நதி போல ஓடணும்...தன்னம்பிக்கை கருணாகரன்!

யுவன் சங்கர் ராஜா இசையில் சிம்புவின் நடிப்பில் வந்த வல்லவன் படத்தில் ’காதல் வந்தாலே மனசு ஏங்கி தவிக்கும்’ என்ற பாடலின் மூலம் தன் பயணத்தை ஆரம்பித்தவர்.அதன் பிறகு பல படங்களில் பாடல் எழுதியவருக்கு திருப்பு முனையாக அமைந்த பாடல் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் வந்த ’பேட் பாய்ஸ் பாடல்’.

அருள்நிதி நடித்து வெளிவந்த தகராறு, கடவுள் பாதி மிருகம் பாதி, சேர்ந்து போலாமா உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல் எழுதியுள்ள கருணாகரன் தற்போது SS தமன் இசையில் அருண்விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள ’வா டீல்’ திரைப்படத்தில்  ’அந்தரு அந்தரு’ என்ற பாடலை எழுதியுள்ளார். மேலும் திரைக்கு வரவுள்ள 30க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார் கருணாகரன்.அவருடன் ஒரு மினி பேட்டி.

’’கால்கள் இரண்டும் வேலை செய்யாமல் போனால் என்ன? மூளை வேலை செய்தால் போதும்’’ என தன்னம்பிக்கை தளராமல் பேசுகிறார் பாடலாசிரியர் கருணாகரன்.எனக்கு சொந்த ஊர் மதுராந்தகம்.பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில தான்..5 அக்காக்கள் 1 தம்பினு மொத்தம் நாங்க 7 பேர்.எனக்கு ஒரு வயசு இருக்கும் போதே போலியோ அட்டாக் ஆனதுல என்னோட ரெண்டு கால்களுமே செயலிழந்துப் போச்சு.அப்போ இருந்து இப்ப வரைக்கும் நான் தவழ்ந்துட்டு தான் போயிட்டு இருக்கேன்.

என்னோட அம்மா தான் எனக்கு கிடச்ச முதல் வரம்.முதல் முதலா பள்ளியில படிச்ச சமயம் கவிதைப் போட்டியில ஒரு கவிதை எழுதி 2 வது பரிசு வாங்கினேன்.அப்புறம் அதே கவிதையை என் நண்பர்கள் வேறு இடங்கள்ல வரி மாறாம எழுதி முதல் பரிசு வாங்கினாங்க.அப்ப எனக்கு கிடச்ச நம்பிக்கை தான் என்னை தொடர்ந்து கவிதை எழுதுற ஊக்கம் கொடுத்துச்சு.

பி.ஏ பொருளாதாரம் வரைக்கும் படிச்சிருக்கேன்.இந்த உலகத்தை விடாம தொடர்ந்து படிச்சிட்டு இருக்கேன்.மக்களோட மக்களா வாழ்ந்து பாட்டெழுதனும்.அதான் என் ஆசை.ஒரு பாடலுக்கு தகுதியா நான் நினைக்குறது சரியான இலக்கணம் மட்டுமில்ல.கண்டிப்பா அந்த பாட்டு ஒரு ரசிகனை தலையாட்ட வைக்கனும்.பல்லவிக்குள்ள ரசிகனை இழுத்து சரணத்துல ரசிகனோட மனசுல பதியுற மாதிரியான வரிகளை கொண்டு போய் நிறுத்தனும்.இன்னைக்கு நிறைய பேர் பாடல் எழுதுறாங்க.அவங்களுக்கு என்னோட வாழ்த்துகள்.

என்னோட 23 வது வயசுல நான் பாட்டு எழுத வந்தப்ப என்னை யாரும் இசையமைப்பாளர் அலுவலகத்துக்கு கூட்டிட்டு போகலை.கால்கள் இல்லைனாலும் நான் இரு சக்கர வாகனம் ஓட்டுவேன்.எனக்கு நானே வாய்ப்பு தேடி அலைஞ்சேன்.முதல் முதலா யுவன்சங்கர் சார் கொடுத்த வாய்ப்பு என்னை தலை நிமிர்ந்து நிக்க வச்சது.வாய்ப்புகள் யாரையும் தேடி வராது.நாம் தான் வாய்ப்பை தேடி போகனும்.பள்ளியில படிக்குறப்ப என் நண்பர்கள் வாலிபால் போட்டியில கலந்துப்பாங்க...

என்னால முடியாது.ஆனா அதுக்கு இணையா பேச்சுப் போடியில கலந்துப்பேன்.அவங்க ஓட்டப்பந்தயத்துல கலந்துகிட்டா நான் பாட்டுப் போடியில கலந்துப்பேன்.எது எப்படி இருந்தாலும் இந்த உலகத்துல நாம் இயங்கிட்டே இருக்கனும்.ஓடிகிட்டே இருக்கனும்.ஓடுனா தான் நதி.உட்கார்ந்துட்டா அது தேங்கிப் போனா குட்டை தான்.என்னைக்காச்சும் குட்டை கலங்கிடும். நானும் நதி போல தான் ஓடிக்கிட்டே இருப்பேன்.’’தன்னம்பிக்கையுடன் நகர்கிறார் கருணாகரன்!

-பொன்.விமலா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!