வெளியிடப்பட்ட நேரம்: 13:31 (27/07/2015)

கடைசி தொடர்பு:15:30 (27/07/2015)

வேலாயுதம் படத்தின் இரண்டாம்பாகமா தனியொருவன்?- இயக்குநர் மோகன்ராஜா பேட்டி

துவரை என் பெயரை எம்.ராஜா என்றே போட்டுக்கொண்டிருந்தேன் ஆனால் எல்லோரும் என் பெயரை ஜெயம்ராஜா என்றே சொல்லிக்கொண்டிருந்தனர். இப்போது நான் என் பெயரை மோகன்ராஜா என்று மாற்றிக்கொண்டேன். ஆனால் உங்களுக்கு எப்படி விருப்பமோ அப்படியே எழுதிக்கொள்ளலாம் என்று சொல்கிறார் இயக்குநர் மோகன்ராஜா. விஜய் நடித்த வேலாயுதம் படத்துக்குப் பிறகு அவர் இயக்கியிருக்கும் படம் தனியொருவன். அந்தப்படம் குறித்து அவரிடம் பேசியபோது, இப்படிச் சொன்னார். தொடர்ந்து அவரிடம் பேசியது...வேலாயுதம் படத்துக்குப் பிறகு இவ்வளவு இடைவெளி எதனால்?
அந்தப்படத்தை முடித்தபிறகு ரமணா படத்தை இந்தியில் இயக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. அதற்காகத் திரைக்கதை உருவாக்கும் வேலையில் இருந்தேன். சுமார் பத்துமாதங்கள் அந்த வேலைகளில் இருந்தேன். அதன்பின்னர் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அதிலிருந்து விலகினேன். இதனால்தான் தாமதம். அதன்பின்னர் இந்தப்படத்தின் கதையை எடுத்துக்கொண்டு வேலைகளைத் தொடங்கிவிட்டேன்.

முதன்முறை சொந்தக்கதையைப் படமாக்குவது பற்றி.?      

வேலாயுதம் படத்தில், உங்களைக் காக்க வேறு ஹீரோ வரமாட்டார் நீங்களே ஹீரோவாகவேண்டும் என்று சொல்லியிருப்போம். அதைப் பார்த்து ஒருவன் புறப்பட்டால் எப்படியிருக்கும் என்கிற சிந்தனையின் விளைவுதான் இந்தக்கதை.
அப்படியானால் இதை வேலாயுதம் படத்தின் இரண்டாம்பாகம் என்று சொல்லலாமா?      

அந்தக்கருத்தைக் கேட்டுவிட்டுப் புறப்பட்டவன் இந்த ஹீரோ என்பதை மட்டும் வைத்துக்கொண்டு அப்படிச் சொல்லமுடியாதே.  

இந்தப்படத்தின் கதை பற்றி..?      

ஒரு ஹீரோ இருப்பார். அவர் வழியில் வில்லன் குறுக்கிடுவார். அதன்பின் அவரை அழித்து உண்மையை நிலைநாட்டுவார் ஹீரோ. ஒரு நல்லவன், கெட்டவன் தன் பாதையில் குறிக்கிடும்வரை என் காத்திருக்க வேண்டும். அவனே கெட்டவனைத் தேடிப்போய் அழித்தால் என்ன? என்கிற கேள்விக்கான விடைதான் இந்தக்கதை. 

அரவிந்த்சாமியை வில்லனாக ஒப்பந்தம் செய்தது எப்படி?

அவரை வில்லனாக நடிக்கக்கேட்டு ஏற்கெனவே பலர் அணுகியதாகக் கேள்விப்பட்டிருந்தேன். அதனால் அவரிடம் பேசப்போகும்போதே தம்பி ஜெயம்ரவியையும் அழைத்துக்கொண்டே போனேன். ஹீரோவும் கூடவே வந்திருப்பது அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கலாம். கதையைக் கேட்டார், கேட்டவுடன் இந்தக்கதைக்கு நான் தேவை எனக்கு இந்தக்கதை தேவை என்று சொல்லி நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டார்.  

நயன்தாரா?     

இந்தப்படத்தில் நாயகியின் கேரக்டர் முக்கியமானது. அதற்கு நயன்தாரா இருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். இந்தப்படத்தில் ஐபிஎஸ் தேர்வில் சில காரணங்களால் தேர்வு பெறமுடியாதவராக நடித்திருக்கிறார். காதல் வீரம் ஆகிய இரண்டுக்கும் பொருத்தமாக இருப்பார்.  

அரசியல்வாதியையும் தொழிலதிபரையும் வில்லனாகக் காட்டுகிறீர்கள், அப்படியானால் படத்தில் அரசியல் முக்கியமாக இருக்கிறதா?    

இந்தக்கேள்விக்குள்தான் படத்தின் கதை இருக்கிறது. அதை இப்போதே சொல்லமுடியாது.

அரசியல் படமெடுக்கிறீர்கள், நீங்களும் அரசியலில் ஈடுபடுவீர்களா?      

எனக்கு அரசியல் பிடிக்கும். ஆனால் அரசியலில் ஈடுபடமாட்டேன்.     

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்