அவெஞ்சர்ஸ் & பேட் மேனை சென்னைக்கு இழுத்துட்டுவந்த புட்சட்னி டீம்! ஒரு கலாய் பேட்டி! | put chutney Team Director Interview!

வெளியிடப்பட்ட நேரம்: 10:59 (29/04/2015)

கடைசி தொடர்பு:11:11 (29/04/2015)

அவெஞ்சர்ஸ் & பேட் மேனை சென்னைக்கு இழுத்துட்டுவந்த புட்சட்னி டீம்! ஒரு கலாய் பேட்டி!

ஒருவேளை 'பேட்மேன்' சென்னையில் பிறந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? இந்த வீடியோ 2 வாரத்திற்கு முன்பு வெளிவந்து ஃபேஸ்புக் ட்விட்டரில் அதிகமாக பகிரப்பட்டது. பேட்மேன் காலையில் சென்று பால் பாக்கெட், நியூஸ் பேப்பர் வாங்கி வருவது, பைக்கில் ஓவர் ஸ்பீடாக சென்று ட்ராஃபிக் போலீஸிடம் மாட்டுவது என பயங்கர கலாய் கற்பனையோடு கொடுத்திருந்தது புட்சட்னி டீம். இப்போது 'அவெஞ்சர்ஸ் தென் இந்தியாவில் இருந்து வந்தால்?' என புது லீட் பிடித்து வீடியோ வெளியிட அதுவும் இணையத்தில் பரபரக்கிறது. யார் இந்த 'புட்சட்னி' டீம்? என தேட வீடியோவின் இயக்குநர் துஷர் ராமகிருஷ்ணன் ஆஜரானார்.

ஆக்ட்சுவலா இதுல தனி ஆளுங்கனு யாரும் இல்ல. எல்லாம் ஒரு டீம் தான். கல்சர் மெஷின் புரொடக்ஷனுடைய இன்னொரு கிளைதான் எங்க புட்சட்னி டீம். என்னோட பேர் ரமாகிருஷ்ணன், நான் இதுக்கு முன்னால செல்வராகவன் சார் கிட்ட அசிஸ்டென்டா இருந்தேன். சினிமா முயற்சிகள்ல இருந்த போது தான், நண்பர் ராஜீவ் மூலமா இந்த டீம்ல சேர வாய்ப்பு வந்தது. இப்போ ராஜீவ் (Creative Director), பாலா (Writer), அஷ்வின் , சுவி  எல்லாம் சேர்ந்து ஒரு ஃபார்முக்கு வந்திட்டோம். அதோட முதல் பிரதிபலிப்பு தான் அந்த பேட்மேன் வீடியோ.

ஏன் சூப்பர் ஹீரோஸ் எல்லாரையும் வம்புக்கு இழுக்கறீங்க?

வம்பு இழுக்கறதுன்னு இல்ல. பேட்மேன் ஐடியா ரெண்டு வருஷம் முன்னால பாலா க்ரியேட் பண்ணின மீம் மூலமா உருவானது தான். அதுவும் இல்லாம நிஜமாவே சூப்பர் ஹீரோ வந்து உலகத்தக் காப்பாத்துறது என்ன நடந்துகிட்டா இருக்கு? யோசிச்சுப் பாருங்க நிஜமா ஒரு பேட்மேன் நம்ம ஊர் ட்ராஃபிக்ல அத்தனை ஸ்பீடா பைக் ஓட்டீட்டு போனா போலீஸ்கிட்ட தானே மாட்டுவார். அத மனசுல வெச்சு நம்ம வழக்கமான நாட்கள்ல பேட்மேனுடைய சென்னை வெர்ஷன் எப்படி இருக்கும்னு யோசிச்சோம் படபடனு கொட்டுச்சு ஐடியா. ராஜீவ், அஷ்வின், பாலா மூனு பேரும் ஸ்டேண்ட்-அப் காமெடில அசத்துவாங்க, அத ஒரு படம் மாதிரி கன்வர்ட் பண்ணிடுவோம். நான் இயக்குவேன், அவ்வளவு தான். அப்பறம் அந்த ஹெச்.ஆர் வீடியோவும் இந்த மாதிரி டீமா சேர்ந்து யோசிச்சது தான். சரியா அவெஞ்சர்ஸ் டைம்ல என்ன பண்ணலாம்னு யோசிச்சோம் அவெஞ்சர்ஸையே வெச்சு பண்ணலாம்னு ஐடியா க்ளிக் ஆச்சு. ஆனா, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கதை வெச்சு பண்ணா ரொம்ப பெருசா வரும். அதனால அத ஒரு டிரெய்லர் மாதிரி ரெடி பண்ணோம்.

'டெல்லி' கணேஷ், மனோபாலானு சினிமா ஆட்களையும் சேர்க்கற ஐடியா எப்படி வந்தது?

