வெளியிடப்பட்ட நேரம்: 15:52 (22/04/2015)

கடைசி தொடர்பு:15:55 (22/04/2015)

ஐபிஎல் சூதாட்டத்தை படமாக்காதது ஏன்?: ராம்கோபால் வர்மா சிறப்பு பேட்டி

ராம்கோபால்வர்மா, ‘சத்யா’, ‘சர்க்கார்’, ‘கம்பெனி’ என்று பரபரப்பாக பேசப்பட்ட படங்களை இயக்கியவர். மும்பை ஸ்டார் ஓட்டல் வெடிகுண்டு தாக்குதலை ‘தி அட்டாக்ஸ் ஆப் 26/11’ படமாகவும். ஆந்திராவில் நடந்த சாதிக்கலவர அரசியலை ‘ரத்த சரித்திரம்’ என்றும் சமூகம் சார்ந்த உண்மைச் சம்பவங்களை நெற்றிப் பொட்டில் அறைந்தாற் போன்று பொளேர் என்று படமாக்குவதில் ஜாம்பவான் ராம்கோபால் வர்மா, சமீபத்தில் சென்னைக்கு வந்தபோது அவரை சந்தித்தோம்.

நீங்கள் யாரிடமும் வேலை செய்யாமல் ஏகலைவன் போல் இயக்குநரானது எப்படி?

என்னை டைரக்டராக்கியது என் நண்பர்கள். புதுசா வெளிவந்த படத்தை பார்த்துட்டு வந்தவுடனே என்னைச்சுற்றி நண்பர்கள் வட்டமாய் உட்கார்ந்து கொள்வார்கள். படத்தின் கதையை என் ஸ்டையிலில் பிரேக்விட்டு, பி.ஜி.எம். மியூஸிக் கொடுத்து எடுத்து விடுவேன். இம்பரஸான நண்பர்கள், உற்சாகமாய் தியேட்டருக்கு கிளம்பி விடுவார்கள். படம் பார்த்துவிட்டு திரும்பிவந்து ‘நீ சொன்ன கதை நல்லா இருந்துச்சு... பட் படம் நல்லாவே இல்லை...’ என்று என்னை என்கரேஜ் செய்து, சினிமா உலகத்துக்கு அனுப்பினார்கள். என்னை பொறுத்தவரைக்கும் இன்னொரு டைரக்டரிடம் வேலைக்கு போனா, என்னோட ஒரிஜினல் போயிடும்னு நெனச்சேன். அதனால நானே நேரடியா ‘உதயம்’ படத்தை டைரக்சன் செய்தேன்.

ரீ-மேக் செய்வது சினிமாவுக்கு ஆரோக்கியமா?

சமீப காலமாக ஒரு மொழியில் எடுத்த படத்தை இன்னொரு மொழியில் எடுப்பது குறித்து நான் பதில்சொல்ல விரும்பலை. ஆனா 25 வருடத்துக்கு முன்னாடி வெளிவந்த படத்தை, இப்போ இருக்குற ஜெனரேஷன் பார்த்து, அல்லது அந்த படத்தை மெருகேத்தி, இப்போ இருக்குற யூத் ஜெனரேஷனுக்கு ஏற்றமாதிரி படமாக்குறதுல தப்பு இல்லை. ராமாயணம் கதையை எத்தனைமுறை ரீ-மேக் செய்து சினிமா எடுத்தாலும் போரடிக்காது, சுவாரஸ்யமாத்தான் இருக்கும்.

சமூகத்தில் நடந்த நிஜ சம்பவங்களை ‘ரத்த சரித்திரம்’ போன்று திரைவடிவமாக இயக்குவது ஏன்? ஐ.பி.எல் சூதாட்டம், தர்மபுரி இளவரசன் மரணம் பற்றிய சாதிய மோதல் கலவரம், செம்மரக் கடத்தல் போன்ற சம்பங்களை படமாக எடுப்பீர்களா?

