ரொமான்ஸே இல்லாத ரொமான்டிக் படம் இது! விஜய்சேதுபதி அசால்ட் பேட்டி!

சூதுகவ்வும் படத்திற்குப் பிறகு நலன்குமாரசாமி, விஜய்சேதுபதி காம்போவில் உருவாகியிருக்கும் படம் தான் காதலும்கடந்துபோகும். பிரேமம் படத்தின் மூலம் தமிழ்  ரசிகர்களின் மனதில் க்யூட் குயினாக சேர் போட்டு அமர்ந்திருக்கும் மடோனா சபாஸ்டியன் தான் நாயகி. நாளை படம் ரிலீஸ், ஆனால் எந்த பதட்டமும் இல்லாமல் இருக்கும் விஜய்சேதுபதியிடம் அசால்டாக சில கேள்விகள்.
 
 
அதென்ன காதலும் கடந்துபோகும்? 
 
ரொமான்டிக் காமெடி தான் படமே. ஆனா ரொமான்ஸே இருக்காது. இதான் இந்தப்படத்தோட ஸ்பெஷல். மிடில்கிளாஸ் பொண்ணுக்கும், கரடுமொரடா இருக்குற பையனுக்கும் இடையேயான அன்பு, அது காதலையும் தாண்டினது, அதான் பாஸ் காதலும் கடந்துபோகும்.
 
ஏற்கெனவே பாலிவுட்டில் ரீமேக்காகி சரியா ஓடலையே? தமிழுக்காக என்ன ஸ்பெஷலா சேர்த்துருக்கீங்க? 
 
ஸ்கிரிப்ட யோசிக்கும்போது கதையோட மையப்புள்ளியை இயக்குநர் உணரணும். கொரியனில் கச்சிதமா படத்தை உருவாக்கியிருப்பார் இயக்குநர். அந்த உணர்வை  நலனும் தமிழாக்கம்செய்யும் போது கொண்டுவந்துருக்காரு. படம் வெற்றிபெறணும்னா இயக்குநர் பார்வையில் தான் பண்ணனும். ரீமேக் என்றாலும் ஒவ்வொரு சீனையும் காப்பியடிச்சு பண்ணா நிச்சயம் படம் நல்லா அமையாது. 
 
 
கொரியன் படத்தின் ரீமேக்கில் நடிக்க சம்மதிக்க காரணம்?
 
முதல்ல ஸ்கிரிப்ட் தான் படிச்சேன், அதுக்கப்புறம் தான் படத்தையே பார்த்தேன். பார்க்குறதுக்கு முன்னாடி, படிச்சதுமே பிடிச்சது. கொரியன் படத்துல உள்ள சீன்ஸ் தான் அதிகமா இருக்கும், ஆனா தமிழுக்கு ஏற்றதுபோல நலன் கொண்டுவந்திருக்காரு, நலன்னோட ப்ளஸ்ஸே டைலாக்ஸ்தான். இந்தப் படத்துக்கும் அதான் ப்ளஸ். சிம்பிளா இருந்தாலும் பவர்ஃபுல்லா இருக்கும். 
 
சூதுகவ்வும் படத்தில் கிடைத்த எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்யுமா? 
 
எந்தப் படத்தையும் இன்னொரு படம் பூர்த்திசெய்யாது. சினிமா ஆத்மார்த்தமா செய்யுற வேலை. இந்த படமும் அதற்கான வேலையை செய்யும்.  ஏற்கெனவே பண்ண படத்தோட எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யணும் என்கிற எண்ணம் எங்களுக்கு கிடையாது. ஆனா படம் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும். 
 
இந்தப் படத்துல நீங்க ரெளடியா இல்ல ஃப்ராடா? 
 
நானும் ரவுடிதான் படத்துல நான் ரவுடி இல்லை. ரவுடினு பொய் சொல்லிட்டுத் திரியுற ஃப்ராட்.  ஆனா இந்தப் படத்துல ரிட்டையர்மெண்ட் ஆகப்போக்குற ரவுடி, ஆனா ரவுடிஸம் பண்றவன் கிடையாது. ரவுடி பற்றிய படமில்லை இது, தவிர காமெடியும் ரொமான்ஸும் தான். 
 
 
நடிகர், பாடகர், வசனகர்த்தா, தயாரிப்பாளர் எல்லாம் பண்டீங்க! எப்போ இயக்குநராக பார்க்கலாம்? 
 
தெரியலையே... எனக்குத்தோணும், ஆனா பொறுமையில்லையே... அதுமட்டுமில்லாம எனக்கு தொழில் தெரியாது. இயக்குநராகலாம்,  ஆகாமலும் போகலாம். ஆனா ஸ்கிரிப்ட் எழுதிட்டுதான் இருக்கேன். 
 
உங்களுடைய நிறைய படங்கள் வெளிவரமுடியாம காத்திருக்கே?
 
எதுவும் என்கையில் கிடையாது, என் வேலை படம் நடிக்கிறது, படம் வெளியாகபோவது தயாரிப்பாளர் கையிலதான் இருக்கு. படம் ரிலீஸாகப்போகுது புரோமோஷனுக்கு  வாங்கனு கூப்பிட்டா போவேன். தயாரிப்பாளர் தான் முடிவு செய்யணும், எதையும் நான் ப்ளான் பண்ணலை. படம் ரிலிஸாகறதெல்லாம் தன்னாலயே நடக்கும். 
 
உங்க தயாரிப்பில் மேற்குதொடர்ச்சி மலை தேசிய விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறதே? 
 
என்னுடைய தயாரிப்பில் இரண்டாவது படம் தான் மேற்குதொடர்ச்சி மலை. சுற்றுசூழல் சார்ந்தப் படம். மேற்குதொடர்ச்சி மலையில் வாழும் சாதாரண மனுஷனைப் பத்தின படம். இப்போ இருக்குற வளர்ச்சி, அவன சுற்றி நடக்குற அரசியல்  என்பதே கதை. ஆரஞ்சுமிட்டாய் கொடுத்த பெருமையை இந்தப் படம் நிச்சயம் தரும்.   
 
 
தயாரிப்பாளரா என்ன கற்றுக்கொண்டீர்கள்? 
 
படம் தயாரிச்சி ரிலீஸ் பண்றது அவ்வளவு ஈஸியில்லை. கஷ்டப்பட்டா தான் படம் உருவாகும். ரெண்டு தானே பண்ணிருக்கேன். இன்னும் நிறைய பண்ணும்போது தான் அதோட கஷ்டம் தெரியும். தயாரிப்பில் இருக்கும் வியாபாரம்லாம் இப்போ தான் முயற்சி செய்துட்டே இருக்கேன். 
 
பிரேமம் நாயகியை இந்தப் படத்திலும் நம்ம பசங்களுக்குப் பிடிக்குமா? 
 
நிச்சயம் பிடிக்கும், அவங்க ரொம்ப அழகு, ரொம்ப சின்சியரானவங்க. உண்மையா வேலைசெய்வாங்க. அவங்களுக்கு ஒரு ஷாட் பிடிக்கலைன்னா, மறுபடியும் நடிக்கிறேன்னு சொல்வாங்க. ரொம்ப மெச்சூரிட்டியான பொண்ணு, இதையெல்லாம் விட ரொம்ப பெரிய இடத்துக்கு வருவாங்க.
 
பி.எஸ்.முத்து
விஜய்சேதுபதி பேட்டியை வீடியோ வடிவில் காண:
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!