'திருட்டு டிவிடி: நெட்டில் டவுன்லோடு செய்து பார்த்தாலும் குற்றம்தான்!' | Pirate DVD is villain of film industry!

வெளியிடப்பட்ட நேரம்: 10:44 (25/09/2015)

கடைசி தொடர்பு:10:51 (25/09/2015)

'திருட்டு டிவிடி: நெட்டில் டவுன்லோடு செய்து பார்த்தாலும் குற்றம்தான்!'

சினிமாவின் வில்லன் திருட்டு டிவிடி. பல லட்சம், கோடி முதலீட்டையும் பஸ்பமாக்கும் பயங்கரம். ரிலீஸ் ஆகும் படங்களை அடுத்தடுத்த நாட்களில் வீட்டிலிருந்தே திருட்டு டிவிடியில் பார்ப்பவர்கள், உண்மையில் அது ஒரு கள்ளப்பொருள் என்பதை உணர்வதில்லை. சினிமாவில் பணம் போட்ட பல குடும்பங்களை தரை மட்டமாக்கிய இந்தத் திருட்டு எப்படி நிகழ்கிறது? இதை கட்டுப்படுத்தவோ, முறைப்படுத்தவோ முடியாதா..? துறை சார்ந்தவர்களைச் சந்தித்தோம்.

மூன்று முறைகளில் தயாராகும் திருட்டு டிவிடி

‘‘திருட்டு விசிடி என்ற சொல் வழக்கு, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒழிஞ்சுபோச்சு. இப்போ இருக்கிறது திருட்டு டிவிடி...’’ என்று ஆரம்பித்தார், இயக்குனர் கஷாலி. ‘‘மூன்று முறைகளில் திருட்டு டிவிடிதயாரிக்கிறாங்க. பொதுவா ஒரு படம் வெளியாவதற்கு முன், ஒரிஜினல் டிவிடி தயாரிக்க படத்தை ஹார்டு டிஸ்க்கா வெளிநாடுகளுக்கு அனுப்புவாங்க. தமிழ் படத்துக்கான உலக விநியோகஸ்தர்கள், மலேசியாவில்தான் இருக்காங்க என்பதால, பெரும்பாலும் படங்கள் மலேசியாவுக்குதான் அனுப்பி வைக்கப்படும். அப்போ இடையிலேயே சிலர் அந்தப் படத்தை டவுன்லோடு செய்து, வித்துடுவாங்க. அது பல பேர் கைகளில் திருட்டு டிவிடியா பெருகும். ரெண்டாவது முறை, மலேசியாவில் ஒரு படத்தை வாங்கின விநியோகஸ்தர்கள், அதை லோக்கல் சேனல்களுக்கும், தியேட்டர்களுக்கும் சாட்டிலைட் மூலமா அனுப்பும்போது, அந்தப் படம் இணையத் திருடர்களின் கைகளில் சிக்கி, வலைத்தளங்களுக்கு விற்கப்படுது. அதிலிருந்து திருட்டி டிவிடிகளாக பதிவிறக்கம் செய்யப்படுது. மூன்றாவது முறை, தியேட்டர்ல படம் ஓடிட்டு இருக்கும்போதே ஹை குவாலிட்டி கேமராவில் படம் பிடிப்பது. டிவிடியில் படம் பார்க்கும்போது விசில் சத்தம், மக்கள் எழுந்து போற நிழலை எல்லாம் பார்த்திருப்பீங்க. அதெல்லாம் திருட்டு டிவிடிதான்’’ என்ற கஷாலி, இதை தடுப்பதற்கான வழிகளைச் சொன்னார்.

தடுக்க இரண்டு வழிகள்

‘‘திருட்டு டிவிடியை பாஸிட்டிவ், நெகட்டிவ்னு ரெண்டு முறையில் தடுக்கலாம். பாஸிட்டிவ் முறை என்பது

, ‘திருட்டு டிவிடியை தேடிப் போகாதீங்க, நாங்களே ஒரிஜினல் டிவிடி தர்றோம்’னு தயாரிப்பாளர்கள் முடிவெடுக்கிறது. 30, 40 ரூபாய் கொடுத்து திருட்டு டிவிடி வாங்குற மக்கள், 50, 60 ரூபாய் கொடுத்து ஒரிஜினல் வாங்கத் தயங்க மாட்டாங்க. இப்போ சேரன் ஆரம்பித்திருக்கும் சி2ஹெச் (சினிமா டூ ஹோம்), அப்படி ஒரு முயற்சிதான். இதனால தியேட்டர்களும் பாதிக்கப்படாது. காரணம், 50 படங்கள் வெளியானா அதில் ஒன்று, ரெண்டு படத்துக்கு தான் ஃபேமிலி ஆடியன்ஸ் வருவாங்க. மற்றவங்க எல்லோரும் கல்லூரி மாணவர்கள், காதலர்கள், சின்னச் சின்ன வேலைகளில் இருக்கிறவங்கதான். திருட்டு, ஒரிஜினல்னு எந்த டிவிடி கிடைச்சாலும், இந்த தியேட்டர் ஆடியன்ஸின் சதவிகிதம் குறையாது. நெகட்டிவ் முறை என்பது, ஒரிஜினல் டிவிடியும் தராம, திருட்டு டிவிடியும் விற்கக் கூடாதுனு அடக்குமுறை செய்வது. அதாவது முழுக்க முழுக்க தியேட்டரில் மட்டுமே பார்க்க வைப்பது.''

