முருகதாஸிடம் உதவி இயக்குநர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

“தன்னோட அடையாளத்த இழந்துட்டு அத தேடுற ஒருத்தன், அவன் சந்திக்கும் சிக்கல்கள், சமுதாயத்துல பல பேரோட கண்ணுக்கு தெரியாமல் இருக்குற ஒரு முக்கியமான பிரச்சனை, அதோட வீரியம் இது எல்லாத்தையும் இன்னைக்கு இருக்கும் ரசிகர்களோட ரசனைக்கு ஏற்ப சொல்ல வர்றான் கணிதன்” நம்பிக்கையோடு தொடங்குகிறார் இயக்குநர் டி.என்.சந்தோஷ். இயக்குநர் முருகதாஸின் சீடர்.

இந்த கதைக்குள் அதர்வா எப்படி வந்தார்?

கதைப்படி ஹீரோ 25க்கும் கம்மியானவர். உண்மையிலேயே அந்த வயசுல இருக்குற துடிப்பான ஹீரோ பண்ணா  நல்லா இருக்கும்னு தோணுச்சு. அப்படித் தேடும் போது தான் அதர்வா பொருத்தமா தென்பட்டார். ‘கவுதம் ராமலிங்கம்’ங்கற கேர்க்டருக்கு அவ்ளோ கச்சிதமா உயிர் கொடுத்து இருக்கார். கண்டிப்பா அவர் கேரீயர்ல நிச்சயம் இந்தப் படம் ஒரு பெரிய பிரேக் கொடுக்கும்.

முருகதாஸின் எல்லாப் படங்களிலும் சமுதாயத்துக்கு ஒரு மெசேஜ் இருக்கும் அவரோட ஸ்டூடன்ட் நீங்க உங்ககிட்டயும் அத எதிர்பார்க்கலாமா?

பொதுவாவே சமூக எண்ணங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறவன் நான். முருகதாஸ் சாரும் அதே மாதிரி தான்.அந்த வெவ் லென்த்துக்காகத் தான் அவர் கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்தேன். ஆனா அதுக்காக மெசேஜ் சொல்லியே தீரணும்னு படம் எடுக்க முடியாது. அதுக்கான கதைக் களம் அமையும் போது நிச்சயம் அதுவாவே வரும். இது விட முக்கியமா அவர் கிட்ட கத்துகிட்டது உதவி இயக்குநர்களுக்கு அவர் கொடுக்குற முக்கியத்துவமும் விடா முயற்சியும்.

படப்பிடிப்பின் போது என்ன என்ன மெனக்கெடல்கள் மேற்கொண்டீங்க?

கதை தயார் பண்ணும் போதே லைவ்லியா இருக்கணும்னு நிறைய பீல்ட் ஒர்க் பண்ணினோம். அது அப்படியே திரையில தெரியணும்ங்கரதுக்காக பாரீஸ் கார்னர்,  ரங்கநாதன் தெருனு  ஜன நெருக்கடி அதிகமா இருக்குற இடங்களில் கூட ஹிடன் கேமராக்கள் வெச்சு எடுத்தோம். மொத்தமா இப்போ பார்க்கும் போது ரொம்ப நல்லா வந்து இருக்கு.


“இந்தியாவையே ஒரு கலக்கு கலக்குவான்”னு தாணு சார் உங்களப் பாராட்டினாரே?

உண்மையிலேயே அவர் அப்படி என்னை வாழ்த்துனது எனக்கே ஆச்சரியமா தான் இருந்துச்சு. என்னோட உழைப்பு, அந்த அளவுக்கு ஈர்த்திருக்கு போல. அவர் வாழ்த்துக்கு ஏற்ப என்னோட அடுத்தடுத்த படங்கள் இருக்கும்.

சமூக வலைதளங்கள் இன்னைக்கு ஒரு திரைப்படத்தோட வெற்றிய நிர்ணயம் பண்றதுல பெரும் பங்கு வகிக்குது.  அறிமுக இயக்குனரா இத எப்படி பார்க்குறீங்க?

கண்டிப்பா இது ரொம்ப ஆரோக்கியமான விஷயம். ஒரு படத்தை ரொம்ப சரியாவும் உண்மையாவும் விமர்சனம் பண்றாங்க. அதனால் அத நம்பி நிறைய பேர் தியேட்டருக்கு வர்றாங்க. சின்ன பட்ஜெட் படங்களுக்கு இது பெரிய டானிக்.

-பி.நிர்மல் (மாணவ பத்திரிகையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!