ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

எம்.எஸ்.வி பற்றி கங்கைஅமரன், லட்சுமி, சச்சு, செளகார்ஜானகி ஆகியோரின் நினைவலைகள்..!

ன்று இயற்கை எய்திய எம்.எஸ்.வியின் மரணம் யாராலும் ஈடுகொடுக்க முடியாதது. கேரளாவில் பிறந்தபோதும், தமிழ் இசைக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த அவரைப்பற்றி, 'ஒரு சரித்திரம் சாய்ந்துவிட்டது.. ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது'  என்று எம்.எஸ்,வியின் மரணம் பற்றி பேசியிருக்கிறார்கள் சினிமாத் துறையினர்.

செளகார் ஜானகி - நடிகை: நான் நடிச்ச, 'காவியத்தலைவி' படத்துக்கு இசையமைச்சவர் எம்.எஸ்.வி. என்னுடைய மறக்க முடியாத படம் அது. அவரைப்போல ஒரு பவ்யமான கேரக்டருடைய ஒருத்தரை பார்க்க முடியாது. அவரோட மென்மையான சிரிப்புக்கு வேற என்ன நிகராக முடியும் சொல்லுங்க. மியூசிக் போடுறதுக்கு முன்னாடி இன்ஸ்ட்ரூமெண்ட உட்கார்ந்து செட் அப் பண்ற விதம் எல்லாமே எனக்கு மிகப்பெரிய அட்மையர்தான். 'ஒரு நாள் இரவு' பாடலை கண்ணை மூடிக்கேட்க அவ்வளவு நல்லா இருக்கும். நான் நடிச்ச பெரும்பாலான படங்களில் கண்ணதாசன் பாடல்எழுதி, எம்.எஸ்.வி இசை அமைத்தவைதான். அவர் இசையமைத்த படங்கள்ல நடிச்சதையே பெரிய பாக்கியம் என நினைக்கிறேன். 'புதிய பறவை', 'பார் மகளே பார்' படப்பாடல்கள் காலத்தால் என்னிக்குமே அழியாதைவை இல்லியா..? எனக்கு இப்போ வயசு 67- ஆகுது. அவரைப்போல ஒருவரை நான் பார்த்ததே இல்ல அவ்வளவு நல்லபண்பாளர். அந்த மாதிரி ஒரு மியூசிக் டைரக்டர் இனி வர்றது கஷ்டம். இசை இருக்கற வரைக்கும் அவர் பாட்டு ஒலிச்சிட்டே இருக்கும். அதுக்கு எதுக்கு அவார்டு?. மறந்து போறதுக்குத்தான் அவார்டு கொடுப்பாங்க. அவார்டா அவரே இருக்கும் போது, அவருக்கு எதுக்கு அவார்டு.

