இன்றுநேற்றுநாளை படம் மூலம் பாப்புலராயிட்டேன் - மகிழும் காந்தி கனக ராஜ் | Gandhi Kanagaraj

வெளியிடப்பட்ட நேரம்: 15:33 (03/07/2015)

கடைசி தொடர்பு:16:36 (03/07/2015)

இன்றுநேற்றுநாளை படம் மூலம் பாப்புலராயிட்டேன் - மகிழும் காந்தி கனக ராஜ்

காந்திய வழியில் மட்டுமே நடக்கவேண்டும். காந்தியமும் திருக்குறளுமே நம்முடைய வாழ்க்கையை மாற்றும் என்று காந்தியை பின்பற்றுபவர் மட்டுமில்லாமல் காந்தி மாதிரியே இருப்பவர் தான் காந்தி கனகராஜ். இன்று நேற்று நாளை படத்தின் விஷ்ணுவும், கருணாகரனும் டைம் மிஷின் மூலமாக கடந்த காலம் சென்று காந்தியுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வது போல ஒரு காட்சி வரும் அதில் காந்தியாக நடித்தவர் தான் இந்த கனகராஜ் தாத்தா. யாரு இவரு... காந்திக்கு டூப் போட்டவரு மாதிரி இருக்காரே என்று வலைவிரித்ததில் சிக்கியவரிடம் கேள்விகளை கேட்க, தன்னுடைய அனுபவங்களைப்  பகிர்ந்துகொண்டார்.

எனக்கு ஊரு அருப்புக்கோட்டை அருகில் ஒரு கிராமம். பி.எஸ்சி படிச்சேன். மெடிக்கல் ரெப்பாக பணிபுரிய ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் சினிமாவில் சாதிக்கவேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருந்தது. பின்னர் பாண்டியராஜனிடம் உதவியாளராக இருந்தேன். நிறைய விளம்பரங்களில் நடித்தேன். அப்படியே வாழ்க்கை சென்றது அப்புறம் சின்னபாப்பா பெரியபாப்பா, சித்தி உட்பட சீரியல்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். காந்தியை பற்றி சிறுவர்கள் படிக்கனும், புரிஞ்சிக்கனும் என்று ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கி பள்ளிகளில் சிறுவர்களுக்கு காந்தி பற்றி சொல்லி கொடுத்துட்டுவரேன்.

முதல் முறையா உங்கள காந்திமாதிரி இருக்கார்னு யாரு சொன்னது?


என் பக்கத்து வீட்டு நண்பர் சம்பத் தான் நீங்க காந்திமாதிரி இருக்கீங்கன்னு சொல்லி, ரமணா கம்யூனிகேஷன் கூட்டிட்டு போனாரு. அப்போ விஜய் டிவியில் கிங் மேக்கர் என்ற நிகழ்ச்சி, அதில் காந்தியாக நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த தொடரின் இயக்குநர் பால கிருஷ்ணாவுக்கு என் தோற்றம் பிடித்துப்போக, அவர் இயக்கத்தில் வெளியான காமராஜ் படத்திலும் காந்தியாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்தை டிஜிட்டலில் மாற்றி மீண்டும் வெளியிட வேலைகள் நடந்துவருகிறது.  அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் காத்து கருப்பு என்ற நிகழ்ச்சியில் தேசத்தந்தை போன்ற ஒரு காட்சிக்காக ஒரு எப்பிசோடுக்கு மட்டும் காந்தியாக நடித்துகொடுத்தேன். அதற்கப்புறம் எல்லோருமே நீங்க காந்தி மாதிரியே இருக்கீங்ககன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. 

பொதுமக்கள் எல்லோரும் உங்கள எப்படிப் பாக்குறாங்க?

ரயிலுல, பஸ்ல எங்க போனாலும் நீங்க காந்திமாதிரியே இருக்கீங்கனு பக்கத்துல இருக்குறவங்க சொல்லுவாங்க. நான் காந்தி மாதிரி மேல் சட்டை போடாமல் போய்ட்டா போதும் உடனே என்னோட போட்டோ எடுத்துக்க  ஆசைப்படுவாங்க. காந்தியாவே பாக்குறாங்க. மரியாதையோட நடத்துராங்க. அது காந்தியோட பவர். எனக்கு ப்ளஸ்.

இன்று நேற்று நாளை பட வாய்ப்பு எப்படி வந்தது?


இந்த படத்தோட அசோசியேட் இயக்குநர் சரவணன் என்னைப்பற்றி தெரிந்து என்னிடம் வந்து கேட்டாரு. உடனே ஓகே தான். அடுத்த நாளே ஷூட்டிங் போயாச்சு. ஒரு சீன்ல காந்தியோட விஷ்ணு விஷால் செல்ஃபி எடுத்துப்பாரு. அந்த ஒரு சீன்லயே ரொம்ப பாப்புலர் ஆயிட்டேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு.

இன்று நேற்று நாளை படத்தைப்போல உங்களுக்கு டைமிஷின்ல காந்திய பார்க்கிற வாய்ப்பு கிடைச்சா என்ன பேசுவீங்க?

உங்களுக்கு கிடைக்க வேண்டிய புகழ், மரியாதையை மக்கள் எனக்கு கொடுக்குறாங்க. உங்க அளவுக்கு நான் ஏதும் செய்துவிட வில்லை. ஆனால் அதை செய்வதற்கான ஆற்றலை தரணும்னு கேட்டுப்பேன். நீங்க விட்ட பாதையில் நானும் காந்திய கொள்கைகளை பின்பற்றி நடப்பேன் என்று உறுதி கொடுப்பேன். அப்புறம் ஒரு போட்டோ எடுத்துப்பேன். ஒரிஜினல் காந்தியையும், என்னையும் ஒரே போட்டோவில் பார்க்கலாம்ல என்று சிரித்தார் கனகராஜ்.

நெக்ஸ்ட் என்ன ப்ளான் ?

பாலகிருஷ்ணா இயக்கத்தில் முதல்வர் மகாத்மா என்ற படத்தில் காந்தியாகவே நடிக்கிறேன். முக்கால் பாக வேலைகள் முடிந்து விட்டது.  காந்தியின் வாழ்க்கை சார்ந்த படமாகவே உருவாகிவருகிறது. சீக்கிரமே திரையில் பார்ப்பீங்க. அதுமட்டுமில்ல வேறு ஒரு தனியார் தொலைக்காட்சியிலும் “காந்திய வாழ்வில் திருக்குறள்” என்ற தொடரை ஆரம்பிக்கவுள்ளோம். காந்தியின் வாழ்க்கையில் நிகழ்ந்த விஷயங்களையும், திருக்குறளையும் மையப்படுத்தி ஒரு சீரியல் தொடங்கவுள்ளோம். இவைஎல்லாமே, மக்கள் நல்வழிப்பாதையில் போவதற்கு நம்மால் முடிந்த சில உதவிகள் தானே. செய்யலாமே தப்பில்லையே என்று சொல்லிக்கொண்டே நடந்து சென்றார் காந்தித் தாத்தா உருவில் கனகராஜ்.

பி.எஸ்.முத்து, படங்கள்: நிவேதன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close