Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வளர்ற பசங்க நல்லா வரட்டும்னு அஜித் சொன்னார்- புது இயக்குநரின் பரவசப் பேட்டி

பேய் பட சீஸனுக்கேற்ப ஒரு பேய்க் கதை சொல்ல வந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம். அமெரிக்காவில் சினிமா பயின்ற இலங்கைத் தமிழர். இவருடைய கோடம்பாக்க வருகை குறித்து...

‘‘நான் பொறந்தது வளர்ந்தது எல்லாமே கொழும்புதான். அம்மா, அப்பா இலங்கைவாழ் தமிழர்கள். எங்களுடைய நேட்டிவ் திருச்சி. ஸ்கூல் டைம்லயே நாடகம் நடிக்கிறது, இயக்குறதுனு செம ஆர்வமா இருப்பேன். படிப்பைவிட இந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்.

இங்க எங்களுக்கு இருக்கும் பொழுதுபோக்கு, புக் படிக்கிறது இல்லைன்னா படம் பார்க்கிறது. அப்படி நிறையப் படங்கள் பார்த்திருக்கேன். ரஜினி சார் நடிச்ச ‘பாண்டியன்’ எல்லாம் செம கூட்டம் இருக்கும்போது போய்ப் பார்த்த படம்.  17 வயசுல குறும்படம் ஒண்ணு இயக்கினேன், அதுக்குப் பிறகுதான் எனக்கே என் மேல நம்பிக்கை வந்து, ‘இனிமே நாம படிக்கிறதுன்னா அது சினிமாவைப் பத்தின படிப்பாத்தான் இருக்கணும்’னு முடிவெடுத்தேன்.

வீட்ல அம்மா, அப்பாகிட்ட சொன்னேன். ஆனா, அவங்களுக்குப் புரியல. சரியா சொல்லணும்னா, அவங்களுக்குப் பயம். ஏன்னா, ‘தமிழ்நாட்ல இருக்கிறவங்களே சினிமாவுக்குப் போனா வாய்ப்புகள் கிடைக்கிறது இல்லை, நீ இலங்கையில இருந்து போற, எப்படிடா சரியாவரும்?’னு கேட்டாங்க. ஆனாலும் அடம்பிடிச்சு அமெரிக்கா போய் கோர்ஸ்ல சேர்ந்தேன். சினிமா சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். கோர்ஸ் முடிச்சதும் சிங்கப்பூர்ல ஒரு கம்பெனியில கிரியேட்டிவ் ஹெட் வேலை கிடைச்சது. சீரியல் ஒண்ணு இயக்கிட்டு இருந்தேன். ஆனா, நமக்கான இடம் இது இல்லையேன்னு தோணினதும் வேலையை விட்டுட்டு நேரா சென்னை வந்து தயாரிப்பாளரைத் தேட ஆரம்பிச்சேன்.

‘என்னடா நல்ல வேலையை விட்டுட்டானே’ன்னு வீட்ல ரொம்பவே வருத்தப்பட்டாங்க. ஆனா, நம்ம லட்சியத்தை மாத்திக்க முடியாதல்லவா. நிறைய அலைஞ்சேன். நான் இங்கே நடக்கிற எல்லாத்தையும் என் நண்பர் சண்முகசுந்தரம்கிட்ட சொல்லிட்டே இருப்பேன். ஒருநாள் அப்படிப் பேசிக்கிட்டு இருக்கும்போது அவரே கேட்டார், ‘நான் படம் தயாரிக்கலாம்னு இருக்கேன். நீ இயக்குறியா?’னு. அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த ‘உனக்கென்ன வேணும் சொல்லு’.’’

‘‘தமிழ்ப் படம் இயக்குறீங்க. ஆனா, அதுக்குப் படிப்பு எல்லாம் அமெரிக்காவுல படிக்கிறீங்க... ஏன்?’’
‘‘எனக்குச் சின்ன வயசுல இருந்தே அமெரிக்காவுல படிக்கணும்னு ஆசை. நம்ம ஊர்ல இருக்கும் தொழிநுட்பம் எல்லாம் இங்கே வேலைசெய்ய ஆரம்பிச்சதும் தெரிஞ்சிடும். ஆனா, ஹாலிவுட்ல என்ன மாதிரி தொழில்நுட்பம் எல்லாம் இருக்கு; அதுல நம்ம சினிமாவுக்கு எது எல்லாம் பயன்படுத்தலாம்னு தெரிஞ்சுக்கவும் அந்தப் படிப்பு எனக்கு உதவுச்சு.’’

‘‘இப்போதான் பேய் பட சீஸனுக்கேற்ப படமெடுப்பது என்று முடிவு பண்ணி எடுத்தீங்களா?’’

