Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தல’ன்னா அஜித், தளபதி’ன்னா விஜய், மாஸ்’ன்னா சூர்யா! வெங்கட் பிரபு பேட்டி

'' 'துதான் கதை’னு ஆன்லைன்ல அலையடிக்கிற எதுவுமே 'மாஸ்’ கதை இல்லை. நெட்ல வர்ற நிறையக் கதைகள் இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. டிஸ்கஷன் டைம்ல கிடைச்சிருந்தா, பட ஸ்கிரிப்ட்ல சேர்த்திருப்பேன். ரொம்ப யோசிக்காதீங்க நெட்டிசன்ஸ்... சம்மர் ஹாலிடேஸ் வரை கொஞ்சம் காத்திருங்க. சீக்கிரமே வந்துடுறோம்!'' - 'மங்காத்தா’ ஆடினாலும் சரி, 'மாஸ்’ ஆக மாறினாலும் சரி... அதே 'சென்னை-28’ குறும்புடன் பேசுகிறார் வெங்கட் பிரபு. சூர்யாவின் 'மாஸ்’ படத்தை கோடை விடுமுறையில் கொண்டுவரும் முனைப்புடன் பரபரவென இருப்பவரை, டப்பிங் தியேட்டர் டு எடிட்டிங் ஸ்டுடியோ பயணத்தில் பிடித்தேன். ''இந்த ஸ்கிரிப்டை சூர்யா ஓ.கே பண்ணக் காரணமே இதோட ஒன்லைன்தான்.

அதை இன்ட்ரஸ்ட்டிங்கான ஸ்கிரீன்பிளேவா பண்ணியிருக்கோம். ஹாரரா, த்ரில்லரானு சின்ன லீடு கொடுத்தாலே நம்ம ரசிகர்கள் அதுக்குள்ள புகுந்து பெரிய வீடே கட்டிடுவாங்க. முதல் ஷோ வரைக்குமாவது படத்துக்கான எதிர்பார்ப்பை தக்கவைக்கவேண்டியிருக்கு. இதுவரை நான் பண்ணின படங்கள், காட்சிகளின் தொகுப்பாத்தான் இருக்கும். ஆனால், 'மாஸ்’ல முதல்முறையா கதை சொல்ல முயற்சி பண்ணியிருக்கேன். 'இந்த உலகத்துல ஏமாத்தினால்தான், பிழைக்க முடியும்; வெற்றிகரமா வாழ முடியும். பணம்தான் பிரதானம்னு நினைக்கிற ஒருத்தன், அவனைக் காலி பண்ணத் துடிக்கிற இன்னொருத்தன். அவங்களைச் சுத்தி நடக்கிறதுதான் 'மாஸ்’. பொழுதுபோக்கு, பணத்துக்காகத்தான் சினிமா பண்றோம். 'மாஸ்’ல அதையும் தாண்டி தெளிவான ஒரு கதை சொல்லல் இருக்கும். கண்டிப்பா இது சம்மர் ட்ரீட். இதில் சூர்யாவின் கேரக்டர் பேர்தான் 'மாஸ்’. எனக்கு ஒரு ஆசை உண்டு. 'தல’ன்னா அஜித் சார், 'தளபதி’ன்னா விஜய் சார்னு அவங்களோட ரசிகர்கள் அடையாளப்படுத்துற மாதிரி, 'மாஸ்’னா சூர்யானு ரசிகர்களால் அடையாளப்படணும்.''

''உங்களோட வழக்கமான டீம்ல இருந்து முதல்முறையா வெளிய வந்து படம் பண்றீங்க. அந்த அனுபவம் எப்படி இருக்கு?''

''உண்மைதான். சிவகுமார் சார்கூட, 'டேய்... இவன் கார்த்தி மாதிரி கிடையாதுடா. கொஞ்சம் பாத்து நடந்துக்க’னு படம் ஆரம்பிக்கும்போதே சொன்னார். எனக்கும் உள்ளுக்குள்ள அள்ளுதான். ஆனால், சூர்யா சார் இந்தப் படத்துலதான் இப்படி இருக்காரா, இல்லை எப்பவுமே இப்படியானு யோசிக்கவைக்கிற அளவுக்கு செம கூல். வழக்கமா என் பட ஷூட்டிங் ஸ்பாட்னா, ஜாலி கேலியா இருக்கும். அந்த அரட்டை, 'மாஸ்’ ஸ்பாட்ல கொஞ்சம் மிஸ்ஸிங். ஆனா, நான் அமைதியா இருக்கேன், எங்க எல்லாருக்கும் சேர்த்து சூர்யா சார் ஜாலி பண்ணிட்டு இருக்கார். அதேபோல, நயன்தாரா வந்ததும் சுவாரஸ்யம். 'ஒரு சின்ன கேமியோ பண்ணணும்’னு 'கோவா’வுக்காகக் கூப்பிட்டப்போ, உடனடியா வந்து நடிச்சுட்டுப் போனாங்க. 'பெரிய கமர்ஷியல் படம் பண்ணும்போது, கண்டிப்பா உங்களைக் கூப்பிடுவேன்’னு சொல்லியிருந்தேன். அது இப்ப நடந்திருக்கு. கேமராமேன் ஆர்.டி.ராஜசேகர், ஆர்ட் டைரக்டர் ராஜீவன்னு டெக்னீஷியன்கள் உள்பட எல்லாருமே எனக்குப் புதுசு. அது உங்களுக்கும் புது அனுபவம் தரும்னு நம்புறேன்.''

