வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (26/10/2015)

கடைசி தொடர்பு:17:06 (26/10/2015)

விஜய், அஜித் படங்களுக்கு இசையமைக்காதது ஏன்? -வெளிப்படையாகப் பேசும் தமன்

சிந்தனை செய் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன். தொடர்ந்து மாஸ்கோவின் காவேரி, தில்லாலங்கடி, காஞ்சனா, ஒஸ்தி, ஆல் இன் அழகு ராஜா, மீகாமன், வாலு உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார், தற்போது தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார்.ஆகடு, பவர், கிக் 2, சமீபத்தில் வெளியான புரூஸ் லீ உள்ளிட்ட பல படங்களுக்கு தமன் தான் இசை.

இந்நிலையில் தமனிடம் இந்திக்குக்கு எப்போது இசையமைக்கப் போகிறீர்கள் என ஒரு சந்திப்பில் கேட்டபோது, பாலிவுட்டில் வேலை செய்வது என்பது கொஞ்சம் கடினம். தென்னிந்திய சினிமாவில் சுலபமான புரிதல் இருக்கிரது. ஆனால் மும்பையில் அது சாத்தியமல்ல. மேலும் தென்னிந்திய இசையமைப்பாளர்கள் எப்படி வேலை செய்வார்கள் என்பதும் அவர்களுக்குப் புரியாத நிலை உள்ளது. எனவே தான் இங்கே இருக்கும் இசையமைப்பாளர்கள் பாலிவுட்டில் நுழைவது கடினமாக இருக்கிறது எனக்கூறியுள்ளார்.

தமிழில் எப்போது மெகா ஹிட் படத்திற்கு இசையமைப்பீர்கள் என்ற கேள்விக்கு, ஒரு மிகப்பெரிய வெற்றிக்காகக் காத்திருக்கிறேன். தெலுங்கைப் பொருத்தவரை மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அல்லு அர்ஜுன், ரவி தேஜா என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துவிட்டேன். இன்னும் தமிழில் அந்த வாய்ப்பு அமையவில்லை. அஜித் படத்தில் வேலை செய்யவேண்டும் என்பது எனது ஆசை. மேலும் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க வேண்டுமெனில் ஒரு மெகா ஹிட் படம் கொடுக்க வேண்டும்.

பல தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ளேன். பாராட்டுகளும் பல கிடைத்தன ஏன் சில பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டும் ஆகியிருக்கிறது. எனினும் அந்தப் படங்கள் பாக்ஸ் ஆபீஸ் அளவில் சரியாகப் போகவில்லை. தமிழில் பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு இசையமைக்க வேண்டுமெனில் ஒரு பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படம் தேவை. அது விரைவில் நடக்கும் என நம்புகிறேன் எனக் கூறியுள்ளார் தமன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்