உலகநாயகன் குறித்து பிரபலங்கள் பதில்கள்: பிறந்தநாள் சிறப்புத் தொகுப்பு!

கமல்ஹாசன் பிறந்தநாள் சிறப்பாக இதுவரை விகடனுக்கு கொடுத்த பேட்டிகளில் கமல்ஹாசன் குறித்து பிரபலங்களின் உணர்ச்சிப்பூர்வமான பதில்கள்....

பிரகாஷ் ராஜ்: ஒருவரைவிட இன்னொருவர் அதிகமாகவோ குறைவாகவோ நன்றாகவோ நடிக்கிறார் என்பது அல்ல நடிப்பு... கொடுத்த கதாபாத்திரத்தை அந்த அளவில் வெளிப்படுத்த முடியுமா என்பதுதான். ஆனால், கமல் சாரிடம் அனுபவங்களைத் தாண்டி பல கதாபாத்திரங்களின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளக்கூடிய பக்குவம் வேற ரேஞ்சில் இருக்கு. அப்பேர்ப்பட்ட சிறந்த நடிகரோடு நடிக்கும்போது உங்களை அறியாமல் அது இன்னோர் இடத்துக்குப் போய் நிற்கும். அது ஆரோக்கியமான சேலஞ்ச். இந்தப் படத்தைப் பார்க்கும்போது அந்த ஆச்சர்யத்தை உணர்வீர்கள். அப்படி அடர்த்தியான நடிப்பு, கதாபாத்திர அமைப்பு... இந்தப் படம் பெரிய அனுபவமா இருக்கும்.''
 
கார்த்தி: '' 'யங்ஸ்டர்ஸ் வரணும். அடுத்தடுத்த விஷயங்களைப் பண்ணணும். புது டீம் வந்தா, பயத்துல இன்னும் அதிகமான ஆர்வத்துல வொர்க் பண்ணுவாங்க. இங்க அந்த ஃபயரும் ஆர்வமும்தான் தேவை’னு எப்பவுமே சொல்வார். அவரே ஒரு சினிமா பல்கலைக்கழகம். அவர்கிட்ட கேட்டாலே அவ்வளவு ஐடியா கொடுப்பார். அதை நாங்க பண்ணாலே போதும். அப்படி ஒரு திறந்த மனசோடு எங்களுக்கு ஆதரவு தெரிவிச்சிருக்கார்.  அவரைப்போன்ற சீனியர்ஸ் எங்களை வழிநடத்தினால், எந்தப் பிரச்னையும் இருக்காது.  கமல் சார் பாண்டவர் அணியின் தலைவர் வேட்பாளரா நாசர் சாரை முன்மொழிஞ்சிருக்கார். ஏன்னா, அவங்க நட்பு அந்த அளவுக்கு வலிமையானது.

டான்ஸ் மாஸ்டர் ஷோபி: ' 'விருமாண்டி’ படத்துக்கு, ஒரு நடன இயக்குநருக்கான எல்லாத் தகுதியும் உள்ள உதவி நடன இயக்குநர் தேவைனு கேட்டு, என்னை ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டார் கமல் சார். ஒவ்வொரு விநாடியும் அவர்கிட்ட நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். சினிமாவுக்காக மட்டுமே வாழ்றவர் அவர். அந்தப் படத்துல நடிச்ச காளை மாட்டை, அது கன்னுக்குட்டியா இருக்கிறப்ப இருந்தே வீட்ல வெச்சு  வளர்த்திருக்கார். அப்பதான் ஷூட்டிங் சமயம் அவர்கூட  சொல்றதைக் கேட்டு நடிக்கும்... அந்தக் காட்சி இயல்பா இருக்கும்னு பிளான். அவ்வளவு தொலைநோக்குப் பார்வையோடு செயல்படுறவர். லலிதாவை 'உத்தம வில்லன்’ மூலமா தமிழ்ல நடன இயக்குநரா அறிமுகம் செய்ததும் கமல் சார்தான்.   
 
ஆஷா சரத்: 'ஆமாங்க. இது முழுக்க கடவுள் அருள்னுதான் சொல்லணும். 'பாபநாசம்’ முடியும்போதே 'தூங்காவனம்’ படத்தில் நடிக்க கமல் சார் என்னைக் கூப்பிட்டார். ஒரு சின்ன கெஸ்ட் ரோல். கமலின் ஒரு மனைவியா நடிச்சுருக்கேன். மீண்டும் எனக்கு வாய்ப்பு கொடுத்த கமல் சாருக்கு ரொம்ப தேங்க்ஸ்!'
 
