ஃபேஸ்புக் விமர்சனம் ஆரோக்கியமானதே: இயக்குநர் ஜனநாதன் பேட்டி! | Director jananathan Interview!

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (19/05/2015)

கடைசி தொடர்பு:15:01 (19/05/2015)

ஃபேஸ்புக் விமர்சனம் ஆரோக்கியமானதே: இயக்குநர் ஜனநாதன் பேட்டி!

வியாபார நோக்குடன் இயங்கும் திரையுலகில், அரிதாக சில திரைப்படங்கள் வியாபாரத்தை புறந்தள்ளி, மக்கள் நலனை பேசும். இருப்பினும் அரிதாகத்தான் அவற்றில் சில வெற்றிபெறும். 

அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான புறம்போக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. 

கலகலப்பான படங்களுக்கு மத்தியில் அரசியலை ஆழமாக பேசும் புறம்போக்கு படத்தை இயக்கி இருப்பவர், இயக்குநர் ஜனநாதன்.  தனது படத்தை ரசிகர்கள் எப்படி உள்வாங்குகிறார்கள் என கவனிக்க தமிழகம் முழுக்க முக்கிய நகரங்களுக்கு சென்று வரும் ஜனநாதன், திருச்சி வந்தார். 


வெற்றிக்களிப்பில் இருந்த அவரிடம் பேட்டி கேட்டோம். கண்ணாடியை செருகிக் கொண்டு ஆழமான பார்வையுடன் நம் கேள்விகளை உள்வாங்கி பதிலளிக்க ஆரம்பித்தார் அவர். 

புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்திற்கான வரவேற்பு எப்படி உள்ளது?


நாங்கள் நினைத்தைவிட நன்றாக உள்ளது. சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தியேட்டர்கள் நிரம்பி வழியும் அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நல்ல படங்களை மக்கள் ஆதரிப்பார்கள் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கு,

தொடர்ச்சியாக அரசியல் படங்களே எடுக்கிறீர்கள். இப்படிதான் படம் எடுக்கவேண்டும் என எதாவது வைராக்கியமா ?

அப்படி கிடையாது. (மௌனமாக சிரிக்கிறார்). ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு கண்ணோட்டம் இருக்கும். எனக்கு நான் காண்கிற, கவனிக்கிற விஷயங்களில் என்னை பாதிக்கின்ற சமூக பிரச்னைகளை மையமாக வைத்து  படம் எடுக்க நினைக்கிறேன். அப்படித்தான் எடுத்தும் வருகின்றேன்.

புறம்போக்கு என்கிற பொதுவுடமையை திரைப்படத்தை பொறுத்தவரை சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்போல, பாலு என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யா, 5 குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி.  பாலு என்பவர் பிரிட்டிஷ் காலத்தில் அரசால் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட ஒரு மதுரைகாரர். ஆட்சி மாற்றம் நடந்த பிறகு அவருக்கு விடுதலை கிடைக்கும் எனும் நினைத்திருந்தநிலையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.  அதனால் பாலு என்கிற பெயரை ஆர்யாவுக்கு சூட்டினேன். குயிலியும் அப்படித்தான் உருவானாள்.

பாலுவுக்கு தண்டனை பெற்று தர துடிக்கும் போலீஸ் அதிகாரியான மெக்காலே பாத்திரத்தில் நடிகர் ஷாம், பாலுவுக்கு தூக்குப்போட மறுக்கும் எமலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதியும் நடித்திருக்கிறார்கள்.

