Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சமுத்திரகனியும், சசிகுமாரும் தான் என்னை கட்டாயபடுத்தினார்கள் - நமோநாராயணன் சிறப்பு பேட்டி..

'நாடோடிகள்' படத்தில் எதற்கெடுத்தாலும் உடனுக்குடன் ப்ளக்ஸ் பேனர்  வைத்து அதிரடி கொடுக்கும் விளம்பரப்பிரியர் ரோல் மூலம் அனைவரின் மனதிலும் ஆழப்பதிந்தவர் நடிகர் நமோநாராயணன். அண்மையில் வந்துள்ள 'கொம்பன்' படம் வரை சுமார் 20 படங்கள் நடித்துவிட்டார்.

அவரது முகத்தில் தெரிவது வில்லத்தனமா, குறும்பா, அப்பாவித்தனமா, பாசமா என்று கணிக்கவே முடியாது அப்படி ஒரு பெர்சினாலிட்டி. அவரிடம் சில கேள்விகளை தெளித்தபோது.

 ' நாடோடிகள்' உங்கள் முதல்படம். அதற்கு முன்னாடி?

எனக்குச் சொந்தஊர் மதுரை. அப்பா அம்மா இருவருமே போஸ்ட் மாஸ்டர்ஸ். என்னுடன் பிறந்தவர்கள் 2 தம்பி 3 தங்கைகள் நான்தான் மூத்த பிள்ளை. சாப்ட்வேர் இஞ்ஜினியரிங் முடித்துவிட்டு பஹ்ரின், மலேசியா, சிங்கப்பூர் என பல வெளிநாடுகளில் வேலை பார்த்தேன். .. அதன்பிறகுதான் சென்னை வந்து வேலை பார்த்தேன்.

ஒரே ஊர்க்காரர்கள் என்றாலும் இங்கு வந்துதான் சமுத்திரக்கனி, சசிகுமார் எல்லாம் பழக்கம்.    இங்கு வந்துதான் நெருங்கி பழகி வாடா போடா நண்பர்களானோம். ஒன்றாக தங்கி இருந்தோம். இந்த நட்புக்கு இன்று வயது 25 ஆண்டுகள் என்றால் பாருங்களேன்.

'நாடோடிகள்' படம் எடுத்த போது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பெரும்பாலும் வெளியூரில் இருப்பார். அவர் என் நண்பனின் நண்பர். அப்படித்தான் அறிமுகம். மும்பையில் பிஸினஸ் இருந்ததால் இங்கே இருக்கவே மாட்டார். இங்கு பொறுப்பாக படத் தயாரிப்பைக் கவனித்துக் கொள்ள ஒரு ஆள் தேவைப்பட்டது. என்னை எக்சிகியூட்டிவ் புரொடியூசராக்கி பார்த்துக் கொள்ளச் சொன்னார்கள். அப்படித்தான் எக்சிகியூட்டிவ் புரொடியூசர் அதாவது நிர்வாகத் தயாரிப்பாளர் ஆனேன்.

படப்பிடிப்பு இடங்களுக்கெல்லாம் நான் ஒயிட் அண்ட் ஒயிட்டில் சென்று மிடுக்காக வலம் வருவேன். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருப்பேன். இதை சமுத்திரக்கனியும், சசிக்குமாரும் பார்த்து வயிறு எரிந்தார்கள். நாம மட்டும் சேறு சகதி வெயில் மழை என்று நாயாய் பேயாய் உழைக்கிறோம். நம்முடன் இருந்த இவன் மட்டும் மெலுக்காகத் திரிகிறானே என்று யோசித்து இருக்க வேண்டும்.என் எதிரிலேயே அப்படிப் பேசினார்கள்.

'டேய்  இதில் ஒரு ரோல் இருக்கு  நீ நடிடா' என்றார் கனி. 'வேண்டாம். நமக்கு அது சரிப்பட்டு வராது' என்று மறுத்தேன் நான்.

'நாங்க இவ்வளவு கஷ்டப் படறோம். நீ ஜாலியாத் திரியுற.. நீ இந்தப் படத்துல நடிக்கிற சேறு சகதியெல்லாம் இறங்குறே. நாங்க பார்க்கிறோம்.' என்ற கனி என்னை வலுக்கட்டாயமாக நடிப்பில் இறக்கி விட்டார். அப்படித்தான் அதில் நடித்தேன்.

முதல்பட நடிப்பு அனுபவம் எப்படி?

சினிமாக் காரர்களுடனேயே ரொம்ப காலம் இருந்ததால் சினிமா பற்றி எல்லா புரிதலும் ஒரளவுக்கு எனக்கு இருந்தது. எனவே கேமரா முன்பு நிற்கும் முதல் நாள் தான் நடிப்பு புதிதாக உதறல் இருந்தது. மறுநாள் முதல் அதுவும் பழகி விட்டது. எல்லாருமே தெரிந்த முகங்கள் எனவே எதுவும் பிரச்சினை இல்லை. அன்று முதல் இன்றுவரை நானாக எதுவும் செய்வதில்லை. இயக்குநரை செய்து காட்டச் சொல்வேன்: அப்படியே திரும்ப இமிடேட் செய்து நடிப்பேன். 'நாடோடிகள்’ படத்துக்கு பிறகு 'ஈசன்' 'நிமிர்ந்துநில்' படங்களில் நடித்தேன்.     