‘‘இப்போ வர்ற பேய் படங்களைக் கவனிச்சீங்கன்னா நல்லா தெரியும், பெரும்பாலும் பேயை வெச்சு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கோம்னு. ‘ஜென்ம நட்சத்திரம்’, ‘13 நம்பர் வீடு’னு அந்த டைம்ல வந்த பேய்ப் படங்கள் பார்த்தீங்கன்னா, அதுல வர்ற பேயிக்குன்னு ஒரு பயம் இருக்கும். அதைப்போல இந்தப் படத்துல வர்ற பேய், ஆடியன்ஸைப் பயப்படவும் வைக்கும்; கொஞ்சம் எமோஷனல் ஆகவும் வைக்கும். அதனால இது நிச்சயமா பேய்ப் பட சீஸன் வரிசையில சேராது. வேற மாதிரி உங்களை ரசிக்கவைக்கும்.’’

‘‘அப்போ ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்னதான் சொல்லப்போகுது?’’

‘‘ரெண்டு குடும்பங்களுக்கு இடையில நடக்கிற கதை. ரெண்டும் சரிசமமாப் போகும். ரெண்டு குடும்பங்களுக்கும் சில பிரச்னைகள் நடக்கும். அப்புறமாத்தான் தெரியவரும் அந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் காரணம் ஒரு அமானுஷ்ய சக்தின்னு. அந்த அமானுஷ்ய சக்தி, 8 வயசுப் பொண்ணு. அவள் பெயர் டெய்சி. யார் அந்த டெய்சி... அவள் என்ன பண்றா? இதைத்தான் சொல்லப்போறோம். இது தவிர, படத்துக்கு நடுவுலயே லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் பத்தியும் பேசியிருக்கோம்.

பொதுவா பேய்ப் படம்னா ஒரு வில்லன் இருப்பான், அவனை பேய் பழிவாங்கும். ஆனா, இந்தப் படத்துல வில்லன்னு யாருமே கிடையாது. சூழ்நிலைதான் வில்லன். இப்படிப் படம் முழுக்க வழக்கமான ஒரு படமா இல்லாம இருக்க, பல விஷயங்கள் பண்ணியிருக்கோம்.’’

‘‘அப்போ ஹாரர் ஸ்பெஷலிஸ்ட்டாகணும்னு ஆசையா?’’

‘‘அப்படி இல்லைங்க. இப்போ இந்தப் படத்துக்குப் பிறகு மறுபடி நாலு வருஷத்துக்கு இந்த ஜானரையே தொடக் கூடாதுன்னு இருக்கேன். அடுத்ததா ஒரு ரொமான்டிக் சப்ஜெக்ட் இயக்கணும்னு ஆசை. அதுபோக ஃபேமிலி சென்டிமென்ட் படங்கள் மேலயும் நிறைய ஆர்வம் இருக்கு. குடும்பப்பாங்கான படமே குறைஞ்சிருச்சு. விக்ரமன் சார் கொடுத்த படங்கள் மாதிரியோ, லிங்குசாமி சார் கொடுத்த ‘ஆனந்தம்’ மாதிரியோ இன்னைக்குப் படங்கள் வருவது ரொம்பக் குறைஞ்சிருச்சு. அந்த மாதிரியும் படங்கள் இயக்கணும்.’’

‘‘படத்துக்கு முதல்ல ‘டெய்சி’னு பெயர் வெச்சிருந்தீங்க. இப்போ ‘உனக்கென்ன வேணும் சொல்லு’னு பெயர் மாத்தியிருக்கீங்க?’’


‘‘ ‘டெய்சி’னு பெயர் வெச்சிருந்தப்போ என்ன ஆச்சுனா, எனக்கே நிறையப் பேர் போன் பண்ணி, ‘இது மலையாளப் படமா... இங்கிலீஷ் பட டப்பிங்கா... இல்லை ஷார்ட் ஃபிலிமா?’னு கேட்க ஆரம்பிச்சாங்க. சரி, பட டைட்டில்தான் இவங்க எல்லாரையும் இப்படி யோசிக்கவைக்குது, வேற பெயர் வெக்கலாம்னு யோசிச்சோம். படத்துல மைம் கோபி, பேய் ஓட்டுறவரா நடிச்சிருப்பார்.

அவர் அடிக்கடி ‘உனக்கென்ன வேணும் சொல்லு’னு கேட்டுக்கிட்டே இருப்பார். அந்தச் சமயத்துலதான் ‘என்னை அறிந்தால்’கூட ரிலீஸ் ஆகி அந்தப் பாட்டும் செம ஹிட்டாச்சு. அதனால அவங்ககிட்டயும் அனுமதி வாங்கிப்போம்னு ஏ.எம்.ரத்னம் சார்கிட்ட கேட்டோம், கௌதம் சாருக்கு பட டீஸர் காமிச்சோம், ஆர்வமாகி ‘டிரெய்லர் இருந்தா, அதையும் காட்டுங்க’னு ஆர்வம் ஆகிட்டார். அஜித் சார்கிட்டயும் கேட்டோம். ‘வளர்ற பசங்க, கொடுங்க நல்லா வரட்டும்னு சொன்னார்’. இதுதான் ‘டெய்சி’ ‘உனக்கென்ன வேணும் சொல்லு’னு மாறின கதை.