அந்த பேட்மேன் கான்செப்ட்ல பேட்மேனுடைய அப்பா கேரக்டர் பத்தி பேசும் போது 'டெல்லி' கணேஷ் சார் பண்ணா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. அவர்கிட்டயும் போய் விஷயத்தை சொன்னோம். தாராளமா பண்ணலாமேனு உற்சாகமாகிட்டார். மனோபாலா சார் கிட்ட கேட்கப் போகும் போது டெல்லி கணேஷ் சார் நடிச்சத சொல்லி வீடியோவும் காமிச்சோம். அவரும் சந்தோஷமா வந்து நடிச்சார். இதுல இயக்கம் எழுத்து தவிர நடிக்கறதுலையும் இருக்கோம். பேட்மேன் வீடியோல பேட்மேனா நடிச்சது அஷ்வின். இதே மாதிரி அவெஞ்சர்ஸ்லையும் எல்லாம் ஷேர் பண்ணிகிட்டு பண்ணோம். அப்படி இருக்கும் போது ஒரு சினி கேஸ்டிங் இருந்தா வீடியோவுடைய ரீச்சும் பெருசா இருக்கும்ல.

புட் சட்னி டீம்

வீடியோ பார்த்து யாரெல்லாம் பாராட்டினாங்க?

ட்விட்டர் வழியா தான் பாராட்டுகள் எல்லாம் கிடைச்சது. செல்வராகவன் சார் வீடியோ ஷேர் பண்ணி விஷ் பண்ணியிருந்தார். விஷ்ணு சார், ப்ரியா ஆனந்த்னு நிறைய பேர் பாராட்டினாங்க.

சினிமா இயக்கணும்னு ஆசைப்பட்டீங்க, இப்போ இந்த வீடியோக்கள் இயக்கறீங்க. இயக்குநர் ஆசை என்ன ஆச்சு?

இப்பவும் எனக்கு இயக்குநர் ஆசை அப்படியே தான் இருக்கு. நாம எந்த வேலை செய்தாலும் நிறைய விஷயம் கத்துக்கறதுக்கு இருக்கும். அதுவும் நான் பண்றது இயக்குநர் வேலை தானே. இதில் இருந்து நான் கத்துக்க நிறைய விஷயம் கிடைச்சிருக்கு, நிறைய பேரின் அறிமுகங்கள் கிடைச்சிருக்கு எல்லாம் எனக்கு உதவியா இருக்கும் தானே!

உங்க வீடியோ எல்லாம் பார்த்தா, நேரடியா ஹாலிவுட் படங்களே இயக்குவீங்க போலயே?

ஒரு ஜோக்கா சொல்லணும்னா நானும் ஹாலிவுட் பட இயக்குநர்னு சொல்லலாம். ஆனா, எனக்கு ஆசை எல்லாம் தமிழ் படம் இயக்கணும்னு தான். அதுவும் எனக்கு காமெடி எல்லாம் இயக்க வரும்னு தெரியவே தெரியாது. என் ஆசையே ஒரு த்ரில்லர் படம் இயக்குறதா தான்.

எல்லாம் சரி அது என்ன 'புட்சட்னி'னு ஒரு பேர்?

இது தென்இந்தியாவுக்குனு ஆரம்பிக்கப்பட்ட சேனல். அதுக்கு பொருத்தமான ஒரு பேர் யோசிக்கணும்னு நினைச்சப்போ சட்டுனு ஞாபகம் வந்தது சட்னி தான். மத்த சைடு எல்லாம் இட்லி, தோசை, சாம்பார்னு எல்லாம் சேம். ஆனா, சட்னிங்கறது இங்க மட்டுமே ஸ்பெஷலான ஒரு ஐட்டம். ஒரு வடிவேல் சார் வசனம் கூட இருக்கு 'புட்சட்னி'னு. ரொம்ப கேட்சியாவும் இருந்துச்சு. அதையே தலைப்பா வெச்சிட்டோம். இந்த விளக்கம், தலைப்பு எல்லாம் அஷ்வினுடைய ஐடியா!

அடுத்து என்ன பண்ணலாம் யோசிச்சிட்டிருக்கீங்க?

இப்போ தான் ஆரம்பிச்சிருக்கோம், இதை எல்லார்கிட்டயும் கொண்டு போய் சேர்க்கணும் அது தான் முக்கியம் இப்போதைக்கு. இப்போ இருக்கும் வைரல்ல ஒரு விஷயத்தை ஆடியன்ஸ் மனசுல நிக்கவெக்கிறது தான் பெரிய சவால். ஆனா, அடுத்து என்ன வீடியோ பண்ணப் போறீங்கனு மட்டும் கேட்காதீங்க, அது மட்டும் சஸ்பென்ஸ்!

புட்சட்னியின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண க்ளிக்கவும் :

பேட்மேன் சென்னைக்கு வந்தால்: http://bit.ly/1P4WwmH

அவெஞ்சர்ஸ் இன் சென்னை : http://bit.ly/1GDZ49d

பா.ஜான்ஸன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்