தனுஷ் படத்தில் சிம்பு நடித்தது எப்படி? - ’காக்கா முட்டை’ இயக்குநர் மணிகண்டன் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி! | How Simbu acted In Dhanush's Film - Director Manikandan Interview

வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (05/06/2015)

கடைசி தொடர்பு:16:23 (05/06/2015)

தனுஷ் படத்தில் சிம்பு நடித்தது எப்படி? - ’காக்கா முட்டை’ இயக்குநர் மணிகண்டன் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

ர்வதேச திரைப்படவிருதுகள், தேசியவிருதுகள் என்று பல விருதுகளைக் குவித்திருத்திருக்கும் காக்காமுட்டை படத்தின் இயக்குநர் மணிகண்டனிடம் ஓர் உரையாடல்.

யாரிடமும் உதவிஇயக்குநராக இல்லாமலே இந்தப்படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றது எப்படி?

நான் உதவிஒளிப்பதிவாளராகப் பல ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். 2010 இல் நான் இய,க்கிய குறும்படமொன்றை வெற்றிமாறன் பார்த்திருந்தார். அப்போதே என்னைத் தெரியும். அதன்பின் ஒராண்டு கழித்து என்னைக் கூப்பிட்டு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார். இந்தப்படத்தின் கதையைச் சொன்னேன். உடனே தாம் தயாரிப்பதாகச் சொன்னார்.

ஒளிப்பதிவாளராக முயலாமல் இயக்குநரானது ஏன்?

நான் ஒளிப்பதிவாளர் ஆகத்தான் முயன்றுகொண்டிருந்தேன். சில வாய்ப்புகளும் வருகிறமாதிரி இருந்தது. அப்போது என்னுடைய குறும்படங்களைப் பார்த்த நண்பர்கள், நீங்கள் இயக்குநராகவே இருக்கலாமே என்று சொன்னார்கள். எனவே படம் இயக்கும் எண்ணத்துக்கு வந்தேன். படம் இயக்குவோம் சரியாக வரவில்லையென்றால் ஒளிப்பதிவில் மட்டும் கவனம் செலுத்துவோம் என்று முடிவுசெய்துதான் இதில் இறங்கினேன்.

காக்காமுட்டை என்று பெயர் வைத்தது எதனால்?

நாம் புறாவுக்கோ கிளிக்கோ கொடுக்கிற முக்கியத்துவத்தைக் காக்கைக்குக் கொடுப்பதில்லை, அது கறுப்பாக இருப்பதாலேயே ஒதுக்கப்படுவதாக உணர்கிறேன் அதுவே வெள்ளையாக இருந்திருந்தால் எல்லோரும் கொண்டாடியிருப்பார்கள் என்று தோன்றியது. எனவே கறுப்பாக இருப்பவர்களைப் பிரதிநிதித்துவம் செய்கிற மாதிரி காக்காவை வைத்தேன். படத்தில் வருகிற மாதிரி நிஜத்திலும் காக்காமுட்டை குடிப்போம் என்று சொல்லியிருந்தார்கள். அதனால் அந்தப்பெயரை வைத்தேன். தொடக்கத்தில் ஒர்க்கிங்டைட்டிலாகத்தான் வைத்தேன். கேட்கிற எல்லோருக்கும் அது பிடித்திருந்ததால் அப்படியே வைத்துவிட்டோம்.

படத்தில் நடித்த சிறுவர்களைத் தேர்வு செய்தது எப்படி?

காசிமேட்டில் அண்ணாநகர்குப்பம் என்று இருந்தது. (இப்போது இல்லையாம்) அந்தக் குப்பத்தில் இருந்த இந்தச்சிறுவர்களை ரெபரன்ஸ்க்காக படமெடுத்து வந்தேன். அவர்களை நடிக்கவைக்கும் எண்ணமில்லை. படங்கள் மற்றும் தொலைக்காட்சித்தொடர்களில் நடிக்கும் சிறுவர்களை நடிக்கவைத்துப் பார்த்தோம். எதுவும் சரியாக இல்லை. அதன்பின் இந்தச்சிறுவர்களை அழைத்து வந்து இரண்டுமாதங்கள் பயிற்சி கொடுத்தோம். கூத்துப்பட்டறையிலிருந்து முத்துக்குமார் என்றொருவர் வந்து நடிப்புச் சொல்லிக்கொடுத்தார்.

படப்பிடிப்பில் சரியாக நடித்தார்களா?