                                               
சமுத்திரக் கனி, சசிகுமார் படக்குழுவினர் தவிர மற்றவர் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லையா?

அப்படி ஒன்றுமில்லை. என் ஆரம்பகாலப் படங்கள் அப்படி அமைந்தன அவ்வளவுதான். 'நாடோடிகள்’ படத்திற்கு பிறகு 'ஈசன்' 'நிமிர்ந்துநில்' படங்களில் நடித்தேன். 'குட்டிப்புலி' 'கொம்பன்' வரை பழகிய அதே படக்குழுவினர்.   கனி, சசி படங்களுக்குப் பிறகு 'யாமிருக்கப் பயமே' ,'கேடிபில்லா கில்லாடி ரங்கா' படங்கள் நடித்தேன். 'வாய்மை'யில் கவுண்டமணியுடன் 'ரஜினிமுருகன்' படத்தில் சிவகார்த்திகேயனுடன் 'நீயெல்லாம் நல்லா வருவடா' வில் விமலுடன் நடித்திருக்கிறேன். மாகாபாவுடன் 'நவரசத்திலகம்' படத்தில் நடித்து வருகிறேன். இதுவரை தமிழில் 18 படங்கள் முடித்து விட்டேன். மலையாளத்தில்  மம்முட்டியுடன் 'தாப்பானா' வில் நடித்திருக்கிறேன்.அவருடன் நடித்த போது பதற்றத்தில் 5 டேக் வாங்கினேன். அவர் பேசிப்பழகி சகஜமாக்கினார்.பதற்றம் போக டிப்ஸ் எல்லாம் கொடுத்தார்.அதை மறக்க முடியாது. பிறகு பையாபையா' நடித்தேன். இப்படி மலையாளத்தில் 2 படங்கள் நடித்திருக்கிறேன். சிறியபடங்கள் முதல்  மெகா ஸ்டார் வரை அதற்குள் நடிக்க வாய்ப்பு வந்தது பெருமையாக இருக்கிறது.குடும்பத்தில் நடிகர் நமோநாராயணனை எப்படி பார்க்கிறார்கள்?

 நமோநாராயணனை சினிமாவுக்காக வைத்ததா புதிதாக இருக்கிறதே என்கிறார்கள். இது என் தாத்தா பெயர். அதைத்தான் எனக்கு வைத்தார்கள். எனக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள். எல்லாரும் மதுரையில் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் நான் சினிமாவில் ஈடுபடுவது குடும்பத்தில் பிடிக்கவில்லை. பிறகு வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். இப்போது நான் நடிப்பதை ரசிக்கிறார்கள். சிரிக்கிறார்கள். கேலி பேசுகிறார்கள். எல்லாம் நடக்கிறது.

 

நிர்வாகத் தயாரிப்பு அனுபவம் நடிக்கும் போது உதவுகிறதா?

ஒரு காட்சி எங்கு தொடங்குகிறது எங்கு முடிகிறது என்று புரிகிறது. என்னென்ன தேவை என்பது எல்லாம் தெரிகிறது. படப்பிடிப்பில் உள்ள நடைமுறைச் சிக்கல் பற்றி அறிய முடிகிறது . இப்படி பல வகையில் உதவியாக இருக்கிறது

நடிகராக உங்கள் திட்டம்?

அப்படி எதுவுமில்லை. பாசிடிவோ நெகடிவோ நல்லவனோ கெட்டவனோ. பாத்திரம்தான் முக்கியம். எது கொடுத்தாலும் நடிப்பேன். இயக்குநர் சொன்னதை அப்படியே செய்யப் போகிறேன். சிறிது நேரம் வந்தாலும் ஜெயிக்கிற படத்தில் இருக்க வேண்டும். இதுதான் என் ஆசை. நம் முகத்தைக் கொஞ்சம்  பார்ப்பதே பெரிய விஷயம். இதையே படம் முழுக்க  வரவேண்டும் பார்க்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது பேராசை அல்லவா?

'கொம்பன்' அனுபவம்.?

ஏற்கெனவே எனக்கு அறிமுகமானதுதான்  'கொம்பன்'படக்குழு.எனவே எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ராமநாதபுரம் பேச்சு வழக்கு எனக்கு பெரிய சிக்கல் இல்லை.

ராமநாத புரத்தில் சிறு வயது சேட்டை தாங்காமல் என் பெரியப்பா வீட்டுக்கு அனுப்பி 7வது 8வது வகுப்பு படிக்க வைத்தார்கள். அங்கே தங்கி படித்திருக்கிறேன் அதனால் ராமநாதபுரம் பேச்சு வழக்கு எனக்கு அப்போது அறிமுகமுண்டு.

கார்த்தி  மிகவும் எளிமையானவர். சகஜமாகப் பழகக் கூடியவர். அதேமாதிரி அண்ணன் ராஜ்கிரணும் பாசமுடன் பழகினார். ஒரு குடும்பம் போல இருந்தோம். மறக்க முடியாத அனுபவம். கதையில் பகை கொண்ட குடும்பங்களாக நடித்திருந்தாலும் படப்பிடிப்பில் ஒன்றாகவே ஒரு குடும்பம் போல இருந்தோம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்