Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இனி சாமி கும்பிடமாட்டேன்!' - நகைச்சுவை நடிகர் மதுரை முத்து உருக்கம்!

க்களை மகிழ்விக்கும் கலைஞர்களின் சொந்த வாழ்க்கை பெரும்பாலும் சோகமாகவே அமைந்து விடுகிறது. நடிகர் விவேக் தன் மகனை இழந்த சோகம் மறைவதற்குள், சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் நகைச்சுவை நடிகர் 'மதுரை' முத்து தன் மனைவியை இழந்த சோகம் நிகழ்ந்திருக்கிறது. 

மனைவி வையம்மாள் தனக்காகவும்,  தங்களின் குழந்தைகளுக்காகவுமே வாழ்ந்தவர் என கண்ணீர் விடுகிறார் 'மதுரை' முத்து.

சோகத்தில் இருந்தவரை ஆற்றுப்படுத்திவிட்டுப் பேசினோம்.

“நானும் மூன்று முறை பெரிய சாலை விபத்துகளில் சிக்கியிருக்கிறேன். மூன்று முறையும் என் மனைவியின் கடவுள் பக்திதான் என்னை காப்பாற்றியது. ஆனால் அந்த பக்தி அவளை காப்பாற்றவில்லை என்பது பெரும் வேதனையை தருகிறது. என் மனைவி விபத்தில் உயிரிழந்த சமயம் நான் ஒரு நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அங்கு எனக்கு 'அம்மை' தாக்கியிருந்தது. வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு சென்றிருந்தாலும், தினம் தவறாமல் என் மனைவி மற்றும் குழந்தைகளிடம் போனில் பேசிவிடுவேன். 

கடந்த பிப்ரவரி 2-ம் தேதி என் மனைவியிடம் பேசும்போது, எனக்கு அம்மை தாக்கியுள்ளதாக சொன்னபோது துடித்துப்போனாள்.  எனக்கு ஆறுதல் சொன்னதுடன், அன்று இரவிலிருந்து 3-ம் தேதி காலை 5.30 மணிவரை எனக்காக பூஜை செய்துள்ளார். மேலும், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்கு சென்று எனக்காக சிறப்பு பூஜை செய்ய, காரில் சென்றுகொண்டிருந்தபோதுதான் அந்த கொடிய சாலை விபத்து ஏற்பட்டு இறந்துவிட்டாள். 

மதுரையில் நடந்த ஒரு மேடை நிகழ்ச்சியில்தான் அவளை முதன்முறையா சந்திச்சேன். அவரது குணம் பிடித்ததால் நண்பர்களானோம். அதுவே பின்னர் காதலாகி, தம்பதிகளானோம். கல்யாணத்திற்குப் பிறகு எனக்காகவும், எங்கள் குழந்தைகளுக்காகவும் தன்னோட வாழ்க்கையை அர்ப்பணிச்சிக்கிட்டவங்க, என்னோட மனைவி வையம்மாள். அவங்களுக்கு கடவுள் பக்தி அதிகம். காளி பக்தை. எப்போ பார்த்தாலும் சாமி கும்பிட்டுகிட்டே இருப்பாங்க; தினமும் எதாவது ஒரு கோயிலுக்கு போயிடுவாங்க. 

முறையா சங்கீதம் கத்துக்கிட்ட என் மனைவி, நல்லா பாடுவாங்க. எனக்காகவே வாழ்ந்த என் மனைவியை ஐந்துமுறை  வெளிநாடுகளுக்கு கூட்டிட்டுப் போனதை தவிர, நான் வேற எதுவும் செய்யவே இல்லை. நான் இன்னும் பெரிய அளவில் சாதித்து, என் மனைவியை காலம் முழுக்க சந்தோஷமாக வெச்சிருக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, கடவுள் அதற்கு வழிகொடுக்கலை. இப்போ அவளை இழந்து தவிக்கிறேன்” என்றார் கண்ணீர் விட்டபடி.

நான் வழக்கமா பயன்படுத்தற காரினால் எனக்கு அடிக்கடி முதுகு வலி வரும். இதனால், வர பிப்ரவரி 15-ம் தேதி எங்க திருமண நாளன்று எனக்கு ஆடி சொகுசு கார் ஒன்றினை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்திருந்தாராம் என் மனைவி. அது இப்போதுதான் தெரியவந்தது. ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்வது என் மனைவிக்கு பிடித்தமான விஷயம். அதனால் என் மனைவிக்கு நானும் இன்ப அதிர்ச்சி கொடுக்க எங்க திருமண நாளன்று நிறைய ஏழைக் குழந்தைகளை வீட்டுக்கு வரவழைச்சு சாப்பாடு போடணும்னு நான் நினைச்சிருந்தேன். சின்னத்திரையில் புகழ்பெற்ற காமெடியனான நான், சினிமாவிலும் பெரிய அளவில் வர வேண்டும் என்பதுதான் என் மனைவியின் ஒரே ஆசை. 

ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் மதுரையில கார்டனோட பெரிய வீடு ஒன்றைக் கட்டினோம். என் மனைவிதான் பார்த்து பார்த்து வீட்டைக் கட்டினாங்க. ஆனா, இந்த வீட்டுல சந்தோஷமா வாழ்றதுக்கு என் மனைவிக்கு கொடுத்துவைக்கலை. என் மனைவியும், குழந்தைகளும்தான் என் முதல் ரசிகர்கள். அதனால வீட்டில் தினமும் காமெடி செய்து, அவர்களைத்தான் முதலில் திருப்திப்படுத்துவேன். 'தன்னைச் சுற்றி வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தியின் அடியில் எப்போதும் இருட்டாகத்தான் இருக்கும்'. தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்களை நேரடியாகவும், தொலைக்காட்சிகளின் வாயிலாகவும் மகிழ்விக்கும் என்னைப் போன்ற நகைச்சுவை கலைஞர்களுக்கும் அந்தநிலைதான்.

எந்த நேரமும் கடவுளையே கும்பிட்டுக்கொண்டு இருந்த என் மனைவியை ஒரு கடவுளும் காப்பாத்தலையே என்பதுதான் என் கோபம். அதனால் இனி எந்த கடவுளையும் நான் கும்பிடப்போறதில்லை. எங்க வீட்டுல என் மனைவிக்கு கோயில் கட்டி, என் மனைவியோட சிலையை வெச்சுதான் இனி நான் கும்பிடப்போறேன். அவதான் இனி எனக்கு தெய்வம்” என்கிற மதுரை முத்து சற்று இடைவெளி விட்டு பேசுகிறார். 

“என் இரண்டு பொண்ணுகளுக்கும் இன்னும் என் மனைவி இறந்த விஷயமே முழுசா தெரியாதுங்கறது கொடுமை. 'அம்மா எங்கப்பா... எப்போ வருவாங்க?' னு அவங்க கேட்கிற கேள்விகளுக்கு என்ன சொல்றதுன்னெ தெரியாம அழுதுட்டிருக்கேன். 'அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க'ன்னு சொல்லி சமாளிச்சிக்கிட்டு வர்றேன். குழந்தைகளுக்கு அம்மா இறந்துட்டாங்கன்னு எப்படி புரியவைக்கிறதுன்னே தெரியலை; இன்னும் எத்தனை நாளைக்குதான் அம்மாவோட முகத்தை காட்டாம சமாளிக்கப் போறேன்னும் தெரியலை” என கண்கலங்கியவருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. 

- கு. ஆனந்தராஜ்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்