ரஜினி ஆல்டைம் பேவரிட், விஜய்யுடன் நடனமாடுவது சவாலான விசயம்- டான்ஸர் விக்னேஷ் பேட்டி | Performing along with Vijay is a Challenge - Dancer Vignesh

வெளியிடப்பட்ட நேரம்: 13:27 (07/09/2015)

கடைசி தொடர்பு:21:51 (07/09/2015)

ரஜினி ஆல்டைம் பேவரிட், விஜய்யுடன் நடனமாடுவது சவாலான விசயம்- டான்ஸர் விக்னேஷ் பேட்டி

டிஜிட்டல் யுகத்தில் திறமை எங்கு இருந்தாலும் எப்படி இருந்தாலும் இணையதளம் நமக்கு காட்டிக் கொடுத்துவிடும்.  அதே சமயம் குறைகள் எங்கே இருந்தாலும் அதுவும் அகப்பட்டுவிடும்.  இணைய தளத்தினால் பிரபலமாகி புகழின் உச்சத்திற்கே சென்றவர்கள் பலர். இந்தப் பட்டியலில் நம் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாகிவரும்  வைரல் மனிதன் தான் விக்னேஷ்.

சினிமா பாடல்களில் ஹீரோவுக்கு பின்னால் நடனமாடி ஹீரோவையே ஓவர் டேக் செய்து, நம் கண்களை உறுத்துவாரே அவரே தான்.  சில நாட்களாகவே ஃபேஸ்புக்கில் எந்தப் பக்கம் திரும்பினாலும் “ hit like if you know this guy “ என்று போஸ்ட்டுகள் மூலமாக உலாவிக் கொண்டு இருந்தவரிடம் ஒரு சின்ன மீட்டிங்கை போட்டோம்!

யாரு சார் நீங்க! எங்கேருந்து வந்தீங்க?

நான் எங்கங்க வந்தேன், வீட்ல தான் புடிச்சு தள்ளி விட்டாங்க. 1ம் கிளாஸ்லயே படிப்புக்கும் எனக்கும் 10 அடி தூரம். 10ம் க்ளாஸ்ல கேட்கவா செய்யணும். பத்தாம் வகுப்பு விடுமுறையில் “வீட்ல சும்மா தான இருக்கன்னு சொல்லி, டான்ஸ்ல சேர்த்து விட்டுட்டாங்க. கடுப்புல ஆட ஆரம்பிச்சது தான். அப்புறம் சினிமா தான் வாழ்க்கைன்னு ஆயிடுச்சி. சினிமாவுக்கு என்னையே அர்ப்பணிச்சேன். இன்னைக்கு சினிமாவில் ஒரு அளவுக்கு நிலைச்சு நிக்குறேன்'னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு.

ரஜினி தான் உங்களுக்கு பெயர் வைத்ததா சொல்லுறாங்களே?

" ஐய்யய்யோ!! அப்படில்லாம் இல்லீங்க .சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் ரஜினி' சாரை ரொம்ப புடிக்கும் . எங்க அம்மாவும் டான்ஸர். பாட்ஷா படத்துல கூட ' ஸ்டைலு ஸ்டைலு' பாட்டுக்கு வொர்க் பண்ணாங்க. அப்போ நான் ரஜினி சாரை பார்க்கணும்னு சொன்னதும், கூட்டிட்டுப் போனாங்க. அப்போ என்ன அவரு தூக்கிக் கொஞ்சினாராம். மத்தபடி அதுக்கு முன்னாடியே எனக்குப் பெயரெல்லாம் வெச்சுட்டாங்க. நீங்க சொல்ற மாதிரி அவரே எனக்கு பெயர் வெச்சுருந்தா நல்லா இருந்திருக்கும்.

பிடித்த‌ ஹீரோ மற்றும் ஹீரோயின்?

ரஜினி சார் தான் ஆல் டைம் ஃபேவரைட். இப்போ விஜய் சாரோட டான்ஸ் ரொம்பப் புடிக்கும். அவரோட டான்ஸ் யோசிக்கவே முடியாது. அப்டியே அதிர வைப்பாரு. அவரோட நடனமாடுறதுலாம் சவால் தான் இருக்கும். ஹீரோயின்ல  யாரையும் புடிக்காது என்றார் அடக்கமாக‌.

எந்த ஹீரோ கூட வொர்க் பண்ண ஆசை?

லிங்கா படத்துல 'சின்ன சின்ன' பாட்டுல ஒரு ஷாட்டில் ரஜினி சாரை தூக்கியிருப்பேன் இருந்தாலும், பாட்டு முழுசா அவரோட வொர்க் பண்ணனும்னு தான் ரொம்ப ஆசைப்படுகிறேன். கண்டிப்பா பண்ணுவேன்.

எந்த இயக்குநர் கிட்ட வொர்க் பண்றது ரொம்ப புடிக்கும் ?

ரஜேஷ் சார் தான். அவர் படத்துல ஏதாச்சும் ஒரு ரோல் கொடுப்பார்.

சினிமாவுல புடிச்ச விஷயம், புடிக்காத விஷயம்?

புடிச்ச விஷயம் என்னோட வேலை. அது தர அனுபவங்கள் இது எல்லாம் புடிக்கும். ஒருத்தன் வளர்ந்தா அவன சுத்தி வளரும் பொறாமை புடிக்காத விஷயம்.

பொண்ணுங்களுக்கு உங்கள ரொம்பப் புடிக்குதே, என்ன காரணம்னு நினைக்குறீங்க?

முகத்தை எப்போதும் சிரிச்சமாதிரியே வச்சுப்பேன். அதான் என்ன எல்லோருக்கும் புடிக்குதுன்னு நினைக்குறேன். நான் மட்டுமில்ல, என் கூட நடனமாடுற நிறையப் பேருக்கு இதே போல பல வாழ்த்துகள் குறிப்பா பெண்களிடமிருந்து வந்து குவியும்.

வாழ்கையில் மறக்க முடியாத நாள்?

நிறையப் பேர் என் பெயர் கூட தெரியாமல் வந்து ஆட்டோகிராஃப் வாங்குவாங்க ஆனாலும் ஒரு முறை வடபழனி கிட்ட ஒரு ஃபேமிலி என்கிட்ட வந்து எங்க பசங்க உங்களோட பெரிய ஃபேன் அப்டின்னு சொன்னங்க உடனே அந்தப் பசங்க எனக்குக் கை கொடுத்தாங்க.  உண்மையிலேயே அந்த நாளை மறக்க முடியாது.

பார்க்க ஹீரோ மாதிரி இருக்கீங்களே ஹிரோ ஆகிற ஐடியா இருக்கா?

நிச்சியமா!! நல்ல வாய்ப்புக்காகக் காத்துட்டு இருக்கேன். ஹீரோவாக தான் நடிப்பேன் அப்படின்னு எஇல்ல. ஏதாச்சும் நல்ல கதாபாத்திரம் கிடைச்சா  நடிப்பேன். அதுமட்டுமில்ல டான்ஸ் மாஸ்டர் ஆகணும்ங்கிறது தான் என்னோட கனவே!

பி. நிர்மல்
படங்கள் : மோ : ரஞ்சித் நேசகுமார்

( மாணவ பத்திரிகையாளர்கள் )

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்