சென்னை நந்தனத்தில் வாழும் இன்னொரு சிவாஜி!

ஒரு நடிகரின் பரம ரசிகராக இருப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் அந்த பரம ரசிகர், முகத்தோற்றத்தில், தான் விரும்பும் நடிகரைப் போலவே இருப்பது அரிதிலும் அரிது. ரஜினி, கமல், விஜயகாந்த், வடிவேலு போலவே முகத்தோற்றமும், உடல் அமைப்பும் கொண்டவர்களை பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்த்திருப்போம்.

அவர்கள் அந்த நடிகர்களின் குறிப்பிட்ட சில திரைப்படத் தோற்றங்களைப் போல இருப்பர். ஆனால் சென்னை நந்தனத்தில் வசிக்கும் பாலசுப்ரமணியம் எனும் பாலசிவாஜியோ, தன் இளமைப் பருவம் தொடங்கி, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் போலவே தோற்றமளிக்கிறார்.

70களில் பாசமலர் சிவாஜியை போல் தோற்றம் அளித்தவர், இன்று படையப்பா, ஒன்ஸ் மோர் சிவாஜியை போலவே இருக்கிறார். முகம் மட்டுமின்றி, அவரது நடை, உடை, பாவனை என அனைத்துமே சிவாஜியை பிரதிபளிக்கிறது. வெள்ளை குர்தா அணிந்து, நெற்றில் விபூதி பட்டையுடன் கிளம்பிக்கொண்டிருந்த பாலசிவாஜியை சந்தித்தோம்.
“சின்ன வயசுல இருந்தே நான் சிவாஜி சாரோட ரசிகன். ஒவ்வொரு தடவையும் அவர் நடிச்ச படங்கள பாக்கும் போது, அவரோட கதாபாத்திரமாவே நானும் மாறிடுவேன்.
அவர் கார் ஓட்டுர மாதிரி காட்சி வந்தா, என் கால்களும் அசையும். 1960ல இருந்து நான் நாடங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன்.

அவரப்போலவே முகத்தோற்றமும், சுருட்டை முடியும், உடைகளும் இருந்ததால, என் கூட நடிச்சவங்க எல்லாம் என்ன சிவாஜினு தான் கூப்பிடுவாங்க. ஒரு தடவ பிளாசா தியேட்டர்ல ‘குலமா குணமா’ ங்குற படத்துக்கு டிக்கெட் வாங்க க்யூல நின்னுகிட்டு இருந்தப்ப, சிவாஜி சார் தான் நிக்குறார்னு நெனச்சு, நான் எவ்வளவு சொல்லியும், என்ன உள்ள கூட்டிட்டு போய், கூல் ட்ரிங்க்ஸ் எல்லாம் குடுத்து, டிக்கெட் காசு கூட வாங்காம படம் பாக்க வெச்சாங்க.” எனக்கூறி மகிழும் பாலசிவாஜி, வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட ஷூட்டிங்கின் போது பரணி ஸ்டூடியோவில் சிவாஜியை சந்தித்ததை தன் வாழ்வின் மறக்கமுடியாத அனுபவமாகக் கூறுகிறார்.

1975 வரை நாடகங்களில் நடித்தவர், அதன் பின் வியாபாரத்தில் இறங்கினார். சில ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்ததாகவும், விரைவில் வெளிவர இருக்கும் ஓர் திரைப்படத்தில் நடித்திருப்பதாகவும் கூறும் பாலசிவாஜி, தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் போது பலரும் தன்னை சிவாஜி சார் என அழைத்ததால், தன் பெயர் பாலசிவாஜி என்றே மாறிப்போனது என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

தான் வெளியே செல்லும் போதெல்லாம் மக்கள் தன்னை சூழ்ந்து கொண்டு தன்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வதையும் பெருமையுடன் கூறுகிறார். “நெரய பேர் என்ன பாத்து, அடடா! இவரு அப்படியே சிவாஜி சார் மாதிரியே இருக்காரே. ரெண்டு இன்ச் உயரமா இருந்தா சிவாஜி சாரே தான்னு சொல்லுவாங்க.

இன்னும் சிலர், நீங்க சிவாஜி சாரோட தம்பியான்னு கூட கேப்பாங்க. மக்கள் இப்படி என்ன ஆச்சரியத்தோட பாக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.” என்றார் புன்னகையுடன்.

ஜெ. விக்னேஷ்

(மாணவ பத்திரிக்கையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!