9 ரூபாய்க்குத் தயாராகும் டிவிடிகள்

‘‘திருட்டி டிவிடிகளின் லாபக் கணக்குகள், ‘அய்யோ!’ ரகம். ஒரு பதியப்படாத டிவிடியின் விலை ஏழு ரூபாய். ஒரு படத்தை அதில் பதிய, ஒரு ரூபாய் முதல் ஒன்றரை ரூபாய் வரை ஆகும். ஆக, 9, 10 ரூபாய்க்கு ஒரு திருட்டி டிவிடி தயாராகிடும். ரெண்டு ரூபாய் லாபம் வைத்து, 12 ரூபாய்க்கு வெளியில் விடப்படுது. மார்கெட்டுக்கு 15 ரூபாய்க்கும், பர்மா பஜார் வியாபாரிகள்கிட்ட 25 ரூபாய்க்கும் வந்து சேரும் டிவிடி, அதைத் தாண்டி வரும்போது மக்கள் கைகளில் 40 ரூபாய்க்கு விற்கப்படுது. ‘நாங்க மாமூல் கொடுக்க வேண்டியது இருக்கே’னு சொல்றாங்க கடைக்காரங்க. தமிழ்நாட்டுல பர்மா பஜார் மற்றும் மற்ற டிவிடி கடைகள் உட்பட, திருட்டி டிவிடி விற்க கிட்டத்தட்ட 8000 கடைகள் இருக்கு. ஆம்னி பஸ்கள்ல புதுப்படம் திரையிடுறதால தமிழ் சினிமாவுக்கு ஒரு வருஷத்துல 100 முதல் 200 கோடி ருபாய் நஷ்டம் ஏற்படுது. இந்திய சினிமா மூலம் மட்டும் யூடியூபுக்கு போன வருஷம் கிடைச்ச வருமானம், 7,000 கோடி ருபாய். அதுல தமிழ் படங்கள் மூலமா கிடைச்சது 600 - 800 கோடி இருக்கும். ஆனா, அதுல 50 கோடி கூட உரிமையாளர்களுக்கு கிடைக்கல’’ என்றார் கஷாலி.

‘டிஜிட்டல் திருடர்களுக்கு பூட்டுப் போட முடியாது!’

தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சிவயோகன், ‘‘திருட்டி டிவிடி தயாரிப்பது ஒரு நெட்வொர்க், அதைக் கண்டுபிடிச்சிட்டா எல்லாத்தையும் கட்டுப்படுத்திடலாம்னு நினைக்கிறாங்க. அது அப்படி இல்ல. இந்த டிஜிட்டல் யுகத்தில், திருடனுக்கு எந்தப் பக்கமும் கதவடைக்க முடியாது. டிஜிட்டல் திருட்டான இந்த திருட்டு டிவிடியைத் தடுக்கும் தொழில்நுட்பங்களை ஹாலிவுட்டில் பயன்படுத்தி, கிட்டத்தட்ட 80% திருட்டை ஒழிச்சிட்டாங்க. அது நம்மக்கிட்ட இல்ல. ஆன்லைன் மூலம் பெருகும் திருட்டி டிவிடியை கட்டுப்படுத்த, நானும் என் நண்பர்களும் இணைந்து, connect+ என்ற நிறுவனத்தைத் தொடங்கி, அதன் மூலம் சட்டத்திற்கு உட்பட்டு ஒரு படத்தை வாங்கி, அதை எங்களோட வெப்சைட்டில் வெளியிடுவோம். இதன் மூலம், மக்கள் சில டாலர் கொடுத்து படத்தை வீட்டில் நெட்டில் பார்க்க முடியும்; ஆனா டவுன்லோடு பண்ண முடியாது. ஆனாலும் இதில் பாதி வெற்றிதான் கிடைச்சது. காரணம், கட்டணமே இல்லாம திருட்டு வழியில் படம் பார்க்க முடியும் எனும்போது, பணம் கொடுத்துப் பார்க்க குறைந்த மக்களே முன் வந்தாங்க. என் காப்பிரைட் படம், வேறு தளத்தில் காப்பிரைட் இல்லாமல் வெளியானா, அந்தப் படத்தை DMCA (Digital Millennium Copyright Act) சட்டத்தின்படி உடனடியா நீக்கணும்னு சம்பந்தப்பட்ட வலைத்தளத்துக்கு மெயில் அனுப்பினா, அடுத்த 48 மணி நேரத்திற்குள் அதை அவங்க நீக்கணும். இல்லைன்னா, அந்த வெப்சைட் பிளாக் பண்ணப்படும். இன்னொரு பக்கம், சர்வதேச சட்டப்படி, காப்பிரைட் இல்லாத ஒரு படத்தை ஒரு வலைத்தளம் வெளியிடுவது குற்றம் என்றாலும், அந்தப் படம் அந்த வெப்சைட்டில் இருக்கும் என பாதை காட்டுவது குற்றம் இல்லைனு சொல்லுது. இப்படிப் பாதை காட்டும் பல வெப்சைட்கள் பல பல. அதேபோல, சில வெப்சைட்களில் இருந்து படத்தை டவுன்லோடு செய்யும்போது, அது வேறு ஏதோ ஒரு வெப்சைட்டில் இருந்துதான் டவுன்லோடு ஆகும். இதுக்குப் பேர் ஸ்கீரிமிங். இவங்க மறைமுக பங்குதாரர்களா இருந்தும், நேரடியா தண்டிக்க முடியுறதில்ல. கூடுமான அளவு இதுபோன்ற வெப்சைட்களை பிளாக் பண்ணி வர்றோம்.

