளம் தலைமுறையின் காதலை, பெரியவர்கள் காமமாகவே பார்ப்பாங்க. ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பை எப்போதுமே காமத்துடன்தான் ஒப்பிடுவோம். அதனால, அதைத் தவிர்த்து, நிலா வானம் காற்று மழை என்று டைட்டில் வைத்தோம். இந்த நான்கு பூதங்களையுமே படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் மாறி மாறி பார்க்கலாம். தூய்மையான காதலின் வெளிப்பாடாகவே இந்தப் படம் இருக்கும்.''

குறும்படங்கள் எடுக்கவேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்துச்சு?

''படிச்சது விஸ்காம். மாற்று சினிமாவுல எனக்கு அதிகப்படியான ஆர்வம். வீதி நாடகங்கள், நவீன நாடகங்கள் அதைத் தொடர்ந்து ஆவணப் படங்கள் என்று செயல்பட ஆரம்பித்தேன். 12 விதமான சமுகப் பிரச்னைகளை மையப்படுத்தி 12 ஆவணப் படங்களை எடுத்தேன். இந்த வருடத்திற்கான தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் பட இயக்குநர் பிரம்மா என்னுடைய நண்பர்தான்!'' என்று காலரையும் தூக்கிவிட்டார் ஜான்.

கதைத் தேர்வுக்கான காரணம் என்ன?

''2006-ல விழுப்புரம் பக்கத்துல ஒரு கிராமத்துல கெளரவக் கொலை நடந்துச்சி. காதுல விஷம் ஊத்தி வீட்டுல இருக்கிறவங்களே கொன்னாங்க. அந்த செய்தியை ஜூனியர் விகடன்ல படிச்சேன். அப்பவே இந்தக் கதையை எழுதிட்டேன். மனசுக்குள்ளயே வெச்சு இப்போ குறும்படமாகவும் எடுத்தாச்சி.''

படத்தோட ஷூட்டிங் அனுபவம் பத்தி சொல்லுங்க?

''உண்டியல காசு சேக்குற மாதிரி சேர்த்து வெச்சு இந்தப் படத்தை எடுத்தேன். கடந்த டிசம்பர்ல ஷூட்டிங் ஆரம்பிச்சோம். வெளிவரப் போகுற 'சவாரி' படத்தோட ஹீரோ பெனிட்டோ தான் இந்தப் படத்துல முக்கிய ரோல்ல நடிச்சிருக்காரு. ஆறு மாதங்கள் நடக்குற கதை நகர்வு. ஆனா, பட்ஜெட்டுக்காக மூணு நாட்கள்ல படத்தோட ஷூட்டிங் முடிச்சோம்.

பேனசோனிக் GH4 கேமரை வெச்சுதான் படம் எடுத்தோம். 'குற்றம் கடிதல்' பட எடிட்டர் பிரேம் குமார்தான் எடிட்டர். நட்பு வட்டாரங்கள் உதவுனதுனால படத்தையும் சீக்கிரமா பட்ஜெட்டுக்குள்ள முடிச்சிட்டோம்.

கேன்ஸ் திரைப்பட விழா மே 13-24 வரைக்கும் பிரான்ஸ் நாட்டுல இருக்குற கேன்ஸ் நகரத்துல நடக்குது. இந்த திடைப்பட விழாவுக்கு உலகத்துல இருக்குற எல்லா தயாரிப்பாளர்களும் வந்துருப்பாங்க. குறும்படங்கள் எடுத்தவர்களுக்கு முழு நீள படங்கள் எடுக்க வாய்ப்பு கிடைக்கும். இயக்குநர்களின் அடுத்தகட்ட வாய்ப்புக்கான பெரிய மேடை அது. இப்போ கேன்ஸ்ல என் படத்தையும் திரையிடப் போறாங்க'' என்று மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றார் ஜான்.

''நாம எடுக்குற படம்லாம் கேன்ஸ்ல தேர்வாகாதுனு அனுப்பாம வெச்சிருப்பாங்க. ஆனா, அப்படி வெச்சிருக்கக் கூடாது. அனுப்பிப்பாருங்க... கண்டிப்பா சக்ஸஸ்தான்!'' - இளம் இயக்குநர்களுக்கு நம்பிக்கையை விதைத்து முடிக்கிறார் ஜான் ரோமியோ.

ஜான் ரோமியோவைத் தொடர்புகொள்ள : john.explorer@gmail.com

- பி.எஸ்.முத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!