மரண தண்டனை வேண்டாம் என உலகில் பல நாடுகள் கூறி வருகின்றன. கல்லால் அடித்துகொல்வது, சுட்டுக்கொல்வது என மரணதண்டனை பலவகை  இருக்கு, இந்தியாவில் மட்டும்தான் துன்புறுத்தாமல் மரணதண்டனை வழங்கும் தூக்கு தண்டனை உள்ளது

என்னைப் பொறுத்தவரையில் தூக்குத் தண்டனை கொடுமையான விஷயம். அது சரியா தவறா என்பதை படத்தை பார்க்கும் ரசிகர்கள் சிந்தனையில் விட்டு விடுகிறேன்.  ஒரு போராளி இறந்தால் மற்றொரு போராளி உருவாக்கப்படுகிறான் என்பதை முன்வைத்தே நாயகனின் இறப்பை பதிவு செய்தேன்..

படத்தில் கம்யூனிசம், தமிழ்தேசியம், இன விடுதலை என பலப்பல அரசியலை பேசியிருக்கிறீர்களே, நெருக்கடிகள் இருந்திருக்குமே?


பேராண்மை படம் எடுத்தபிறகு படம் சென்சாருக்கு போனது ஆயிரம் அடி, 18 நிமிடம் கட் செய்யப்பட்டது. இதனால் படத்தில் கோர்வை இல்லாத நிலை, ஏற்பட்டது. ஆனாலும் அந்தபடம் நல்ல ஹிட் கொடுத்தது. அதனால் இந்தமுறை செய்திதாள்களில் நான் படிக்கின்ற பார்க்கின்ற விஷயங்களை தொகுத்து ஆதாரமாக சென்சார் போர்டில் காட்டினேன். அதனால் இந்தமுறை கத்திரிக்கோல் பிரச்னை இல்லை. ஆனால் யூ சர்டிபிகேட் கொடுப்பதில் சிக்கல் எழந்தது. யூ / எ தான் கிடைத்தது. இதனால் இந்த படத்தை தமிழக அரசுக்கு அனுப்ப முடியாத நிலை, இதன்காரணமாக எனக்கு 25 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டது. படத்திற்கு மக்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு அதை மறக்கச் செய்துவிட்டது.

உங்களின் அடுத்த படம் எப்படியிருக்கும் ?

அடுத்த படத்தை நிச்சயம் காதலை மையமாக வைத்துதான் எடுக்கபோகிறேன். காதலும் செக்ஸும் வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதை அந்தபடம் பிரதிபலிக்கும். பெரியார், மார்க்ஸ் போன்ற பெரியவர்கள் படுக்கையறையில் இருந்துதான் தத்துவங்கள் பிறப்பதாக பதிவு செய்துள்ளார்கள். காதலும் செக்ஸையும் வைத்து வித்தியாசமான பார்வையில் அந்த படம் இருக்கும்.

இன்றைய இளைஞர்கள் உங்கள் படங்களை ஏற்றுக்கொள்கிறார்களா அல்லது நிராகரிக்கிறார்களா ?

நிச்சயமாக, பேராண்மை படம் எடுக்கும்போது இதே சந்தேகம் எனக்கும் இருந்தது. அந்த படத்தில் ஜெயம் ரவியை ஒரு பழங்குடியின இளைஞனாக காட்டியிருப்பேன். அவர் மிக நேர்மையானவர், அவருடன் 5 அழகிய பெண்கள் இருந்தாலும் அவர் அப்படி இப்படியெல்லாம் இல்லை. இதை இளைஞர்கள் ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என நினைத்திருந்தேன். ஆனால் பேராண்மை படத்தை நிறைய இளைஞர்கள்தான் பார்த்தார்கள். 

இன்றைய இளைஞர்கள் இப்படிதான் என சொல்ல முடியாது. அவர்களுக்கு அதிகம் சமூக அக்கறை இருக்கு. அவர்கள்தானே குடும்பத்தை கவனிக்கிறாங்க, அப்பா அம்மாவை பார்த்துக்கிறாங்க. அவர்களுக்கு சமூக அக்கறையில்லைன்னா யாருக்கு இருக்கும் சொல்லுங்க..அதுதான் இந்த படத்தையும் வெற்றிப்படமாக்கியிருக்கு.

பண்டிகை காலங்களில் படம் வெளியிடாமல் சாதாரண நாட்களில் படம் வெளியிடுகிறீர்கள் இது என்ன புதுயுக்தியா ?

