அஜித் பெயரைச் சொன்னாலே, அனிருத் செய்யும் கலாட்டா! வேதாளம் இயக்குநரின் குஷி பேட்டி! | Vedhalam Director Siva Exclusive Interview about Ajith!

வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (29/10/2015)

கடைசி தொடர்பு:12:21 (29/10/2015)

அஜித் பெயரைச் சொன்னாலே, அனிருத் செய்யும் கலாட்டா! வேதாளம் இயக்குநரின் குஷி பேட்டி!

‘‘இது ஹைலி டிமாண்டிங் ஃபிலிம். படம் ஆரம்பிச்ச 6 மாசத்துலயே ரிலீஸ் பண்றோம். இவ்வளவு பெரிய படத்தை இவ்வளவு குறைந்த காலத்துக்குள் ரிலீஸ் பண்றது பெரிய விஷயம். அதுக்கு எல்லாரோட ஹார்ட் ஒர்க்தான் காரணம். முதல் பாதி லாக் பண்றதுக்கு, ஷூட் முடிச்சிட்டு அப்படியே எடிட், திரும்ப அங்கிருந்து நேரா ஷூட்னு நாலு நாள் தொடர்ச்சியா ஒரு மணிநேரம்கூட தூங்காமல் வொர்க் பண்ணினோம். என் கரியர்லயே அப்படிப் பண்ணினது இல்லை. அந்த உழைப்புக்குண்டான மரியாதை கிடைக்கும்னு நம்புறேன்.’’- நம்பிக்கையாகப் பேசுகிறார் ‘வேதாளம்’ இயக்குநர் சிவா. தீபாவளி ரிலீஸுக்காக பரபரவென ஓடிக்கொண்டு இருக்கிறார். இந்தப் பட டீசர் ரிலீஸையே பட ரிலீஸ் அளவுக்கு கொண்டாடி ஆன்லைனில் டிராஃபிக் ஜாம் பண்ணின ‘தல’ ரசிகர்கள் டிரெயிலரை கொண்டாடக் காத்திருக்கும் இந்தத் தருணத்தில் சிவாவின் பேட்டி...

‘‘டான் படம், பலிவாங்கும் பேயின் கதைன்னு ‘வேதாளம்’ பற்றி ஏகப்பட்ட கதைகள் ஆன்லைன்ல உலவுதே?’’

‘‘டீசரைப் பார்த்தவங்க, ‘இதுதான் கதைனு யூகிக்க முடிலை’ன்னாங்க. அதுதான் இந்தப் படத்தின் யூஎஸ்பி. ஆனால் டான், ஹாரர்னு ஆன்லைனில் உலவும் கதைகள் எதுவும் கிடையாது. எல்லாருமே கனெக்ட் ஆகக்கூடிய நிறைய எமோஷன்ஸ் உள்ள ஃபேமிலி என்டர்டெயினர்.’’

‘‘உங்களோட படத்தில் காமெடி கதையோடு வரும். இதுல காமெடி எப்படி வொர்க்கவுட் ஆகியிருக்கு?’’

‘‘நிறைய. முதல் பாதியில சூரிக்கும், ஸ்ருதிக்கும் நடக்குற சீன்ஸ், இரண்டாம் பாதியில் தம்பிராமய்யா இருக்கார். ‘இதுவரை நான் இந்த மாதிரி கேரக்டர் பண்ணினது இல்லை சிவா’னு அவரே சொன்னார். சூரிக்கு படத்துல டாமினேட்டான கேரக்டர். அஜித் சார்கூட சண்டைபோடுற மாதிரியெல்லாம் இருக்கும்.  ‘தலகூட சண்டை போடுறமாதிரியெல்லாம் இருக்கே சார். நான் பண்ணமாட்டேன்’னு ரொம்ப பயந்தாப்ல. அந்தளவுக்கு அவர் பயங்கரமான தல வெறியர். அஜித் சார்தான், ‘வாங்க சூரி... அதெல்லாம் ஒண்ணுமில்லை’னு என்கரேஜ் பண்ணி பண்ணவெச்சார். அது நல்லா ஹெவியா வொர்க்கவுட் ஆகி இருக்கு.’’

‘‘முதல்முறையா அஜித் படத்துக்கு அனிருத் இசை. என்ன சொன்னார் அனிருத்?’’

