உண்மையில், காதல்தான் சாதியைக் கொல்கிறது! - இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேட்டி | Interview with Yendru Thaniyum Director Writer Bharathi Krishnakumar

வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (15/03/2016)

கடைசி தொடர்பு:17:07 (15/03/2016)

உண்மையில், காதல்தான் சாதியைக் கொல்கிறது! - இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேட்டி

பாரதி கிருஷ்ணகுமார்.

எழுத்தாளர், பேச்சாளர். சமூக ஆர்வலர் என்ற பன்முகம் கொண்டவர். வெண்மணி படுகொலைகள், வாச்சாத்தி வன்முறை, கும்பகோணம் தீவிபத்து என்று சமூகப்பிரச்சினைகளை ஆவணப்படுத்தி, உலகிற்கு எடுத்துச் சென்றவர் இப்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். வரும் வெள்ளியன்று வெளியாகிறது அவர் இயக்கிய ‘என்று தணியும்’ திரைப்படம்.

பாரதிராஜாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய இவர் சமகால சமூகப் பிரச்சினையை தன் படத்தில் கருப்பொருளாக வைத்திருக்கிறார். இயன்ற அளவு உண்மைக்கு அருகில் எடுக்கப்பட்ட படமாக இருக்கும் என்று திடமாக நம்புகிறார். ‘God's own light’ என்று பாலுமகேந்திரா சொல்வதுபோல ஒன்றிரண்டு காட்சிகள் தவிர, எல்லாமே சூரிய ஒளியில்தான் எடுக்கப்பட்டுள்ளது. ஒப்பனைகள் இல்லை, கிரேன் இல்லை, டிராலி இல்லை. சாதாரணமாக நாம் பார்க்கும் கோணத்தில்தான் படம் எடுக்கப்பட்டுள்ளது என்கிறார் இவர்.

இரண்டு நாட்களுக்கு முன் நிகழ்ந்த, தேசத்தையே உலுக்கிப் போட்ட ஆணவக்கொலைகள் குறித்தும் படம் பேசுகிறது என்கிறார். அவருடனான ஒரு பேட்டியின் போது...

“இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கறா?’ என்று சொல்லப்படுவது பற்றி?

இந்திய சமூகமே அதிகாரத்தின் அடுக்குகள் கொண்டதாக இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் தான் உயர்ஜாதி என்று கருதுவதும், மற்றவர்கள் தங்களின் கீழானவர்கள் என்று கருதுவதுமான சாதிய ஒடுக்குமுறையை இந்திய சமூகம் தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டு வருகிறது. அரசு, அதிகாரம், போலீஸ் எல்லாமே சாதிய ஒடுக்குமுறையைக் காப்பாற்றுவதாக இருக்கிறது. இன்னும் எண்பதுக்கும் மேற்பட்ட தீண்டாமைகள் இந்திய சமூகத்தில் இன்றைக்கும், இப்போதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காதலித்துத் திருமணம் செய்தவர்களை உடுமலைப்பேட்டையில், தெருவில் ஓட ஓட விரட்டிக் கொன்ற காட்சியை இன்றைக்கு உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்திய சமூகத்தின் மாபெரும் சாபக்கேடு சாதி.

சாதியை மனிதன் கொண்டாடுவதற்கான எந்த நியாயமும் இல்லை. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறக்க வேண்டும் என்றோ, இந்த சாதிக்காரனின் மகனாகப் பிறக்கும் உரிமையையும் இயற்கை மனிதனுக்குத் தரவில்லை. சாதி எவ்வளவு தீமையானதென்றால் ஒருவர் மதம் மாற முடியும். சாதி மாற முடியாது. நகரங்களில், கிராமங்களில், அரசு அலுவலகங்களில், பொது இடங்களில் என்று எல்லா இடங்களிலும் சாதி தன் கோரப்பற்களைக் காட்டிக் கொண்டு, சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கிறது.

இதற்கு கௌரவக் கொலை என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள். அந்த வார்த்தையே என்னை ஆத்திரமூட்டுகிறது. கொலையில் என்னடா கௌரவம் என்றே கேட்கிறேன். இவைகள் ஆணவக் கொலைகள். என் சாதியோட சரி சமமாக உட்கார்ந்து சம்பந்தம் பேச உன் சாதிக்கு உரிமையில்லை என்கிற ஆணவம், மமதைதான் இந்தக் கொலைகளுக்குக் காரணமாக இருக்கிறது. உடம்பில் ஓடவேண்டிய  ரத்தம் வீதியில் ஓடுவதை எந்தக் காரணம் கொண்டும் பொறுத்துக் கொள்ள முடியாது. ஒரு மனிதனின் உயிரைப் பறிக்கும் உரிமை அரசுகளுக்கே இல்லை என்று உலகெங்கும் கூக்குரல் கேட்டுக் கொண்டிருக்க, ஒரு மனிதனின் உயிரை இன்னொரு மனிதன் பறிப்பது எள்ளளவும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

வெள்ளிக்கிழமை திரைக்கு வர இருக்கும் உங்கள் ‘என்று தணியும்’ படம் பற்றி?

இந்தத் திரைப்படம் புனைவை அடிப்படையாகக் கொண்டதல்ல. தமிழ்நாட்டில், இந்தியாவில் அங்குமிங்கும்  நடக்கிற உண்மைகளை, உண்மைகளாகவே தொகுத்து அளித்திருக்கிறோம். இது உண்மைக் கதை அல்ல.. உண்மைகளின் கதை.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவோடு இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம்தான் இந்தத் திரைப்படம் உருவாகும் வலிமையை எனக்குக் கொடுத்திருக்கிறது. ஆபாசமோ, கீழ்த்தரமான வசனங்களோ இல்லாமல் ஒரு படம் தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் பழனிச்சாமி, என் குருநாதர் பாரதிராஜா இருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்தத் திரைப்படம் சொல்லும் செய்தி ஒன்றே ஒன்றுதான். இதுபோன்ற கொலைகள் மூலமாக சாதியை, சாதிய அமைப்புகளை, இறுகிப்போன மத உணர்வுகளை காப்பாற்றிவிட முடியும் என்று நினைக்கிறார்கள். இவர்களால் காதலர்களைத்தான் கொல்ல முடியும்.. உணர்வுகளை அல்ல. சாதியத் தலைமைகளும், மதவெறி பிடித்தவர்களும் காதலர்களைக் கொல்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் காதல்தான் சாதியைக் கொல்கிறது. காதல்தான் மதவெறியைக் கொல்கிறது. காதல்தான் எல்லா வேற்றுமைகளையும் கொன்று, ஒரு புதிய உலகத்தைப் படைக்கும் என்று நம்புகிறோம். அந்த நம்பிக்கையின் ஒரு சிறுதுளிதான் இந்தத் திரைப்படம்”

விரிவான அவரது பேட்டியைக் காண...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்