Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய் டி.வி கலக்கப்போவது யாரு குரூப்புடன் கலகல பேட்டி

விஜய் டிவியின் கலக்கப்போவது சீசன் 5 - ல் அதிரிபுதிரியா காமெடி செய்துகொண்டிருக்கும் நவீன், சதீஷ், தீனா, சரத் இவர்களை சந்தித்தேன்.

"வழக்கமா மஞ்சு க்ரூப் வழங்கும்னு ஆங்கர் ஜாக்லின் இன்ட்ரோ கொடுத்தாதான் நாங்க பேசுவோம். முதல் முறையா ஓப்பனிங்கே இல்லாம பேசப்போறோம்'' என ஜாக்லினை வம்பிழுத்தபடியே ஆரம்பிக்கிறார் நவீன்.

''என் முழுப்பெயர் நவீன் முரளிதர். திருச்சிதான் பாஸ் சொந்த ஊர். அப்பா மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட். அவர் பேசுவதைக் கேட்டுக் கேட்டு எனக்கும் மிமிக்ரி ஆசை வர, நானும் கத்துக்கிட்டேன் .ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜினு பழைய வாய்ஸ்தான் பேசிக்கிட்டு இருந்தேன். மிமிக்ரி பண்ண வர்ற எல்லோரும் இதையே பேசினா ஆடியன்ஸுக்கு போரடிக்கும். அதனால இதுவரை யாரும் பண்ணாத வித்தியாசமான வாய்ஸ் ட்ரை பண்ணலாமேன்னு தோனுச்சு. அப்போதான் அப்துல் கலாம், சசிகுமார், ரோபோ ஷங்கர்,சிங்க முத்துனு புது ரூட்டுக்குத் தாவினேன். இப்போ விஜய் டி.வி-யின் வெளிச்சமும் என் மேல் விழ வாழ்க்கை சல்லுனு ராக்கெட் வேகத்தில் பறக்க ஆரம்பிச்சிடுச்சு. எதிர்காலத்தில் ஒரு நடிகனாகணும். ஹீரோதான்னு இல்லை. எந்த கேரக்டரா இருந்தாலும் ஓகே'' என நவீன் முடிக்க சதீஷ் தொடர்ந்தார்.

''நவீன் இவ்வளவு நேரம் பேசினானே, என்னைப் பத்தி ஒரு வார்த்தையாவது சொன்னானா?'' என எடுத்தவுடனேயே எகிறினார் சதீஷ். ''நான்தாங்க கலக்கப்போவது யாரில் இவனுக்கு பார்ட்னர். பக்கா சென்னைப் பையன். விஸ்காம் படிச்சிட்டு ஸ்டேஜ் ஷோஸ்னு ஜாலியா சுத்திக்கிட்டு இருந்தேன். அப்போ சில இயக்குநர்களையும் போய் பார்த்தேன். எதுவும் செட்டாகலை. கடைசியா விஜய் டி.வி-தான் என் திறைமைய உலகத்துக்கே படம் பிடிச்சுக் காட்டுச்சு. மிமிக்ரியில் எனக்கு ஆர்வம் ஜாஸ்தி. வி.எஸ்.ராகவன், ஜெயம் ரவி, ஜீவான்னு எனக்கு என்ன வாய்ஸ் வருமோ அதை மட்டும் பெர்ஃபெக்டா பண்ணிக்கிட்டிருக்கேன். நவீனும் நானும் தல-தளபதியா நடிச்ச எபிஸோட் பயங்கர ஹிட்டாச்சு. ஒரு சில நேரங்களில் எனக்கோ அவனுக்கோ கான்செப்ட் மறந்து போகும். அந்த இடத்தில் ஏதாவது ஒரு கவுன்ட்டரைப் போட்டு சமாளிப்போம்'' என தொழில் ரகசியத்தை அவர் சொல்ல ஆரம்பிக்கும்போது,

''ஏய்... கொஞ்சம் பொறுப்பா. நானும் ஏதாவது பேசிக்கிறேன்'' எனக் குறுக்கே பாய்ந்தார் தீனா. ''நமக்கு எப்பவும் வாய் சும்மாவே கெடக்காது பாஸ். எதையாவது பேசிக்கிட்டே இருப்பேன். அட இதுவே ஒரு பெரிய திறமை தானேன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு திருவாரூரில் இருந்து சென்னைக்கு வண்டி ஏறினேன். விஜய் டி.வி-யின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அசிஸ்டென்ட் டைரக்டரா நாலு வருஷம் வேலை. இப்படியே எத்தனை நாள்தான் நாமளும் கேமராவுக்குப் பின்னாடியே நிற்கிறதுனு ஆடிஷன்ல ஜெயிச்சு நானும் கன்டஸ்டன்டாகிட்டேன். 'மிமிக்ரிய மட்டும் வெச்சு ரொம்ப நாள் தாக்குப் பிடிக்க முடியாது. பாடிலாங்குவேஜும் சேர்த்து பண்ணு அப்போதான் ஃபீல்டுல நிக்கலாம்'னு டைரக்டர் சொன்னார். இப்போ புதுசு புதுசா ஐடியாஸ் யோசிச்சு பண்றேன். நம்ம பார்ட்னர் சரத்தும் இருக்காரு அவர்கிட்டேயும் எதாவது கேளுங்க'' என சரத் பக்கம் திருப்பி விட்டார்.

எதையோ தீவிரமா யோசித்துக்கொண்டிருந்த சரத். டக்குன்னு நம்ம பக்கம் தாவி ''பேஸிக்கா நான் ஒரு பைக் மெக்கானிக். திருவாரூரில் இருக்கும் பாதி பைக் நான் கழட்டி மாட்டினதுதான். கடைக்கு வர்ற கஸ்டமர்ஸ்கிட்ட மிமிக்ரி பண்ணிக் காட்டுவேன். 'தம்பி நீங்க நல்லா பண்றீங்க. கோடம்பாக்கத்தை ஒரு ரவுண்டு அடிக்கலாம்'னு உசுப்பேத்த ஸ்பானரைத் தூக்கிப் போட்டுட்டு சென்னைக்கு வந்துட்டேன். விஜய் டி.வி-யில் எனக்கு வாய்ப்பு கிடைச்சது சுவாரசியமான சம்பவம். கலக்கப்போவது யாரு இயக்குநர் தாம்சன் சாரை ஒரு நாள் ரோட்டில் பாத்தேன். அவர்கிட்ட போய் எனக்கு நல்லா மிமிக்ரி பண்ணத் தெரியும்னு சொன்னேன். 'எங்கே பண்ணு' னு சொல்லிட்டார். நான் மொட்டை ராஜேந்திரன் வாய்ஸில் 'ஹாய் கைஸ் ஏன்பா தல தளபதி'னு சில டயலாக்ஸ் நடுரோடுனுகூடப் பார்க்காம தெறிக்க விட, போற வர்ற அத்தனை பேரும் திரும்பிப் பார்த்தாங்க. இப்போ உலகமே என்னை டி.வி-ல பார்க்குது. எங்க நாலு பேரையும் இன்னைக்கு நாலு பேருக்குத் தெரியுதுனா அதுக்கு காரணம் டைரக்டர் தாம்சன் சார்தான்'' என சரத் சொல்ல மற்ற மூணு பேரும் அதுக்கு ஆமாம் போடுறாங்க.

என்ன இருந்தாலும் தங்கத் தலைவி ஜாக்லினை நீங்க நக்கல் பண்றதைத்தான் ஏத்துக்க முடியலை பாஸ்.

-ஜுல்ஃபி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்