பெரிய பெரிய பட்ஜெட் படங்களோடு போட்டி போட, எங்களைபோன்ற சிறு பட்ஜெட் படங்களை எடுப்பவர்களால் முடியாது. விளம்பரம் செய்வதுகூட கடினம். அதனால் சாதாரண நாட்களில் படம் வெளியிட்டோம். இந்த படம் மே 1ந்தேதி வெளியிடுவதாக திட்டமிட்டோம். சில தவிர்க்க முடியாத காரணங்களினால் 15 ந்தேதி வெளியானது.

பேராண்மைக்கு பிறகு நீண்ட இடைவெளி ஏன் ?

பேராண்மைக்கு பிறகு ஒரு படம் எடுக்க முயற்சிகள் நடந்தது. ஆனால் அது டிராப் ஆகிடிச்சி. இடையில் தமிழக திரைப்பட சங்கத்தின் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இரண்டுவருடம் சங்க பணிகள் செய்வதில் சரியாக இருந்தேன். கடந்த  50வருடமாக தமிழக திரைப்பட சங்கத்துக்கு ஒரு கட்டடம் இல்லை. ஏ.பி.நாகராஜன் காலத்தில் இருந்து அந்த முயற்சி இருந்தது. எனது காலத்தில்தான் நிறைவேறியிருக்கு. ஒரு கட்டடம் கட்டி முடிக்க எவ்வளவு காலம் ஆகும்னு உங்களுக்கு தெரியும் அதுதான் காலதாமதம்.

அரசை எதிர்க்கும் இனவிடுதலை போராட்டங்கள் வெற்றியடைய சாத்தியமில்லை என உங்கள் படத்தில் மெசேஜ் சொல்லப்பட்டுகிறதே ?

உண்மையான வர்க்க பாகுபாடுகளை கருத்தில் கொள்ளாமல், அதை ஒழிக்காமல் எந்த போராட்டமும்  வெற்றி பெற  சாத்தியமில்லை என்றார் மார்க்ஸ். அப்படித்தான் சாதிய முரண்பாடுகளை களையாமல் இனவிடுதலை சாத்தியமில்லை என்கிறேன். இதிலென்ன தவறு இருக்கிறது.

இளைஞர்கள் இன்றைய யுகத்தில் பல அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆர்வலராக அறிவாளிகளாக இருக்கிறார்கள் அவர்களுக்கு ஏற்றபடி படம் பண்ணுவது சிரமமில்லையா?

உண்மைதான். இப்போது உள்ள இளைஞர்களும் சரி, ரசிகர்களும் சரி பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நொடிக்கு நொடி அப்டேட்டாக இருக்கிறார்கள். அவர்களை ஒவ்வொரு காட்சிகளிலும் திருப்திபடுத்த வேண்டுமென்பது மிகவும் கஷ்டம்தான் ஆனாலும் இயக்குநராக இருக்கும் ஒருவர் இதை சரிசெய்ய, எல்லா விஷயங்களிலும் தன்னை அப்டேப் செய்துகொண்டே இருக்கனும் இல்லையெனில் நிறைய கஷ்டப்பட வேண்டியிருக்கும்,

சமீப காலங்களாக  சமூக வலைதளங்களில் திரைப்படங்களை  விமர்சனம் செய்யும் போக்கு அதிகரித்திருக்கிறது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


என்னை பொறுத்தவரை இது ஆரோக்கியமான விஷயம். பணம் கொடுத்து தியேட்டரில் படம்பார்க்கும் ரசிகர்களுக்கு அந்த படத்தை பற்றி விமர்சனம் செய்யலைன்னா யார் செய்வது. அடித்துச் சொல்கிறேன், இது சினிமாவுக்கு ஆரோக்கியமான விசயம்தான்.

- சி.ஆனந்தகுமார்
படங்கள்: தே.தீட்ஷித்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்