காபிரைட்களும், ஒப்பந்த முறைகளும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

இதுக்கு எல்லாம் காரணம், தமிழ் சினிமாவில் ஒப்பந்தமுறை ஒழுங்குபடுத்தப்படாமல் இருக்கிறதுதான். ஒரு படத்தில் யார் யாருக்கு என்னென்ன உரிமை, எத்தனை நாட்களுக்கு என்பதெல்லாம் தெளிவா வரையறுக்கப்படாமல் இருக்கும்போது, அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில எந்த கோர்ட்டுக்குப் போனாலும் பயனில்லை. இதை வெளிநாடுகளில் எல்லாம் முறைப்படுத்திட்டாங்க. ஒரு படம் எங்கு திருட்டுத்தனமா வெளியானாலும், யார் டவுன்லோடு செய்தாலும், உடனே அது உரிமையாளருக்கு தெரிய வந்துடும். இதன் மூலமா திருட்டு முழுமையா நிறுத்தப்படலைன்னாலும், கட்டுப்படுத்தியிருக்காங்க. இந்தி சினிமாவில் இவற்றை ஓரளவு முறைப்படுத்தியிருக்காங்க; தெலுங்கு சினிமாவில் நெட்டில் படங்கள் திருட்டுத்தனமா வெளியாவதை தடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமா இருக்காங்க. தமிழ் சினிமாவில் எதுவும் இல்ல’’ என்றார்.

‘‘ஒரு தெளிவும் இல்லை!’’