படப்பிடிப்பு தொடங்கி ஒருவாரம் சிரமப்பட்டார்கள். அதன்பின் சரியாகச் செய்யத் தொடங்கினார்கள். கடைசிக்கட்டத்தில் தேர்ந்த தொழில்முறை நடிகர்கள் போல் ஆகிவிட்டார்கள். எடுக்கும் போதே விருதுகளுக்கான படம் என்று முடிவு செய்தது எதனால்? விருதுக்கான படம் என்று நினைத்து எடுக்கவில்லை, இப்போது இருக்கும் தரத்தில் சரியாக இருக்கவேண்டும் என்று உறுதியாக இருந்தேன். எடுக்கும்போதே இப்படித்தான் எடுப்பேன் என்பதைச் சொல்லிவிட்டேன். அவர்களும் அதை அப்படியே ஒப்புக்கொண்டு எடுக்கச்சொன்னார்கள்.

தனுஷ் தயாரிக்கும் படத்தில் சிம்புவை நடிக்கவைப்பதென்று முடிவு செய்தது எப்படி?

நான் கதை எழுதும்போதே சிம்பு என்றுதான் எழுதினேன். அதற்குக் காரணம் சிறுவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது சிம்புவை அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பது தெரிந்தது. அதனால் அப்படி எழுதினேன். இந்தப்படம் தனுஷ் கைகளுக்குப் போனதும், எனக்கே ஒரு தயக்கம் வந்தது. ஆனால் தனுஷ் இதைக்கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டதோடு அவரே சிம்புவிடமும் பேசி ஒப்புக்கொள்ளவைத்தார். சிம்புவும் பெரிதாகக் கேள்விகள் கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டார். சிம்புவுக்கும் தனுஷூக்கும் சிக்கல் என்று வெளியில்தான் சொல்லப்பட்டது. அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதைப் பார்த்தால் இருவருக்கும் நல்லபுரிதல் இருப்பது தெரியும். படத்தில்,

சிம்புவை அவன்இவன் என்று பேசுவதெல்லாம் அவருக்கு முன்பே தெரியுமா?

எல்லாமே அவருக்குத் தெரியும், அவருடைய மெச்சுரிட்டிலெவல் இந்தப்படத்தின் மூலம் நான் நன்றாக உணர்ந்துகொண்டேன். என்ன படம்? என்ன கதை?காட்சியின் நோக்கம் எல்லாவற்றையும் உணர்ந்து நடித்தார். பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்பதுகூட, இப்படித்தான் இருக்கும் என்று முன்பே சொல்லிவிட்டேன். அவரும் இப்படித்தானே இருக்கிறது அப்படியே செய்துவிடலாம் என்று சொன்னார். தயங்கிக்கூடச் சரி என்று சொல்லவில்லை கேட்டவுடனே சரி என்றார்.

விருதுக்குழுவினர்களிடம் அங்கீகாரம் பெற்றுவிட்டீர்கள், வெகுமக்களிடம் வரவேற்பு எப்படியிருக்கும் என்கிற பதட்டம் இருக்கிறதா?

திரைப்படவிழாக்களில் இந்தப்படம் திரையிடப்பட்டபோதே ஜெனரல்ஆடியன்ஸ் என்று சொல்லப்படுகிற நிறையப்பேர் படத்தைப் பார்த்துவிட்டு மிகவும் வரவேற்றுப்பேசினார்கள். விருதுகள் வாங்கியதைவிட அது அதிகசந்தோசத்தைக் கொடுத்தது. எனவே வெகுமக்களும் இந்தப்படத்தைப் பெரிதும் வரவேற்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.

நீங்கள் அடுத்து இயக்கியிருக்கும் குற்றமும் தண்டனையும் படம் பற்றி?

நான் முதலில் இயக்க ஒப்புக்கொண்டது அந்தப்படம்தான். அது சில மாதங்கள் தள்ளிப்போன நேரத்தில் இந்தக்கதையை எழுதினேன். எழுதியவுடன் இது முதல்படமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது எனவே விதார்த்திடம் சொல்லிவிட்டு இந்தப்படத்தை முடித்துவிட்டு அதைத் தொடங்கினேன். அந்தப்படமும் தயாராகிவிட்டது. இளையராஜாவின் இசைக்காகக் காத்திருக்கிறோம். அது காக்காமுட்டையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

- அ.தமிழன்பன் -

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்