‘‘முதல்முறையா சந்திக்கும்போது, ‘இவ்வளவு சின்னப்பையனா இருக்கிறாரே இவர்கூட நாம எப்படி வேலை செய்யப்போறோம்’னு ஒரு டவுட். ஆனால் ஃபுல் ஆஃப் எனர்ஜி. பெரிய டேலன்ட். ஆனால் என்ன டைமிங்தான், நைட் கூப்பிடுவாப்ல. விடியற்காலையில 2 மூணுக்கு ஃபுல் மோடுல வருவாப்ல. அதுமட்டும்தான் பிரச்னை. மத்தபடி ரொம்ப அழகா டெலிவர் பண்றாப்ல. ஓபனிங் சாங் ஹிட், நாலு பாட்டு ஹிட்டுங்கிறாங்க. இந்திப் படங்களை எல்லாம்விட ஐ டியூன் இண்டியா லெவல்ல... நம்பர் 1னு சோனியில இருந்து தகவல் அனுப்பியிருந்தாங்க. அந்த கிரெடிட் அனிருத்துக்குத்தான் தரணும். அவர் தீவிரமான தல ரசிகர். அவர்கிட்ட முதல்முறையா கதை சொல்லிட்டு இருந்தப்ப தியேட்டர்ல ரசிகர்கள் பண்ண சேட்டைலாம் பண்ணார். ஒரு சோபாவுல இருந்து டமால் டுமில்னு கத்திக் குதிக்கிறது, சிரிக்கிறதுனு எகிறிட்டே இருந்தாப்ல. அஜித் சார் ரசிகர்கள் அவரோட படத்தைப் பார்த்தா எவ்வளவு எக்சைட் ஆவாங்கனு அனிருத் முகத்துலயே தெரிஞ்சுது. ‘நாங்க தல ஃபேன் சார். இந்தப் படத்தை தெறிக்கவிடுறோம் சார்’னு சொல்லிட்டே இருப்பார். ‘வீர விநாயகா’ ஷூட் சமயத்துலதான் அனிருத்தை அஜித் சாரைப் பார்க்க கூட்டிட்டுப் போயிருந்தோம். அவர் கையெல்லாம் நடுங்குது. அவ்வளவு எக்சைட்டடா இருந்தார். அஜித் சார் சொன்னார், ‘நல்லாப் பண்ணுங்க, நல்ல படங்கள் பண்ணுங்க’னு அட்வைஸ் பண்ணினார்!’’

‘‘படம் மாஸ், கிளாஸ்னு சொல்றீங்க. டெக்னிக்கல் டீம் சப்போர்ட் எப்படி?’’

‘‘கேமராமேன் வெற்றிவேல். என் 21 வருட நண்பன். நானும் அவரும் ஒண்ணா ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல ஒளிப்பதிவு படிச்சவங்க. அப்பவே எனக்கு டைரக்க்ஷன் ஆர்வம். ‘நான் டைரக்க்ஷன் பண்ணினா நீதான் கேமராமேன்’னு பேசிட்டு இருப்பேன். ‘சிறுத்தை’ தவிர என் எல்லா படங்களுக்கும் அவர்தான் ஒளிப்பதிவு. இந்தப் படத்தைப் பொறுத்தவரை அடுத்த லெவல் போயிட்டார். கொல்கத்தா பக்கத்துல உள்ள சின்ன கிராமத்துல ஷூட் பண்ணவேண்டிருக்கும். அடுத்த ஷெட்யூல்டுல மிலான்ல ஒரு மல்டி நேஷனல் ஏர்போர்ட்ல ஷூட் பண்ணணும். இதுல அவ்வளவு வேரியேஷன் இருக்கு. இப்படியான எக்ஸ்ட்ரீமையும் ஹோல்ட் பண்ணவேண்டியதை அழகா கையாள்வதில் நண்பன் வெற்றி வெற்றியடைஞ்சிருக்கார்னு சொல்லலாம்.’’

‘‘அஜித் மேல விமர்சனம். எந்த நிகழ்ச்சிக்கும் கலந்துக்கிறது இல்லை...’’

‘‘நான் கூப்பிட்டது இல்லை. கூப்பிடவும் மாட்டேன். ஒவ்வொருத்தரும் ஒரு ஸ்பேஸ் இருக்கும் சார். அதுல நாம தலையிடக்கூடாது. ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்காங்கன்னு விளக்கம் கொடுக்கவும் முடியாது. என்னைப் பொறுத்தவரை நான் என் படத்துக்குக் கூப்பிடலை. கூப்பிடவும் மாட்டேன்!’’

‘‘ஆனால் இங்க நீங்கள் அக்கடபூமி ஆள்னு ஒரு ஆந்திர இமேஜ் இருக்கே?’’

‘‘என் தாத்தா ஏ.கே.வேலன். அருணாசலா ஸ்டுடியோஸ் உரிமையாளர். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர். ‘நீர்க்குமிழி’ மூலமா பாலசந்தர் சாரை அறிமுகப்படுத்தினவர். என் மனைவி ராஜலட்சுமி. பையன் விஸ்வஜித். அப்பா ஜெயக்குமார், அம்மா செந்தாமரை. பிரதர் பாலா. மலையாளத்துல ஹீரோ. தங்கை கமலி, சிங்கப்பூர்ல இருக்காங்க. இதுதான் என் ஃபேமிலி. இவ்வளவு பரபரப்பிலும் ரிலாக்ஸா இருக்கக் காரணம் என் மனைவிதான். என்னை இதுவரை ஒருமுறைகூட ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்கும்போது அவங்க போன் பண்ணி தொந்தரவு பண்ணினதே கிடையாது. காலையில 9 மணிக்கு போனேன்னா சாயங்காலம் 6 மணிவரை எவ்வளவு பெரிய எமர்ஜென்சியா இருந்தாலும் போன் பண்ணவே மாட்டாங்க. என்னா அவங்களுக்குத் தெரியும் அத்தனை பேரின் உழைப்பில் ஒரு படம் உருவாகிட்டு இருக்குனு. என் மிகப்பெரிய பலம் என் மனைவி!’’

- ம.கா.செந்தில்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்