Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஜினிகாந்தைவிட எனக்கு தமிழ் உணர்வு அதிகம் - நடிகர்சங்கத் தலைவர் நாசர் சிறப்புப் பேட்டி

மிகவும் பரபரப்பாக நடந்த தென்னிந்திய நடிகர்சங்கத்தேர்தலில் நாசர் தலைமையிலான அணி பெரியவெற்றியைப் பெற்றிருக்கிறது. சங்கத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள நாசரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். சிக்கலான கேள்விகளுக்கும் சிரித்தவாறே விடை சொன்னார். அவற்றில் வெற்றிப் பெருமிதம் இல்லாமல், ஏற்றுக்கொண்டிருக்கும் பதவிக்கு மிக நியாயமாக நடந்துகொள்ளவேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சி தெரிகிறது.

இந்த வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இதை நான் எங்கள் வெற்றியாய் பார்க்கவில்லை.பெரும்பான்மையான அங்கத்தினர்கள் எண்ணத்தின் குறியீடாய் பார்க்கிறேன்.மாற்றம் வேண்டும் என்றோம்.அது நிர்வாகத்தை மாற்றுவது மட்டுமல்ல.அணுகுமுறை,செயல்பாடு,நிர்வாகம் அனைத்திலும் மாற்றம் வர வேண்டுமென்பதே எங்கள் நோக்கம்.

இந்தத் தேர்தலுக்கு ஊடகங்கள் அதீத முக்கியத்துவம் கொடுத்திருப்பது கடும் விமர்சனங்களுக் குள்ளாகியிருக்கிறது, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஊடகங்கள் இந்தத் தேர்தலை இவ்வளவு தூரம் கொண்டு சென்றதற்கான காரணம் தெரியவில்லை.எங்களைப் பொறுத்த வரையில் இது ஒரு முக்கிய தேர்தலாக இருந்தது.எங்கள் குழுவின் முதல் குறிக்கோள் பெரும்பான்மையான அங்கத்தினர்கள் கலந்து கொண்டு ஜனநாயக ரீதியான நேர்த்தியான ஒரு தேர்தலை நடத்திக் காண்பிக்க வேண்டுமென்பது.அதை நாங்கள் நிறைவேற்றிக் காண்பித்து விட்டோம்.முடிவுகள் எங்களுக்கு இரண்டாம் பட்சம்தான்.

முதல் முறையாக இருக்கின்ற நிர்வாகத்திற்கு எதிராக என்றுமில்லாது ஒரு பலமான அணி அமைந்தது கண்டு இது பரபரப்பான ஒரு தேர்தலாக இருக்கலாம் என்று ஊடகங்கள் கணித்திருக்கும்.சினிமாவின் தாக்கம் ஆழமாய் வேரோடியிருக்கும் தற்போதைய தமிழ் கலாச்சாரத்தில் நட்சத்திரங்கள் பங்கு பெறும் எதுவுமே பெரிதாக்கப்படுகிறது.

எங்கள் சங்கத் தேர்தலுக்கு அதிகக் கவனம் கிடைத்தது கண்டு எனக்கே கூச்சமாகத்தான் இருந்தது.நாங்கள் மறுத்தாலும் அவர்கள் இதைத் தொடர்ந்து மக்களிடம் கொண்டு சேர்த்து விவாதங்களை உருவாக்கினார்கள்.இது எங்களுக்கு சாதகமாக அமைந்ததென்றாலும் சற்றதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதென்பதை நான் மறுக்கவில்லை.

நீங்கள் பொறுப்பேற்றவுடன் செய்ய நினைத்திருக்கும் உடனடி வேலைகள்..?


அங்கத்தினர்களின் விபரங்களை முதலில் பட்டியலிட்டு DATA BASE உருவாக்குவது.அதைக் கொண்டுதான் மற்ற திட்டங்கள் அமல்படுத்தப்படும்.

சங்கக்கட்டிடம் தொடர்பாக சத்யம் சினிமாஸுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாக சரத்குமார் சொல்லியிருக்கிறாரே?

ஆம்...அந்த ரத்து செய்த ஒப்பந்தத்தினை நாங்கள் முப்பதாம் தேதிவாக்கில் பெற்றுக் கொண்ட பிறகுதான் எதனடிப்படையில் அது செய்யப்பட்டிருக்கிறது அது சரிவருமா என்பதைப் பார்க்க வேண்டும்.

நடிகர் சங்கத்தின் பெயரை மாற்ற ஏற்கெனவே போட்ட தீர்மானம் என்னவாயிற்று? இப்போது மீண்டும் அந்தக்கோரிக்கை வந்திருக்கிறதே?