ஃபெடரேஷன் ஆஃப் ஃபிலிம் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் துணைத் தலைவர் ஆர்.எஸ்.ராஜன், ‘‘ஒரு படத்தின் காப்பி ரைட் ஒருவருக்கு எதன் அடிப்படையில் வழங்கப்படுது என்பதிலேயே இங்க தெளிவில்லை. இந்தியாவில் intellectual property act, cyber act எல்லாம் எதுக்கு முக்கியத்துவம் கொடுக்குதுனே இன்னும் தெரியல. தமிழ் படங்கள் இங்கு வெளியாகும் முன்னாடி அந்தப் படத்தின் டிவிடி உரிமையை மலேஷியா, சிங்கப்பூரில் உள்ளவங்களுக்கு என்ன ஒப்பந்த முறையில் அனுப்புறாங்கனு, வெளிப்படையா சொல்ல மாட்டேங்கறாங்க. காபிரைட்னா, கதைக்கா, காட்சிக்கானு தெளிவுபடுத்தணும். யார் ஒரு படத்தை காபி செய்தாலும், அதற்கு உரியவர்கள் எல்லாருக்கும், உரிய பணத்தை முதலில் கொடுக்கணும். மொத்தத்தில் காபிரைட்களும், ஒப்பந்த முறைகளும் தமிழ் சினிமாவில் தெளிவில்லாமல் இருப்பது, சட்டத்தை நாடுவதை சிரமம் ஆக்குது. டெக்னாலஜி கவசத்தை பலப்படுத்தி, ஒப்பந்தமுறைகளை ஒழுங்குபடுத்துறது இந்தத் திருட்டுக்கு கடிவாளமா அமையும். அரசாங்கம், காபிரைட் நடைமுறைகளை தெளிவுபடுத்தணும்’’ என்றார். திருட்டு டிவிடி பற்றி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் கூறுகையில், “பதிப்பு உரிமை சட்டத்தின் படி ஒரு படத்தை காபி செய்வது குற்றம். ஒரு படத்தின் தயாரிப்பாளருக்குதான் அந்த படத்தின் மீது அனைத்து உரிமையும் இருக்கு. அவருக்கு இருக்கும் உரிமைகளை மற்றவர்கள் கையாளும் போது, அது குற்றம். இதே குற்றத்தை கமர்ஷியலாக ஒருவர் அல்லது ஒரு குரூப், முதல் முறையோ அல்லது பல முறையோ செய்யும்போது அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உரிமை உண்டு. வீட்டில் கம்ப்யூட்டர்களில், டிவிடிகளில் படங்களை பார்ப்பதும் குற்றம் தான். தயாரிப்பாளர் போலீஸிடம், 'என் படத்தை, என் உரிமை இல்லாம இந்த வீட்டில் பார்க்கிறார்கள் அல்லது வைத்திருக்கிறார்கள்' என்று புகார் கொடுத்தால் மட்டுமே போலீஸார், வீட்டிற்கு வந்து திருட்டு டிவிடி வைத்திருப்பதை பற்றி விசாரனை செய்ய முடியும். பொதுமக்களில் ஒருவன், கஞ்சாவை கையில் வைத்திருந்தாலே அவனை கைது செய்ய எங்களுக்கு உரிமை உண்டு. அதற்கான சட்டமும் இருக்கிறது. ஆனால், திருட்டு டிவிடியை பொருத்தவரை சாதாரண ஒரு பார்வையாளரிடம் இருந்தால், அவர்களை தண்டிக்க நம்மிடம் சட்டம் இல்லை. அதற்காக வீட்டில் பார்ப்பது சரியென்றாகி விடாது. அது தவறே. நம்மிடம் சட்டங்கள் இல்லை. அவ்வளவே!'' என்கிறார் சென்ட்ரல் கிரைம் பிராஞ்சின் டெபுடி கமிஷனர் ஜெய்குமார்.

‘அப்போ மட்டும் எப்படி திருட்டி டிவிடி கிடைக்காம செய்ய முடிஞ்சது?’

‘‘திருட்டு டிவிடி தயாரிப்பில் நிறைய பேர் இருந்தாலும், சென்னை பாரீஸ் கார்னர் ஏரியா மற்றும் பாண்டிசேரியில்தான் முக்கியமானவங்க இருக்கிறாங்க. அவங்களைப் பற்றிய விபரமெல்லாம் தெரிந்தும், காவல்துறை நடவடிக்கை எடுக்கிறதில்ல. கடந்த ஆட்சியில், அரசியல் கட்சிக் குடும்பத்தால தயாரிக்கப்பட்ட ஒரு படம் மட்டும் திருட்டு டிவிடி மார்கெட்டுக்கே வரல. அப்படியே எங்கயாச்சும் கிடைச்சாலும், அந்தக் கடைகளை எல்லாம் அடிச்சு உடைச்சாங்க. நெட்டில் டவுன்லோடு செய்யும் வழிகளையும் பிளாக் பண்ணினாங்க. இப்படி மக்கள் தியேட்டருக்கு வரும் சூழலை உருவாக்கினதனால, சுமரா ஓட வேண்டிய படம் சூப்பரா ஓடிச்சு. அதிகார மையம் நினைச்சா திருட்டு டிவிடியை தடுக்கலாம்னா, இந்தக் கட்டுப்பாட்டை எல்லா படங்களுக்கும் காட்டலாமே? அவங்க பணமெல்லாம் பணம், எங்க பணமெல்லாம் காகிதமா?’’ என்கிறார் ஆற்றாமையுடன் ஒரு தயாரிப்பாளர்.

மூன்று முதல் ஆறு வருடங்கள் சிறை!

திருட்டு டிவிடிக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்று சென்னை கிரைம் பிராஞ்ச் பிரிவில் கேட்டபோது, ‘‘copy right act படி தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை மட்டும் 611 திருட்டு டிவிடி வழக்குகள் பதிவாகியிருக்கு. இதில் இரண்டு பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துருக்கோம். அவங்ககிட்ட பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களோட மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய். கடந்த வருடம் 3,000 வழக்குகள் பதிவானது. அதில் எட்டு பேர் குண்டர் சட்டத்தில் கைதானங்க. திருட்டு டிவிடி தயாரிப்பது, கடத்துவது, விற்பனை செய்வது, டிவிடி வாங்கிப் பார்ப்பது, நெட்டில் டவுன்லோடு செய்வது எல்லாமே குற்றம்தான். கைதாகிறவங்களுக்கு 6 முதல் 3 வருடங்கள் சிறை தண்டனை கிடைக்கும்.

- கே.அபிநயா-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்