'' 'மங்காத்தா’, 'பிரியாணி’னு மாஸ் மசாலா பண்ற உங்களுக்கும் சூர்யாவுக்குமான காம்பினேஷன் எப்படி வந்திருக்கு?''

''சூர்யாவின் ஸ்பெஷலே அவரை எல்லா தரப்புக்கும் பிடிக்கும் என்பதுதான். இதில் குழந்தைகளையும் டார்கெட் பண்ணியிருக்கோம். அதனாலதான் சம்மரை மிஸ் பண்ணிடக் கூடாதுனு ஓடிட்டே இருக்கோம். படத்தில் கிராஃபிக்ஸ் வேலைகள் அதிகம். சென்னை, மும்பைனு ரெண்டு இடங்கள்ல பரபரப்பா வேலை நடக்குது. முதல்முறையா எமோஷன்ஸ் முயற்சி பண்ணியிருக்கேன். தனக்கும் இது புது முயற்சினு சூர்யா ஒப்புக்கிறார். அதை நீங்களும் நிச்சயம் வரவேற்பீங்கனு நம்புறேன்.''

''யுவனின் இசை, உங்க படங்களில் தவிர்க்க முடியாதது. ஆனால், அவருக்குப் பதிலா தமன் மியூசிக் பண்றார்னு ஒரு தகவல். யுவனுடன் என்னதான் பிரச்னை?''

'' 'மாஸ்’க்கு யுவன்தான் இசை. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். யுவனை மாத்திட்டதா வந்த தகவல் ஒரு வதந்தி. 'யுவன்கூட ஒரு பாட்டாவது வொர்க் பண்ணணும்ணா. கேட்டுச் சொல்லுங்க’னு தமன் அடிக்கடி கேட்பான். அதாவது யுவன் டியூனுக்கு இசைக் கலைஞர்களை வெச்சு இசைக்கோர்ப்பு பண்ணணும்னு விரும்பினான். 'சரோஜா’வில்கூட யுவனோட இரண்டு டியூன்களுக்கு பிரேம்ஜிதான் இசைக்கோர்ப்பு. 'பிரியாணி’யில் யுவன், இமான், ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, தமன்னு ஐந்து இசையமைப்பாளர்கள் சேர்ந்து பாடின பாட்டு கம்போஸ் பண்ணும்போது தமன் தன் விருப்பத்தை யுவன்கிட்ட சொல்லியிருக்கான். யுவனும் அதுக்கு ஓ.கே சொல்ல... அப்படித்தான் தமன் இதுல ஒரு பாட்டுக்கு இசைக்கோர்ப்பு பண்ணினான். அது வேறமாதிரி வதந்தியாயிடுச்சு. எனி வே... அந்த ஃப்ரீ பப்ளிசிட்டிக்கும் நன்றி.''

''பார்த்திபன், சமுத்திரக்கனினு காஸ்டிங்ல இயக்குநர்கள் லிஸ்ட் இருக்கே. என்ன ஸ்பெஷல்?''

''சமுத்திரக்கனியின் முதல் படமான 'உன்னை சரணடைந்தேன்’ல நான்தான் ஹீரோ. இப்ப நான் டைரக்ட் பண்ணும் படத்துல அவர் நடிப்பது எனக்கான பெருமை. ரெண்டு பேருக்குமே எல்லா விஷயங்கள்லயும் செமையா செட் ஆகும் . டைரக்ஷன் பண்ணிட்டு இருந்தாலும் இன்னைக்கு அவர் பிஸியான நடிகர். நான் கேட்டதும் சந்தோஷமா நடிக்க ஒப்புக்கிட்டார். அதேபோல்தான் பார்த்திபன் சாருக்கும் ஒரு செம கேரக்டர்.''

'' 'மங்காத்தா’ ஸ்பாட்ல அஜித்-விஜய் சந்திச்சப்ப, ஒரே படத்துல ரெண்டு பேரையும் இயக்கணும்னு உங்கள் விருப்பத்தை சொன்னீங்களே... என்ன ஆச்சு?''

''தல படம் பண்ணியாச்சு. இப்ப சூர்யா படம் பண்றேன். விஜய் சாருக்குப் படம் பண்ணணும்கிற விருப்பம் இருக்கு. இப்பகூட விஜய் சாரை 90 ரீயூனியன்ல பார்த்தேன். பேசினோம். அவருக்கு ஒரு கதை ரெடி பண்ணிட்டு இருக்கேன். இப்பவே ஒரு பிட்டைப் போட்டுவைப்போம்!''

 

ம.கா.செந்தில்குமார்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்