ஸ்ருதி ஹாசன்: ''பொதுவா நாமெல்லாம், 'ஒரு நல்ல படம் பார்த்தேன். அன்னைக்குத் தூக்கமே வரலை’னுதானே சொல்வோம். ஆனா, 'நல்ல படம் பார்த்தேன். அதனால நிம்மதியாத் தூங்கினேன்’னு அப்பா சொல்வார். அதான் அவர் ஸ்பெஷல்.இப்பவும் அவர் மூலமாத்தான் சினிமாவைத் தினம் தினம் கத்துட்டே இருக்கேன்.  புதுசா ஒரு டெக்னாலஜி வந்தா, அதைத் தெரிஞ்சுக்க தன்னையே தொலைப்பார். எங்கே, எப்படி இருந்தாலும் அந்த ஆர்வம் நமக்குள் இருக்கணும்னு, அவரோடு பேசுற ஒவ்வொரு நிமிஷமும் தோணிட்டே இருக்கும்!''
 
ஜிப்ரான் : நெஞ்சில் கைவைத்து பணிவாகச் சிரிக்கிறார் கமல்... ''அந்த மேஜிக் எப்படி நடந்ததுன்னு எனக்கே ஆச்சர்யம்தான். அவர்கூட வேலை பார்க்கிற ஒவ்வொரு நாளும் பெர்சனலா நிறையக் கத்துக்கிட்டே இருக்கேன். கமல் சார்கூட டெல்லியில் முதன்முதலா 'விஸ்வரூபம்-2’ படத்துக்காக டிஸ்கஷன் போனப்போ, ரொம்ப நெர்வஸா இருந்தேன். 'உட்காருங்க ஜிப்ரான்’னு கையைப் பிடிச்சுப் பக்கத்துல உட்காரவெச்சுக்கிட்டார். 'உங்க மியூசிக் எனக்குப் பிடிச்சிருந்தது. உங்களைப் பத்தி தெரிஞ்சுக்க ஆசைப்படுறேன். ஒரு மியூசிக் டைரக்டரா இல்லாம, சாதாரண ஜிப்ரானா பேசுங்க’னு சொன்னார். குடும்பம், படிப்பு, இசைக்கு எப்படி வந்தேன்னு நான் சொல்லச் சொல்ல, எல்லாத்தையும் கேட்டார். பார்த்தா... முழுசா ரெண்டு மணி நேரம் ஆச்சு. அப்புறம்தான் என் கூச்சத்தை, தயக்கத்தைப் போக்கி கொஞ்சம் நான் சகஜமான பிறகுதான், 'விஸ்வரூபம்-2’ படத்தை எனக்கு ப்ளே பண்ணார்.
 
சத்யராஜ்: எனக்கு பெரிய திருப்புமுனை கொடுத்த 'காக்கிச்சட்டை’ பட 'தகிடு தகிடு’ வசனத்தின் முதல் ரசிகர் கமல் சார்தான். அந்தக் காட்சியின் படப்பிடிப்பு, ராத்திரி 12 மணிக்கு நடந்தது. ஸ்க்ரிப்ட்ல இல்லாம நடிக்கும்போது 'தகிடு தகிடு’னு நான் சொன்ன வசனம் தூரத்துல நின்னவங்களுக்குக் கேக்கலை. ஆனா, பக்கத்துல நின்ன கமல் சார் கேட்டுட்டு பெருசா சத்தம்போட்டுச் சிரிச்சிட்டார். 'இது சிரிக்கிற சீனே கிடையாதே’னு டைரக்டருக்கு அதிர்ச்சி. 'சத்யராஜ் சொன்ன மாடுலேஷனைக் கேட்டுச் சிரிச்சிட்டேன். இன்னொரு தடவை சொல்லிக்காட்டுங்க’னு கமல் சார் சொல்ல, நான் சொல்ல, யூனிட்டே சிரிச்சது.
நான் லொள்ளு, ஜொள்ளா நடிச்சிட்டு இருந்தப்ப, என்னை வேற கலர்ல காமிச்ச 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ படத்தைத் தயாரித்தார் கமல் சார். அதோட 150-வது நாள் விழாவில் சிவாஜி சார் தலைமையில் ஆர்.சி.சக்தி, மணிவண்ணன் ரெண்டு பேரையும் கௌரவிச்சார். 'இது என்ன கூட்டணி’னு கேட்டதுக்கு, 'என்னை இனம் கண்டு கொண்டவர் ஆர்.சி.சக்தி, உங்களை இனம் கண்டுகொண்டவர் மணிவண்ணன்’னு சொன்னார். அந்த மனசு... அதான் கமல் சார்!''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!