இதை சென்ற நிர்வாகத்தினால் ஏன் நிறைவேற்ற முடியவில்லை என்று பார்க்க வேண்டும்.சட்டச்சிக்கல் ஏதுமுண்டா என்று ஆராய வேண்டும்.மாற்றினால் பிரச்சினைகள் எழுமா என்று அலச வேண்டும்.முக்கியமாக இச் சங்கத்தின் அறுபதாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.இந்தத் தீர்மானத்தை பரபரப்பாக்கிய திரு.ரஜினிகாந்த் அவர்களை விட எனக்கு ஒரு சதவிகிதமாவது அதிக தமிழ் உணர்வு உண்டு.மெட்ராஸூக்கு ஒரே இரவில் சென்னை என்று சூட்டப்படவில்லை.

ரஜினியும் கமலும் இந்த விசயத்தில் மாறுபட்ட கருத்துகள் சொல்லியிருக்கிறார்களே? இதனால் மூத்தநடிகர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை என்று விமர்சனங்கள் வருகின்றனவே?


அவர்கள் கூறியது அவரவர் கருத்துரிமை.இருவரின் கருத்தையும் வரவேற்கிறேன்.நிர்வாகம் தீர ஆராயும்.முடிவெடுக்கும்.

அஜித், நயன்தாரா உள்ளிட்ட பலர் ஓட்டுப்போடவே வரவில்லை. அதுபற்றி..?

கட்டாய ஓட்டுத்திட்டம் அமலில் இல்லை.சந்தானம் அகமதாபாத்தில் இருந்தார்.அது போல் அவர்களிருவரும் வர முடியாத சூழலில் இருந்திருப்பார்கள்.யார் யார் வரவில்லை என்பதை விட...60 க்கும் மேற்பட்ட மூத்த கலைஞர்கள் சக்கர நாற்காலி மற்றும் ஊன்றுகோல் தாங்கி வந்தார்கள்.கண் பார்வை மங்கியோரும் வந்தார்கள்.வைஜெயந்தி மாலா அவர்களும் வந்தார்கள்.இவர்களையெல்லாம் நாங்கள் ஓட்டளிப்பவர்களாக பார்க்கவில்லை. தேர்தல் என்கிற ஜனநாயக நிகழ்வின் மீது நம்பிக்கை வைத்தவர்களாகப் பார்க்கிறோம்.

தேர்தலின் போது, தயாரிப்பாளர்கள்சங்கம் சரத் அணியை ஆதரித்தது, இயக்குநர் செல்வமணி சரத் அணியை ஆதரித்துப் பேசினார். இப்போது அவர்களுடன்  உங்கள் உறவு எப்படி இருக்கும்?


எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.நாங்கள் எப்போதும் போலவே நடந்து கொள்வோம்.எங்கள் நோக்கம் பணிகள் சீராக நடக்க வேண்டும் என்பதே.வறட்டு கெளரவம் வீம்பு கிடையாது.

உங்களுடைய நிதானம் காக்கும் அனுபவமும், விஷால், கார்த்தி போன்றோரின் வேகமும் முரண்பட வாய்ப்பிருக்கிறதா?

சத்தியமாய் இல்லை.தேர்தலுக்கு ஒரு அணுகுமுறை தேவைப்படுகிறது.நிர்வாகம் நடத்துவதற்கு ஒரு பொறுப்புணர்ச்சி தேவைப்படுகிறது.அதை என் பிள்ளைகள் நன்கே அறிந்திருக்கிறார்கள்.நான் மட்டுமல்ல அவர்களுக்கு வழிகாட்டியாக பொன்வண்ணன் இருக்கிறார்.சரித்திரம் எடுத்துரைக்க ராஜேஷ் இருக்கிறார்.அவர்கள் எங்கள் கருத்துகளைக் கேட்டறிந்து கொள்கிறார்கள்.

சென்னைக்கும் ஐதராபாத்துக்கும் பறந்துகொண்டிருக்கும் நீங்கள் நடிகர்சங்க வேலைகளில் முழுமையாக ஈடுபட இயலுமா?


எனக்காவது சினிமா ஒன்றுதான் வேலை.என் நண்பர் சரத்குமார் அவர்கள் ஒரு கட்சியின் தலைவர்,சட்டமன்ற உறுப்பினர்,தயாரிப்பாளர், நடிகர் என்று பல பணிகளுக்கிடையில் இந்தப் பொறுப்பை நிர்வகித்தார் என்பதை நான் மறந்துவிடவில்லை.இன்றிருக்கும் தொலைத்தொடர்பு வசதிகளை வைத்துக்கொண்டு என்னால் செயல்பட முடியும் என்றே நம்புகிறேன்.இவை எல்லாவற்றையும் விட என் பணியின் சுமையைப் பகிர்ந்துகொள்ள இளைய சமுதாயமே தோள் கொடுத்து நிற்கும்போது இன்னும் வேகமாகச் செயல்பட முடியும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்