என்னுடைய பெரும்பாலான படங்கள் நிஜங்களின் பிரதிபலிப்புதான். முதல் படம் ‘உதயம்’ கூட நான் காலேஜ் லைப்ல கண்ட விஷயங்கள். படிப்பு மட்டுமே இருக்க வேண்டிய காலேஜ் ஸ்டுடன்ஸை அரசியல்வாதிங்க எப்படி தங்களோட கைப்பாவையா மிஸ்யூஸ் செய்து கொள்கிறார்கள் என்று அந்த படத்தில் காட்டி இருப்பேன். எனக்கு பிடிச்ச... என்னை இம்பரஸ் செய்த விஷயங்களை மட்டுமே சினிமாவா எடுப்பேன். டெய்லி பேப்பரை திறந்தால் ஒவ்வொரு பக்கத்துல ஒவ்வொரு சம்பவம் இடம்பிடிச்சு இருக்கு. எல்லாத்தையுமே படம் பிடிக்க முடியாது. சின்ன வயசுல இருந்தே கிரிக்கெட் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. அதனால் ஐ.பி.எல் சூதாட்டத்தை படமாக்குற ஐடியா அரவே இல்லை. அப்புறம் இளவரசன் மரணத்துல சாதி, அரசியல்னு என்னென்னமோ இருக்குன்னு சொல்றாங்க. ஏற்கனவே இந்த பிரச்னையை ‘ரத்த சரித்திரம்’ படத்துல வெளிப்படுத்தி இருக்கேன். அதனால் மறுபடியும் அதே சப்ஜெக்ட்டை தொடமாட்டேன்.

பேய், சைக்கோ போன்ற படங்கள் எடுக்கிறீர்கள்?

இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என்று சமயபுர மாரியம்மனுக்கு வேண்டுதல் எதுவும் செய்து கொள்ளவில்லை. அப்பப்போ என்ன தோணுதோ அதை ஸ்கிரீன்ல காட்டுறேன். பேய் சமாச்சாரம், சைக்கோ மனிதர்கள் நிரம்பிக் கிடக்குற சமூகத்துலதான் நாம் வாழ்கிறோம். அதைத்தானே படமாக எடுக்கிறேன்.

கேன்சர் வந்த பிறகு மனிஷா உங்களின் ‘பூத் ரிடர்ன்ஸ்’ படத்தில் நடித்தது குறித்து?

‘பூத் டிடர்ன்ஸ்‘ படத்துல ஹீரோவுக்கு அம்மா கேரக்டர்ல மனிஷா நடிச்சாங்க. நீங்க நினைக்கிற மாதிரி கேன்சர் வந்தபிறகு என்னோட படத்தில் நடிக்கலை. அதற்கு முன்பாகவே நடிச்சு முடிச்சிட்டாங்க. ஷூட்டிங் ஸ்பாட்ல அவருக்கு கேன்சர் நோய் இருக்குற விஷயம் எனக்கோ, யூனிட்டுக்கோ, ஏன் அவருக்கேகூட தெரியாது. ஏன்னா அந்தளவுக்கு ஓவ்வொரு சீன்லயும் ஃப்ரெஷ்ஷா பெர்பாமென்ஸ் காட்டினாங்க. ஷூட்டிங் முடிஞ்சு மூணுமாசம் கழிச்சு மனிஷாவுக்கு கேன்சர்னு தெரிஞ்சப்போ இடிஞ்சு போயிட்டேன்.

மும்பை நட்சத்திர ஒட்டலில் குண்டுவெடிப்பு நடந்த மறுநாள் அந்த ஸ்பாட்டில் ஆஜரான ஒரே சினிமா டைரக்டர் நீங்கள்தான் அந்த அனுபவம் எப்படி?

இந்தியாவுல கடந்த 100 வருஷத்துல இப்படி ஒரு வயலன்ஸ் இன்சிடென்ட் நடந்திருக்க சான்ஸே இல்லை. 2011-ம் வருஷம் 26-ம் தேதி டெரர்ஸ் நடந்த குண்டு வெடிப்பு நடந்த இடத்துக்கு போனபோது அப்படியே கதிகலங்கி போயிட்டேன். நான் பார்த்த ஒவ்வொரு காட்சியும் அப்படியே என்னை நிலைகுலைய வைத்து விட்டது. கண்களையே காமிராவாக்கி எல்லா காட்சிகளை மனசுக்குள் பதிவு செய்து கொண்டேன். நான் பார்த்து அதிர்ந்த பாம் பஸ்ட் சீன்களை இந்தியர்கள் எல்லாரும் பார்க்கணும்னு முடிவெடுத்தேன். அப்படி உருவாகி வெளிவந்ததுதான் ‘தி அட்டாக்ஸ் ஆப் 26/11’ திரைப்படம்.

-எம். குணா-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்