ஜெயந்தி கண்ணப்பன்: (கவிஞர் கண்ணதாசனின் மருமகள் ) கண்ணதாசனின் அண்ணன் மகளானஇவர் எம்.எஸ்.வி பற்றி பகிந்துகொள்கிறார். 1950 -ல ஆரம்பிக்கப்பட்டது, ஏ.எல்.எஸ் புரொடக்ஷன். இரட்டை சங்கீத வித்வான்கள் எம்.ஸ்.வி மற்றும் ராம மூர்த்தியை அறிமுகப்படுத்தியது. 1950 - ல இருந்து எம்.எஸ்.வி எங்களுக்கு நல்ல அறிமுகம். என்னுடைய சின்ன மாமனார் கண்ணதாசன். தயாரிப்பில், 1952 -ல வெளிவந்த 'பணம்' படத்தில் முதன் முதலில் எம்.எஸ்.வி மற்றும் ராமமூர்த்திய ஏ.எல்.எஸ் புரொடக்ஷன் மூலமா கவிஞர் கண்ணதாசன் அறிமுகப்படுத்தினார். 'பணம்' படத்துக்கு கலைஞர் கருணாநிதிதான் கதை வசனம். விஷ்வநாதன் ராமமூர்த்தியின் கடைசிப்படம் 'சாந்தி' சில கருத்துவேறுபாடுகளால பிரிஞ்சிட்டாங்க.  எங்களோட தயாரிப்புல 60 படங்களுக்கு இசையமைச்சாங்க. குடும்பம், குழந்தைகளை எல்லாம் விட்டுட்டு முழு நேரமும் சினிமாவையே  தேடி கடைசியா கரைகண்டவர் அவர். ரத்த அணுக்களில் எல்லாம்  திறமைகள்  ஒளிந்திருந்தா மட்டுமே இந்தமாதிரியான சாதனையாளரா மாற முடியும். அப்போதெல்லாம் திரைத்துறைக்கு அவ்வளவு ஈஸியா வந்திட முடியாது. பாட்டுப்பாடத்தெரியணும், நடிக்கத்தெரியனும். இவை எல்லாத்திலயும் தேர்ந்திருந்தார் எம்.எஸ்.வி. சின்னவயசுலயே, கேரளாவுல இருந்து இங்க வந்தார். ஒரு வாத்தியார் பாடம் சொல்லிக்கொடுப்பதைப் பார்த்துட்டு, அந்த கேள்வி ஞானம் மூலமா இசையக் கத்துக்கிட்டாங்க. பிறகு அந்த வாத்தியாரே இவரோட ஞானம் கண்டு வியந்துபோய் முறையா இசையை கத்துக்கொடுத்தார். இரண்டுபேருமே நல்ல நண்பர்களாக அறிமுகமாகி விஸ்வநாதன் ராம மூர்த்தி என்கிற அழியாத ஒரு பெயரை உருவாக்கியபெருமை என்னோட மாமனார் கண்ணதாசன் அவர்களுக்குத்தான். அடக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு எம்.எஸ்.வி. இன்றைய இளைய தலைமுறைகள் பலரும் இவரோட வாழ்க்கைய ஒரு முன்னுதாரணமா எடுத்துக்கணும். ஒரு ஐந்து வருடத்திற்கு முன்னாடி நடந்த நிகழ்வுதான், ஒரு விழாவில் அவர் ஒரு இருக்கையில் உட்கார்ந்திருந்தவர், நான் வந்ததும் எழுந்து நின்றார். எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. 'என்னய்யா நீங்க எவ்வளவு பெரிய ஆள் நீங்க ஏன் நிக்கிறீங்க..'னு சொல்லி அவர் கால்ல விழுந்து ஆசீர்வாதம் பெற்றேன். இவ்ளோ பெரியவர், தன்னோட முதலாளியின் மருமகள் என்பதற்காக எழுந்து நின்றார். இப்படி, ரசிகர், பொதுமக்கள், விழாவுல எல்லாம் ஒருவர்கிட்ட எப்படிப் பேசணும் என தெரிந்துவைத்திருந்தவர் அவர். இந்தத் தலைமுறை அவர்கிட்ட இருந்து இதை எல்லாம் கத்துக்கணும்.

சச்சு - நடிகை அவர் ஒரு சரித்திரம். சரித்திரம் என்றால் சாதாரண சரித்திரம் அல்ல. கவிஞர் கண்ணதாசன், சீர்காழிசிவாஜி, எம்.ஜி.ஆர். எம்.எஸ்.வி இவங்க எல்லாம் ஒரு சகாப்தம்னு தான் நான் சொல்லுவேன். 52 - வது பேட்ச் நான். அந்த பேட்ச் எல்லாம் சினிமா உலகின் வரப்பிரசாதம் என்றுதான் சொல்லணும். நான் குழந்தைல இருந்து நடிச்சிட்டு இருக்கறதால... சினிமாவப்பத்தி நிறைய விஷயம் தெரிஞ்சுக்க ஆசைப்படுவேன். அவர்கிட்ட நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். 'மருமகள்'னு ஒரு படம் அந்தப்படத்துல அவர் கம்போஸ் பண்ண பாட்டை எனக்கு சொல்லிக்கொடுப்பார். லிப் மூவ்மண்ட் சரியா வரலன்னா தலையிலேயே செல்லமா கொட்டுவார். அவருக்கு கோபமே வராது. டெய்லி சொல்லிக்கொடுப்பார் 'கர்ணன்' படத்துல வந்த பாட்ட பத்தி அவர்கிட்ட, 'ஏண்ணே , எப்படி இப்படி ஒரு பாட்டுப் போடுறீங்கனு கேட்டேன். நான் எங்கம்மாப் போட்டேன் எல்லாம்வல்ல இறைவன் தான் இந்தப்பாட்ட என் மூலமா பாடியிருக்கார். எல்லாம் சரஸ்வதி கொடுத்ததுன்னு சொல்லுவார்.

