Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எம்.ஆர்.ராதாவுக்கு அப்புறம் கவுண்டமணி தான் - 49 ஓ இயக்குநர் ஆரோக்கியதாஸ் பேட்டி

கவுண்டமணியைக் கதாநாயகனாக்கி 49 ஓ படத்தை எடுத்திருக்கும் புதிய இயக்குநர் ஆரோக்கியதாஸ், முதல்படம் வெளிவ்ருமுன்பே கவனத்தை ஈர்த்திருக்கிறார். விவசாயம் மற்றும் அரசியல் ஆகியனவற்றை மையப்படுத்திப் படமெடுத்ததே அதற்குக் காரணம். இந்தப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியிடப்பட்டன, செப்டெம்பர் 17 அன்று படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  இந்நிலையில் சினிமாவிகடனுக்காக அவர் கொடுத்த பேட்டி.

கவுண்டமணியை இந்தப் படத்துக்குக் கதாநாயகனாக்கியது ஏன்?
 
கவுண்டமணி சார எனக்கு சின்ன வயசிலிருந்தே பிடிக்கும். எனக்கு தெரிஞ்சி நடிகவேள் எம்.ஆர்.ராதா சாருக்கு அடுத்து தனது படங்கள்ல பல இடங்கள்ல பயங்கரமான விஷயத்த கூட தனது கவுண்ட்டர் பாணியில் நாசூக்கா வெளிப்படுத்துற திறமை கவுண்டமணி சாருக்கிட்ட இருக்கும். அதுக்கு அப்பஇருந்த தலைமுறையும் ரசிச்சி கைத்தட்டுச்சி இன்றைய தலைமுறையும் பல ஊடகங்களிலும், மீடியாக்களிலும் வெளிப்படுத்திக்கிட்டு தான் இருக்கு. இந்த ஒரு காரணம் போதும்.

இந்தக் கதை அவரை மையப்படுத்தி எழுதப்பட்டதா?
 
கண்டிப்பா சில விஷயங்கள சிலர் சொன்னா மட்டும்தான் மக்கள் ஒத்துக்குவாங்க. எல்லாராலயும் எல்லா விஷயத்தயும் பேச முடியாது. இந்த படத்தின் கதை அது சொல்ற விஷயம், கவுண்டமணி சார் சொன்னா மக்கள் ஒத்துப்பாங்கனு எனக்கு தோன்றிய பிறகுதான் நான் இந்த கதைய எழுத ஆரம்பிச்சேன்.
 

 

கவுண்டமணியுடனான படப்பிடிப்பு அனுபவங்கள். அவரை நடனமாட வைத்தது பற்றி?
 
கவுண்டமணி அண்ணங்கூட படப்பிடிப்புக்கு ஒரு வருசத்துக்கு முன்னாடியே எனக்கு அவரோட நட்பு ஏற்பட்டுடிச்சி. அதனால படப்பிடிப்பு நடந்த நாற்பது நாட்களும், என் வாழ்க்கையில சினிமா சம்பந்தமான நிறைய அனுபவங்கள அவர் அனுபவத்தில இருந்து கத்துகிட்டேன். ஒருமுறை படப்பிடிப்பு நடந்துட்டு இருக்கப்ப ஒரு 70,75 வயசு முதியவர் செருப்பு இல்லாம உச்சி வெயில்ல நடந்து போறத பாத்து, கவுண்டமணி அண்ணன் வேகமா என்ன அழைச்சி ஐந்தாண்டு திட்டங்கள், வறுமை ஒழிப்பு திட்டங்கள் எப்படி வெற்றி அடைஞ்சுருக்கு பாருனு சொன்னார். அப்ப அவரோட டைமிங் சென்ஸ் பாத்து பிரம்மிச்சி போனேன். அப்புறம் நடனம். கவுண்டமணி அண்ணன் நடனம் ஆடியிருக்காரு. அம்மா போல  பாடலுக்கு நான் ஏழு நாட்கள் ஆகும்னு நெனச்சேன். ஆனா இரண்டரை நாட்கள்ல முடிச்சிட்டு, அப்றம் அடுத்து என்ன ஷாட்டுனு கேட்டாரு. யூனிட்டே ஷாக் ஆக அவரோட எனர்ஜிய பாத்து ஒரு செகண்டு நான் அப்படியே மலைச்சுப்போயிட்டேன்.  

உங்களையும் கிண்டல் செய்திருப்பார், என்ன சொல்லி கிண்டல் செய்தார்?
 
உங்க கேள்வி எனக்கு புரியுது. பாடல் காட்சியில ”அண்ணே… சிங்க் வேணும்ணே” என நான் சொல்ல, சீரியசா முகத்த வச்சிக்கிட்டு “சிங்கு வேணும்னா பஞ்சாப்புக்கு போயி பத்து பேர கூட்டிட்டுவா…” என என்னையும் கிண்டல் அடித்திருக்கிறார். அப்றம் என்ன மட்டும் கலாய்க்கல. ஒரு வேளை நான் இயக்குனரா இருந்ததால தப்பிச்சிட்டேன்னு நினைக்குறேன்.

கெளதம் மேனனிடமிருந்த நீங்கள், முதல்படத்துக்கு அரசியல் கதையை தேர்ந்தெடுத்தது எப்படி?

நான் கெளதம் சார், விக்ரம் கே.குமார் சார் ரெண்டு பேர்கிட்டயும் வேல செஞ்சுருக்கேன். எனக்கும் எனது இயக்குனர்கள் போல படமெடுக்க ஆசை தான், அடுத்த படம் கண்டிப்பா அந்த ஸ்டைல்ல இருக்கும். ஆனா நான் கிராமத்தில பிறந்தவன். என் மக்களின் வாழ்க்கை, இன்ப துன்பங்கள தீர்மானித்தது மண்ணும் அது சார்ந்த விவசாயமும் தான். அந்த மண் சிதைக்கப்பட்டு, விவசாயம் அழிக்கப்பட்டு கட்டிடம் கட்டி கூவி கூவி விற்கப்படுறப்போ முகத்த திருப்பிக்கிட்டு என்னால சோறு திங்க முடியல. அதனால தான் என் முதல் படத்த விவசாய படமா எடுத்துருக்கேன். 

காதல் இல்லாமல் படம் ஓடுமா என்று கவுண்டமணியே கேட்டிருக்கிறாரே?
 
அவரு கலாய்ச்சிருப்பாரு.
 
படம் தாமதமானது எதனால்?

தாமதமுன்னு சொல்ல முடியாது. சரியான நேரத்த தயாரிப்பாளர் தேர்ந்தெடுத்துருக்கார்.
 
 சத்யராஜ், கவுண்டமணி, சிவகார்த்திகேயன் ஆகிய மூவரும் நடிக்கிற படத்தை நீங்கள் இயக்கும் வாய்ப்பு இருக்கிறதா?
 
உங்க கேள்வி நிச்சயமா நிறைவேறும். ரெண்டு சிகரங்களும், இளைய இமயமும் இணையும் காலம் வெகு தூரத்தில இல்ல.  

- அ.தமிழன்பன் -

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்