குழந்தையின் படிப்பிற்கு கொடுங்கள் சுதந்திரம்! சொல்கிறார் தேவதர்ஷினி | Give Freedom For Children Studies Devadharshini Says

வெளியிடப்பட்ட நேரம்: 15:56 (14/05/2015)

கடைசி தொடர்பு:16:03 (14/05/2015)

குழந்தையின் படிப்பிற்கு கொடுங்கள் சுதந்திரம்! சொல்கிறார் தேவதர்ஷினி

‘‘ங்க குடும்பத்தில் எல்லாருமே படிப்பாளிகள். அப்பா கல்லூரி முதல்வர். அம்மா பள்ளி முதல்வர். அக்கா கோல்டு மெடலிஸ்ட். நானும் ஸ்கூல் ஃபர்ஸ்ட், காலேஜ் ஃபர்ஸ்ட்!’’ - உற்சாகமாக ஆரம்பித்தார் தேவதர்ஷினி.

''எத்திராஜ்ல பி.காம்., படிச்சப்போ ‘மர்ம தேசம்’ சீரியல் வாய்ப்பு வர, சின்னத்திரைக்குவந்தேன். அப்படியே வெள்ளித்திரைக்குப் பயணமானேன். மீடியாதான் வாழ்க்கைனு ஆனது. ஆனாலும் எனக்கு படிப்பு மேல அதிகப் பிரியம் என்பதால, அண்ணாமலை பல்கலைகழகத்துல தொலைதூரக் கல்வி மூலமா எம்.எஸ்சி., சைக்காலஜி படிச்சிட்டு இருக்கேன்.

சொல்லப்போனா, பள்ளி, கல்லூரி நாட்களை விட இப்போ எனக்கு படிப்பில் ஆர்வம் ஆதிகமாகியிருக்கு. காரணம், ‘நீ இவ்வளவு மார்க் வாங்கணும், அவ்வளவு மார்க் வாங்கணும்’னு எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது. இந்தப் படிப்பை முடிச்சாதான் என்னால ஒரு வேலையில சேரமுடியும்ங்கற சூழ்நிலை இல்ல. ‘உன் வாழ்க்கையே இதுலதான் அடங்கியிருக்கு’னு பயமுறுத்த யாரும் இல்ல. அதனால, நான் ஒவ்வொரு சப்ஜெக்டையும் ரசிச்சு, ரசிச்சு புரிஞ்சு படிக்க முடியுது. பள்ளி, கல்லூரிப் படிப்பு கொடுத்த அறிவை விட, இப்போ நான் அதிகமா தெரிஞ்சுக்கிறேனுதான் சொல்லணும்!’’ என்றவர் தன் குழந்தை வளர்ப்புப் பற்றி பேசிய விஷயங்கள் கவனிக்கத்தக்கவை.

‘‘சில பெற்றோர்கள் பண்ற தப்பே... தங்களோட குழந்தைகள் அவங்க இழுத்த இழுப்புக்கெல்லாம் வரணும்னு எதிர்பார்க்கிறதுதான். ‘என் குழந்தையை எப்படியாவது டாக்டராக்கிடணும், இன்ஜினீயர் ஆக்கிடணும்’னு அவங்க ஆசைகளை, பேராசைகளை எல்லாம் குழந்தைகள் மேல திணிக்க ஆரம்பிச்சிடுறாங்க. அது நடக்காமப் போன, ஏமாற்றம் கோபமாகி, ‘நீ ஒண்ணுக்கும் லாயக்கில்ல’, ‘நான் உனக்காக எவ்வளவு கஷ்டப்படுறேன் தெரியுமா?னு பெரிய பெரிய வார்த்தைகளையும், பொறுப்புகளையும் குழந்தைகளுக்குத் தர்றாங்க. ஆனா என் பொண்ணு நியத்திக்கு, நான் அந்த மாதிரி சூழல் எதுவும் இதுவரை தந்ததில்ல. அவ என்ன படிக்க ஆசைப்படுறாளோ, அவளால என்ன முடியுதோ அதுக்குதான் முக்கியத்துவம் தருவேன். இதுதான் என்னோட செயல்பாடு.

குறைவான மதிப்பெண் எடுத்தா, ‘பரவாயில்லைடா, உன்னால எவ்வளவு படிக்க முடியுமோ அவ்வளவு படி போதும்’னு சொல்லுவேன். நல்ல மதிப்பெண்களோட வந்தா ஒரேயடியா கொண்டாடாம, ‘குட்’னு சின்னதா தட்டிக் கொடுப்பேன்.

என்னைப் பொருத்தவரை பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புகள் எல்லாமே, உலக மற்றும் வாழ்வியலுக்கான விஷயங்களை தெரிந்துகொள்வதற்கான கூடங்கள் மட்டுமே. மனப்பாடம், மதிப்பெண்னு ஒரு அசட்டு உலகத்துல என் குழந்தையை ஒருபோதும் வற்புறுத்தித் தள்ள மாட்டேன்!’’ - தேவதர்ஷினி முடித்தபோது, அவர் குழந்தை நியத்தியை, குழந்தையாக வளர்த்துக்கொண்டிருக்கும் அந்த அம்மாவைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை!

- வே. கிருஷ்ணவேணி -

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்