Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

எம்.ஜி.ஆர் காலத்துலேருந்து நடிக்கிறேன் - ’நானும் ரவுடிதான்’ ராகுல்தாத்தாவின் உருக்கமான கதை!

நானும் ரவுடிதான் படத்தைப் பார்த்த அனைவருக்கும் விஜய் சேதுபதி, நயன்தாரா இவர்களைத் தாண்டி மனதில் நின்ற கதாபாத்திரம் ராகுல் தாத்தாவாகத்தான் இருக்கும்,. அவரின் வீரமான பேச்சும், கண நேரத்தில் தப்பித்து நயன்தாராவுக்கு லொகேஷன் அனுப்புவதுமாக அவர் வரும் காட்சிகளை,மெய் மறந்து கை தட்டி சிரித்து விசில் அடிப்பார்கள்.

படம் வெளியான பின், பல போன் கால்கள், வாழ்த்துகளுக்கு இடையில் கொஞ்சம் டைம் கிடைக்குமா என்ற போது சொல்லுங்க நான் அந்த காலத்து ஆளு என ஆரம்பித்தார்.

எத்தனை வருஷமா சினிமாவுல இருக்கீங்க! 

48 வருஷத்துக்கு மேல இருக்கேன். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், ரஜினி, கமல், இப்படி எல்லார் கூடவும் நடிச்சிருக்கேன். இப்போ வயசு 74 தான் ஆச்சு. நான் இப்பவும் யூத். வெச்சேன்ல கைதட்ட என பெருமிதமாகப் பேசுகிறார் ராகுல் தாத்தா.

உங்க பெயர், சொந்த ஊரு பத்தி சொல்லுங்களேன்.

எனக்கு ரெண்டு பேரு இருக்குங்க. தனபால், அந்தப் பேருல கொஞ்சம் ராசி இல்லைன்னு ஜோசியர் கிட்ட கேட்டு உதய பாலன்னு பேர மாத்திக்கிட்டேன். எனக்கு கடவுள் பக்தி ஜாஸ்தி. எல்லா கடவுள்களையும் பாரபட்சம், ஜாதி பார்க்காம கும்பிடுவேன். சொந்த ஊரு  நாகபட்டினம். பாட்டு எழுதணும், நடிக்கணும், சினிமாவுல பெரிசா சாதிக்கணும்னு வந்தேன். வந்தவுடனே பாண்டிபஜார் கீதா ஹோட்டல்ல வேலைக்குச் சேர்ந்தேன். என்ன வேலைக்குச் சேர்க்கறதுக்கு முன்னாடி அந்த ஹோட்டல் முதலாளி சாப்பிடச் சொன்னாரு இன்னும் எனக்கு அது ஞாபகம் இருக்கு. அந்த ஹோட்டல்ல எல்லா வேலையும் பார்த்தேன். கூடவே அந்த ஹோட்டலுக்கு கீழ ஒரு நாடகக் கம்பெனி இருந்துச்சு. அவங்க கூட நிறைய நாடகங்கள்ல நடிச்சேன். அப்பறம் எம்.ஜி.ஆர் ஆபீஸ்ல வேலை செஞ்சிகிட்டு இருந்தேன். கேட்டரிங் வேலை அங்கயும் சமையல். என்னப் பார்த்த எம்.ஜி.ஆர் தான், நீ நல்லா நடிக்கிறடா . வாயேன் நடிக்கலாம்னு அவருதான் எனக்கு சின்னச் சின்னக் கேரக்டர் வாங்கிக் கொடுத்தார். அவருக்கு மானசீகமான ரசிகன் நான். எம்.ஜி.ஆர். ஆனந்தவிகடன்ல நான் ஏன் பிறந்தேன் அப்படின்னு ஒரு தொடர் எழுதிகிட்டு இருந்தார். அந்தத் தொடர கொண்டு வந்து விகடன் ஆபீஸ்ல குடுக்கறது என்னோட மிகப்பெரிய வேலை. 

உங்க வீட்ல என்ன சொன்னாங்க இந்தப் படத்தோட ரிலீஸ்க்கு அப்பறம்..

எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என உதயபாலனின் மனைவி பாக்கியம் பேச ஆரம்பித்தார். அவர் வர்ற காட்சிகள்ல தியேட்டர் முழுக்க கைதட்டுறாங்க. ஏ.வி.எம்ல தான் பார்த்தோம். சின்னச் சின்னப் பசங்க என் வீட்டுக்காரர் வர சீனுக்கு கைதட்டும் போது அவ்ளோ சந்தோஷம்.எங்களுக்கு கல்யாணம் ஆகி 35 வருஷம் ஆச்சு. நானும் ஜூனியர் ஆர்டிஸ்ட் தான். பெரிசா நடிகையாகணும், பேரு வாங்கணும்னெல்லாம் இல்லைங்க. இந்த ஜூனியர் ஆர்டிஸ்ட் வாழ்க்கையே எங்களுக்கு ரொம்பத் திருப்தியா இருக்கு. எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க. தாத்தா பாட்டியும் ஆகிட்டோம். ஒரு பொண்ணு தேனியிலயும் இன்னொரு பொண்ணு இங்கயே சென்னைலயும் கட்டிக்குடுத்துருக்கோம். இதுக்கு மேல என்ன வேணும். மருமகன்களும் எங்கள நல்லாப் பார்த்துக்கறாங்க என ஆசையாகவே தனது குடும்பம் பற்றி பேசினார் திருமதி பாக்கியம்.

வேற படங்கள் உங்க கேரக்டர் பத்தி, அடுத்து என்னென்ன படங்கள் நடிக்கிறீங்க? 

கத்தி படம் பார்த்தீங்களா அதுல விஜய் தம்பி கூட விளக்கோட குழாய்க்குள்ள உக்காந்துருப்பேன் பாருங்க. ஆயிரத்தில் ஒருவன் , ஆம்பள படத்தில் ஹன்சிகாவைக் கடத்தினவுடனே அக்கா பொண்ண கடத்திட்டாங்கடா வாங்கடா என சவுண்டு கொடுக்குற மூன்று தாத்தாக்களில் நானும் ஒருத்தன், சுந்தர் சி படம் எல்லாத்துலயும் எனக்கு கேரக்டர் இருக்கும். இப்பவும் கூட அரண்மனை 2 படத்துல நடிச்சிருக்கேன். கான், யாக்கை, விழித்திரு இப்படி இன்னும் 15 படங்களுக்கு மேல கையில இருக்கு கொஞ்சம் பிசியான ஆளு நான் என அந்தப் படத்தின் சாயலிலேயே கம்பீரமாக பேசுகிறார் ராகுல் தாத்தா என்கிற உதய பாலன்.

தாத்தாவுக்கு வணக்கம் கூற உங்க வாட்ஸப் நம்பர் இருக்கா, இருந்தா சொல்லுங்க என நமக்கு அடுத்த ஷாக் கொடுக்கிறார்...உண்மையிலேயே யூத் தான் நீங்க

- ஷாலினி நியூட்டன் - 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்
Advertisement