Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தின் முதல் ஓட்டத்தூதுவன் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

நியூட்டனின் மூன்றாம் விதி படத்திற்கு கதை- வசனம் எழுதிய சிதம்பரம், இப்போது, 'ஓட்டத்தூதுவன் 1854' படத்தின்   இயக்குநர்.

"சினிமாவுக்காக படிப்பையே சென்னைக்கு மாற்றிக் கொண்டவன்  நான். நெல்லை டவுனில்தான் பத்தாம் வகுப்பு வரை படித்தேன்.  சினிமாவின் மீது அதீத காதல். இளவயதில் அப்பாவோடு கைகோர்த்துக் கொண்டு நடக்கும் போது அவர் சொல்லும் சம்பவங்கள் எல்லாம் எனக்குள் திரைக்கதையாகி ஓடிக் கொண்டிருக்கும்.  எனக்குள் ஊற்றெடுத்துக் கொண்டிருந்த சினிமா  'சிதம்பரத்தை' கோடம்பாக்கத்தில்தான் முழுமைப் படுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு சென்னைக்கு 1982-ல் வந்தேன்.  சென்னையில்தான்  பிளஸ்-டூ முடித்தேன். கையில் பணம் இல்லாமல் சென்னையில் தங்கி சினிமா வாய்ப்பு தேட முடியாது என்பது ஒரு சில நாட்களிலேயே புரிந்து விட்டது. இதனால், ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலைக்குச் சேர்ந்தேன். வாரத்தில் ஒருநாள் விடுமுறை எடுத்துக் கொண்டு 'சினிமா ஏரியா'வில் வாய்ப்புக்காக சுற்ற ஆரம்பித்தேன்.

சில ஆண்டுகளில் டைரக்டர் ஆதவன் கண்களில் பட்டுவிட்டேன். என் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு ஆதரவளித்தார். அவர் இயக்கத்தில் வெளிவந்த புதுப்புது ராகங்கள், கலைஞரின் பாசமழை போன்ற படங்களில் அசிஸ்டெண்ட் ஆக பணியாற்ற வாய்ப்பு கொடுத்தார். அந்த அறிமுகமும் வாய்ப்புகளும்தான் ‘ஓட்டத்தூதுவன்’ வரை கொண்டு வந்திருக்கிறது. 

’’அது என்ன ஓட்டத்தூதுவன்.... பெயரே புதுமையாக இருக்கிறதே ?’’

பெயர், கதையோடு தொடர்புடையது... இந்தக் கதைக்கான 'புள்ளி'  என் அப்பா, இளவயதில் சொன்ன விஷயத்தின் அடிப்படையில் உயிர்த்ததுதான்.  சென்னையில் தபால் துறையின் 150-ம் ஆண்டு விழா கொண்டாட்டத்துக்குப் போயிருந்தேன். அந்த விழா அரங்கில் கையில் ஈட்டி,  காலில் தோல் தெருப்பு,  தோளில் தொங்கும் லாந்தர் விளக்குடன் ஒரு வார்னீஷ் படத்தை வைத்திருந்தார்கள். 'இவர்தான் முதல் போஸ்ட்மேன்' என்பது போல...

அதைப் பார்த்ததும் எனக்குள் அப்பாவின் கதைப் புள்ளி வெடித்து வெளிக் கிளம்பியது. தபால் துறையின் வரலாற்றை வேகமாக தேடத் தொடங்கினேன். அது தொடர்பான நண்பர்களை தேடிப் பிடித்தேன். எனக்கு இளவயதில் பொக்கிஷமாக கிடைத்த சோவியத் நூலக வட்டாரங்களில் திரிந்தேன். ஒவ்வொரு பயணமும் ஒரு அனுபவத்தைக் கொடுத்தது. அத்தனையையும் கொஞ்சமும் சிதறிடாமல் சேகரித்தேன்.

அடுத்தது படம்தானே, அதிக பிரமாண்டம் கூடாது, பீரியாடிகல் என்ற விஷயமும் தொலையக் கூடாது என்ற அடிப்படையில், இன்றைய கால கட்டத்தின் எந்தவொரு நிழலும் விழுந்து விடாதபடியும், அன்றைய கால கட்டத்தின் எந்தவொரு நிஜமும் தொலைந்து விடாத படியும் குறிப்புகளில் கவனம் செலுத்தினேன். சண்டைக் காட்சிகள், பாடல்கள் என்று எல்லா விஷயமும் 'கமர்ஷியல்' தன்மையுடன் வந்திருக்கிறது. உலக திரைப்பட விழாவிற்காக சென்னையில் படத்தை வெளியிட்ட போது ரசிகர்கள் ஒவ்வொரு காட்சியின்போதும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றார்கள். இன்று மன நிறைவோடு ஓட்டத்தூதுவனின் ஓட்டத்தை திரையரங்குகளில் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

"கதையை கொஞ்சம் சொல்லுங்களேன்"

ஈ.ஐ.சி. எனப்படும் ஈஸ்ட் இன்டியா கம்பெனிக் காரர்கள் தங்களுடைய நிர்வாக வசதிக்காக, 1854-ல் போஸ்டல் முறையைக் கொண்டு வருகிறார்கள். இப்போது உள்ளதைப் போல அப்போது வாகன வசதிகள் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. போஸ்ட்மேன்கள் ' மெயில் ரன்னர்' என்றழைக்கப் பட்டனர். அவர்களின் வேலை   தொடர்ந்து  நடை ஓட்டமாகவே கடிதங்கள், பணம், பொருட்களை கொண்டு போய் உரிய முகவரியில் சேர்க்க வேண்டும்.  நடந்து போகக்கூடாது. தாமதமாகி விடும். ஓடவும் கூடாது விரைவில் சோர்ந்து விடும் என்பதுதான் இதற்கான முக்கிய விதி.   தபாலில் கொண்டு வரப்படும் பணங்களை யாரும் வழி மறித்து கொள்ளையடித்து விடக்கூடாது என்பதற்காக ஒரு கத்தியையும், இருட்டு பயணத்தின் போது  வெளிச்சத் துணையாக ஒரு லாந்தர் விளக்கையும், கால்களுக்கு கனமான ஒரு தோல் செருப்பையும் போஸ்ட் மேன்களுக்கு கொடுத்திருந்தனர்.  இதைப் பின்னணியில் கொண்டு அந்தக் காலகட்டத்தின் பின்னணியில் அமைந்த ஒரு கதைதான் 'ஓட்டத்தூதுவன்- 1854' .

கொல்கத்தாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட   தேர்வாகியிருக்கிற  ஒரே தமிழ்ப்படம் "ஓட்டத் தூதுவன் 1854". புனே வில் நடைபெற்ற  சர்வதேச அளவிலான திரைப்பட விழாவில் வெளியிட தேர்வான ஒரே தமிழ்ப்படமும் இதுதான். கடந்த மாதம் 30-ந்தேதி, பெங்களூருவிலும், பின்னர் சென்னையிலும் நடைபெற்ற பட விழாக்களில் வெளியாகி பலரின் பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறது படம். படம் தேனி மாவட்டத்தின் மலைப் பகுதியில்தான் முற்றிலும் படமாக்கப் பட்டிருக்கிறது, இந்தக் காலத்தின் எந்தவித நவீனங்களும் வந்து விடாதபடி. பொதுமக்களின் பார்வைக்காக காத்திருக்கிறான் என் ஓட்டத் தூதுவன்!’’ கண்களில் நம்பிக்கை மின்னச் சிரிக்கிறார் சிதம்பரம்.

- ந.பா.சேதுராமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?