ஒவ்வொரு படத்தையும் சர்வசாதாரணமா ஆடியன்சோட சேர்ந்து ரசிப்பார். தலைக்கனமே இல்லாதவர் அவர். இவருக்கு எந்த ஒரு விருதும் கிடைக்கலையேங்கற ஆதங்கம் எனக்கு இருந்தது.. ஒரு ஸ்டேஜூக்கு மேல பத்ம ஸ்ரீ, பத்ம பூசன் எல்லாம் ஒண்ணுமே இல்லன்னு தோணிடுச்சு. இப்பவும் ‘பாலும் பழமும்’.படத்துல ' ரோஜா மலரே ராஜகுமாரி' பாட்டைக் கேட்டா எல்லாருக்கும் என்னோட ஞாபகம் வரும். தமிழ் இசைச் சங்கத்துல வருஷா வருஷம் டிசம்பர் மாதம் எம்.எஸ்,விக்காக மட்டும் ஒரு நாளை ஏ.சி முத்தையா ஐயா ஒதுக்குவாங்க. எம்.எஸ்.வி அவர்களோட குழு மூன்றுமணி நேரம் கவிஞர் கண்ணதாசன் அவர்களுடைய பாடல்களைப் பாடுவாங்க. இந்தப்பாக்கியம் யாருக்கு கிடைக்கும்? இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ப.சிதம்பரம் அவர்களுடைய அண்ணன் பழனியப்பன் அவர்கள்தான். ஒரு முறைஎம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த 'பெரிய இடத்துப்பெண்' படத்தில் 'அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவா...?' என்கிற பாடல் அமைந்த பின்னணி ரொம்ப சுவாரஸ்யமான நிகழ்வு, ஆர்மோனியப்பெட்டியில் டியூன் போட்டப்படி விஸ்வநாதன் அவர்கள் இருக்க, அதை ரசித்தப்படி விஸூ, விஸூ என கவிஞர் நெகிழ, எம்.எஸ்,வி யோ கவிஞரே, கவிஞரே என நெகிழ்ந்துகொண்டிருப்பார். அந்த காட்சியைப்பார்த்தால் நமக்கே அவ்வளவு ஆசை வரும். இப்படித்தான் ஒருநாள் இரவு முழுவதும் வேலை பார்த்துவிட்டு நன்றாக தூங்கி எழுந்து தாமதமா போறாரு எம்.எஸ்.வி. அவரோட வீட்டுக்குப் போன் பண்ணி விசாரிச்ச கவிஞர் கடுப்புல ஒரு பாட்டு எழுதறாரு பாருங்க.. 'அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவா'?' இந்தப் பாட்டு படத்துலயும் அவ்வளவு அருமையா அமைந்திருக்கும். இந்த காம்பினேஷன் கவிஞர்,எம்.எஸ்.வி தவிர வேற யாருக்கு அமையும்?. எல்லாவிதமான மதங்களையும், கடவுளையும் கொண்டாடக்கூடியவர் எம்.எஸ்.வி. ஒருமுறை கடவுள் இருக்கிறாரா..? இல்லையா...? என்கிற கேள்வி வந்தது. அதுக்கு எம்.எஸ்.வி ஒரு பதில் சொன்னார், ''மின்சாரத்தின் மூலம் செயல்படுற பொருட்கள் மூலமா மின்சாரம் இருக்குன்னு உணர்றோம். அது உருவகம்.. அதே மின்சாரம் நம்மைத்தாக்கும்போது ஒரு உணர்வு ஏற்படுதே அதுதான் இறைவன்.