‘‘சூர்யாவுக்கு டீச்சரா இருந்தீங்கனு தகவல் வந்ததே?’’

‘‘ஆமாங்க. நான் கொஞ்ச நாள் சிங்கப்பூர்ல வேலைபார்த்தேன்னு சொன்னேன்ல, அங்க இருந்த ஒருத்தர் மூலமா வெங்கட் பிரபு அண்ணா அறிமுகம் கிடைச்சது. அடிக்கடி அவரோட சினிமா பற்றி, இயக்குநர் ஆர்வம் பற்றிப் பேசுவேன். சென்னைக்கு வந்ததுக்குப் பின்னால ஒருநாள் பீச்ல சின்ன போட்டோஷூட் பண்ணிக்கிட்டு இருந்தப்போ, வெங்கட் பிரபு அண்ணாகிட்ட இருந்து போன் கால் வந்தது.

‘தம்பி, நீ எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணணும்’னு. உடனே கிளம்பி ஏவி.எம்&க்கு வர சொன்னார். அங்கே போனா சூர்யா சாரை மீட் பண்ணவெச்சு, ‘படத்துல சூர்யா சார் இலங்கைத் தமிழரா நடிக்கிறார். அவருக்கு அந்த ஸ்லாங் எப்படிப் பேசணும்னு கொஞ்சம் பயிற்சி கொடுங்க’னு சொன்னார். அப்பறம் சூர்யா சார்கூட ஒரு வாரம் டிராவல் பண்ணேன். அவரும் சாதாரண ஆள் இல்லைங்க. ஒரு விஷயத்தைக் கத்துக்கிறதுக்காக நிறைய மெனக்கெட்டார்.’’

‘‘பேய்ப் படம் எடுக்கிறீங்க, உங்களுக்குப் பேய் மேல நம்பிக்கை இருக்கா?’’

‘‘நிச்சயமா இருக்கு. நான் 17 வயசுல ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுத்தது பத்தி சொன்னேன்ல. அதுதான் என்னுடைய மறக்க முடியாத பேய் அனுபவம். அதுக்காக ஒரு வீடு தேவைப்பட்டுச்சு. கொழும்புல இருந்து ஆறு கிலோமீட்டர் தள்ளி ஒரு வீடு கிடைச்சது. அது போலீஸ் சீல் வெச்ச வீடு. ஆனா, கொஞ்சம் காசு குடுத்தா அந்த ஏரியாக்காரங்க வந்து உதவி பண்ணி, வீட்டை யூஸ் பண்ணிக்கச் சொல்லிடுவாங்க. எங்ககூட வந்தவர் பல்ப் மாட்டிக்கிட்டிருந்தார். திடீர்னு கரன்ட் கட்டாச்சு.

அஞ்சு நிமிஷம் கழிச்சு, கரன்ட் வந்ததும் பல்ப் மாட்டிக்கிட்டு இருந்த ஹெல்பர் கையில சின்ன வெட்டுபட்டு ரத்தம் வருது. கண்ணாடி ஏதாவது பட்டிருக்கும்னு சொல்லிட்டு, எங்க வேலையை எல்லாம் நாங்க முடிச்சிட்டோம். கிளம்பும்போது அவர்கிட்ட, ‘இந்த வீடு எப்படி உங்களுக்குத் தெரியும்?’னு கேட்டோம். ‘இங்கே இலங்கைப் பெண் ஒருத்தங்க இருந்தாங்க. அவங்களை யாரோ கொலை பண்ணிட்டாங்க. அதனாலதான் இந்த வீட்டுக்கு போலீஸ் சீல் வெச்சிருந்தாங்க.

இப்படி வீட்டுக்குள்ள யாராவது வந்தா, அந்த ஆவிக்குத் தொந்தரவா இருக்கும். உடனே ஏதாவது அசம்பாவிதம் நடக்கும். ஆனா, நீங்க அதிஷ்டக்காரப் பசங்க, எனக்குச் சின்ன வெட்டு விழுந்ததோட எல்லாம் முடிஞ்சிடுச்சு’னு சொன்னதும் பதறிப்போச்சு. சரி, கடவுள் இருந்தா பேயும் இருக்கத்தானே செய்யும்னு நினைச்சுக்கிட்டோம்!’’

- பா.ஜான்சன் -

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்