 என்னை எப்பவும் சச்சு குட்டினு தான் செல்லமா அழைப்பார். நான் அண்ணா அண்ணான்னு உருகுவேன். அவருடைய இழப்பு அவர் சொன்ன அந்த இறை உணர்வு போலதான் நான் நினைக்கிறேன். அவர் உருவம் நமக்கு மறைந்து, மறந்து போனாலும், அவரோட பாடல்கள், நம்மோட ரத்தத்துல கலந்து நம்மை உணரவைக்கும். சிறுவயதுல இறக்குற பலபேர 'இந்த வயசுல போயிருக்கக்கூடாதுன்னு சொல்லுவோம். ஆனால், யாருமே இனி நிரப்ப முடியாது என்னோட இடத்தங்கற அளவுக்கு ஒரு சரித்திரமா வாழ்ந்துட்டார். நேற்று கூட அவரோட மூத்த மகன் கோபி கிட்டப் பேசினேன். 'அவரப்பார்க்கணும்போல இருக்கு கோபின்னேன்', 'அவரு யாராவது நெருக்கமானவங்களப்பார்த்தா.. உணர்ச்சிவசப்பட்டு பேச ஆரம்பிச்சுடுறாரு. கூடவே, இன்ஃபெக்ஷனு ஆகிடும்னு டாக்டர் சொல்லியிருக்கார்' கூடிய சீக்கிரத்துல வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருவோம்'னு சொன்னார். இன்னிக்கு அவரு இறைவனடி சேர்ந்துட்டார்.

கங்கை அமரன்:

தென்னிந்தியாவிற்கான கல்ச்சரை கொண்டு வந்தவர் அவர். அவரப் பார்த்துத்தான் நாங்க எல்லாம் சினிமாவுக்கு வந்தோம். அவர்தான் எங்களோட அடையாளம். அவர் ஒரு மகாப்பெரியவர். கடந்த வாரம் அவரை மருத்துவமணையில பார்க்கும்போது என்னை கிட்டத்தட்ட அரை மணி நேரம் பாடச்சொல்லி ரசிச்சுக்கேட்டவர் இப்போ எங்களோட இல்லன்னு நினைக்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கு. 'நெஞ்சம் மறப்பதில்லை', 'ஒரு நாள் இரவு' பாடல்களை எல்லாம் நான் பாடி முடிச்சுக்கிளம்பிய பிறகு அவர் துள்ளி எழுந்திட்டாராம். என்கிட்ட மருத்துவர் சொன்னார். அவர் ஏற்கெனவே ரொம்ப குள்ளம். இப்போ இன்னும் சுருங்கிப்போய் உட்கார்ந்திட்டார். இமயமலைக்குப் போயிட்டார் இனி வர மாட்டார்னு சொல்லியிருந்தாக்கூட,  எங்கயோ இருக்கார்ங்கற சந்தோஷம் இருந்திருக்கும். அவர் இப்போ இல்லைங்கற தவிப்பு ரொம்ப அனலா இருக்கு. அவர் கொடுத்த சாப்பாட்டைத்தான் நாங்க சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். கலாச்சாரத்தை முதன் முதல்ல கொண்டு வந்து இன்றளவும் பிற கல்ச்சர் பாதிக்காம பார்த்துகிட்டவர் அவர். இளையராஜா, நான் எல்லாம் அவரைப்பார்த்து வளர்ந்தவர்கள். இளையராஜா கல்ச்சருக்கு கோட் சூட் மாட்டியவர். ஏ.ஆர் ரஹ்மான் உலகமே நம்மளுடையதுனு சொல்லி எல்லாவற்றையும் உள்ளே கொண்டுவந்தவர். ஆனால், எம்.எஸ்.வி மட்டும்தான் கடைசிவரைக்கும் தமிழை, கல்ச்சரை சரியாகக் கொண்டுவந்தவர். தமிழ் உச்சரிப்பை அவர்போல யாரும் செய்யமுடியாது. ''காலங்களில் அவள் வசந்தம்' பாடலில் ல, ள் எப்படி அழுத்தம் கொடுக்க வேண்டும் என எங்களுக்கெல்லாம் சொல்லிக்கொடுத்த மகான். அவரோடயே தமிழ் கல்ச்சர் இறந்துவிட்டது. மியூசிக் இன்டர்ஸ்ட்ரியில் கலாச்சாரத்தைத் தூக்கி நிறுத்த இனி யாரும் இல்லை. '' கரகரத்த குரலில் பேசினார் கங்கை அமரன்.

நடிகை லட்சுமி: எம்.எஸ். வி ய பத்தி சொல்ல, வயசோ, அருகதையோ இல்லாதவங்க நாங்க. சின்ன வயசுல கண்ணைத் திறந்து பார்த்ததுல இருந்து இவரோட பாடல்களை கேட்டு வளர்ந்து வந்திருக்கோம். அந்தப் பாடல்கள்ள இருந்தே நாங்க இன்னும் மீண்டு வரல. இப்பவும் டி.வியிலயோ, ரேடியோவுலயோ கேட்டு மெய் மறந்து போறோம். அந்தப் பாடல்களைக் கேட்டுத்தான் காதலிச்சோம், அந்தப் பாடல்களை கேட்டுத்தான் அழுதோம். அந்த பாடல்களை கேட்டுத்தான் உணர்ச்சிவசப்பட்டோம், வீர, தீரங்கள்ல எடுத்துக்கிட்டோம். பொதுவா லெஜன்ட்ஸ் வருவாங்க போவாங்க. ஆனா, இவரைப்போல ஒரு லெஜன்ட் இனி வரமாட்டாங்க. எல்லாரும் வராங்க,சாதிக்கிறாங்க. சில பேர் அதீத உச்சிக்குப்போயிடுவோங்க.. ஆனா, எத்தனை பேர் மனிதரா வாழ்வாங்க. எம்.எஸ்.வி ஒரு மனிதரா வாழ்ந்தவர். என்னைப் பார்க்கும்போது, என் இன்னொரு மகள் லட்சுமி என சொன்னவர். அவரோட இரண்டாவது மகள் என்னை மாதிரி இருப்பாங்களாம். அதனால அவள மாதிரி இருக்கீங்க, நீங்களும் என் மகள் போலதான்பார். என்னோட படத்துக்கு அவர் மியூசிக் பண்ணும்போது, 'அப்றம்.. இந்தப் படத்துக்கு எப்படி மியூசிக் போடுறது சொல்லுங்கன்னார், 'சார்..நீங்க என்ன  போடணுமோ போடுங்க சார் என்னக் கேட்காதீங்கனேன். 'அப்படி இல்லங்க, இது உன்னோட படம் நீதான் சொல்லனும்.

சின்னவர், பெரியவர் என பார்க்காம எல்லாரையும் வாங்க, போங்கனுதான் மரியாதயா அழைப்பார். எங்களோட  சொந்தப்படங்கள் சிலதுக்கு அவர்தான் இசை அமைச்சார். என்னோட கணவர் சிவா கிட்ட,'நான் எங்க வரட்டும்னு கேட்பார். உடனே, உங்களுக்கு எதுக்கு சிரமம்னு சொல்லிட்டு எங்கவீட்டுக்கு ஆர்மோனியப்பெட்டியோட வரக்கூடிய மனிதர். அவ்வளவு சாதாரணமா பழகுவார். பல நடிகர்கள், பல சினிமா கலைஞர்கள் கடைசிக் காலத்துல கஷ்டப்பட்டப்ப , இவரும், இவரோட மனைவியும்தான் பார்த்துகிட்டாங்க. அதுல ஒருத்தர் சந்திரபாபு. நல்ல சென்ஸ் ஆஃப் ஹியூமர் அவர்கிட்ட உண்டு. அவரோட மனைவி இறந்து இரண்டு வருடம் ஆகிடுச்சு. அப்ப ரொம்ப துவண்டிருந்தார். சமீபத்துல மலர் ஹாஸ்பெட்டல்ல அவர பார்க்கும்போது அவர்கிட்ட ஏதோ மிஸ் ஆகுதேனு நினைச்சேன். அது நெற்றியில இருக்கிற பொட்டு. திருநீரும், குங்குமப்பொட்டும் இல்லாம அவர் இருந்ததே இல்ல. அப்பவே கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டேன். கடவுளே.. நல்ல மனிதர ரொம்ப சோதிக்காதேன்னு. முழுமையான வாழ்க்கை வாழ்ந்த, நேர்மையான நல்ல மனிதர். அதுக்காவது அவருக்கு ஒரு அவார்டு கொடுத்திருக்கலாம். அதுதான் என்னோட வருத்தமே...!

- வே. கிருஷ்ணவேணி மாரியப்பன்-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!