வெளியிடப்பட்ட நேரம்: 15:43 (21/03/2016)

கடைசி தொடர்பு:17:15 (28/03/2016)

ஊழலை ஒழிக்க அரசுக்கே யோசனை சொன்ன ‘பிச்சைக்காரன்’ நடிகரின் பேட்டி #முகம்.. அறிமுகம்

பிச்சைக்காரனில் ‘ஆனா மொகத்துல இந்தப் பக்கம் ஒருஹார்லிக்ஸ் பாட்டிலு, இந்தப் பக்கம் ஒரு பூஸ்டு தொங்குதே.. உன்னப் பார்த்தா அன்னை தெரசாவுக்குக் கூட அன்பு வராது போலிருக்கே’ என்று விஜய் ஆண்டனியைக் கலாய்த்து பிச்சைக்காரனாக இருப்பவன் என்ன செய்ய வேண்டும் என்று ஐடியாக்கள் கொடுக்கும் நபர் திரையில் வந்தபிறகுதான் படம் கலகலவென டேக் ஆஃப் ஆகும்.

யார் இவர் என்று பார்த்தால்...

 


‘அட’ என்று ஆச்சர்யமாகிறது நமக்கு!

ஆம். அவர் இயக்குநர் கோவிந்தமூர்த்தி. கருப்பசாமி குத்தகைதாரர், வெடிகுண்டு முருகேசன் ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர். அவரே அவரைப்பற்றிக் கூறுகிறார்.

இந்த வார விகடன்.காம் ‘முகம்.. அறிமுகம்’ பகுதியில்....

“பிறந்தது படித்தது எல்லாம் ராஜபாளையத்தில் தான். பள்ளிப் படிப்பை முடித்து விட்டு டிப்ளமோ எலக்ட்ரிகல் படித்துக் கொண்டிருந்தேன். இறுதி செமெஸ்டரில் படிப்பை நிறுத்தி விட்டேன். கல்லூரி படிக்கும் பொழுதே 9-6 வேலைக்குச் செல்லும் ஒரு அன்றாட வாழ்க்கை எனக்குச் சரியாக இருக்காது என்று தெரியும். படிப்பிற்கு அப்பாற்பட்டு நான் படித்த முதல் புத்தகம் வைரமுத்து அவர்கள் எழுதிய “சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்”. அந்தப் புத்தகத்தைப் படித்தவுடன் எனக்குள் ஏற்பட்ட பசி, என்னை மென்மேலும் புத்தகங்களைப் படிக்க வைத்தது.

கல்லூரிப் படிப்பை நிறுத்திய பிறகு சுமார் 2 ஆண்டுகள் புத்தகங்களைப் படிக்க மட்டுமே செலவழித்தேன். ‘ஒரு சினிமா உருவாகும் இடம் எடிட்டிங்கில் தான்’ என்ற ஒரு வாக்கியத்தை எங்கேயோ படித்த நினைவு உண்டு. அதனால் ஒரு நல்ல எடிட்டராக வர வேண்டும் என்ற நோக்கத்திலேயே சென்னைக்கு முதன்முதலில் வந்தேன். வந்த இடத்தில் தான் ஒரு இயக்குநரே திரைப்படங்களை மொத்தமாகச் சுமக்கிறார் என்பதை உணர்ந்தேன்.

பிறகு உதவி இயக்குனராக வாய்ப்புக் கேட்டு இரண்டு ஆண்டுகள் பல இயக்குநர்களைச் சந்தித்தேன். அப்படி வாய்ப்புக் கேட்டுச் செல்லும் பொழுது தான் இயக்குனர் S.S.ஸ்டான்லி அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அப்பொழுது கோல்டன் ஈகிள் டிவியில் இரண்டு ஆண்டுகள் ‘லவ் பேர்ட்ஸ்’ எனும் சீரியலில் உதவி இயக்குநராகப் பணி புரிந்தேன். 

அவர் மூலமாக இயக்குநர் சசி எனக்கு அறிமுகம் ஆனார். அவரிடம் ‘சொல்லாமலே’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணி புரிந்தேன். அதன் பின் ஏறக்குறைய அவருடைய அனைத்துத் திரைப்படங்களிலும் அவருடன் இணைந்து பணி புரிந்தேன். இயக்குநர்கள் சசி, எழில், சிம்புதேவன் ஆகியோரிடம் சுமார் பதினைந்து திரைப்படங்கள் உதவி இயக்குநராகப் பணி புரிந்த பின் 2007 ஆம் ஆண்டு ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகிற்குள் வந்தேன்.

2009 இல் நடிகர் பசுபதியை வைத்து நான் இயக்கிய ‘வெடிகுண்டு முருகேசன்’ ஒரு நல்ல வரவேற்பைப் பெற்று என்னை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றது. இந்தத் திரைப்படங்களின் இடையேயும் பிறகும் இருந்த நேரங்களில் இயக்குநர் சசி இடமே சென்று பணி புரிந்தேன்.

உதவி இயக்குநராக மட்டும் அல்லாது ஒரு துணை கதாபாத்திரமாக சொல்லாமலே, மெரினா, பிச்சைக்காரன்ஆகிய படங்களில் நடித்தது, நடிகர்களையும் அவர்களின் சவால்களையும் புரிந்து கொள்ள உதவியது.
 

முதன்முதலில் நான் ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்த பொழுது என்னிடம் கதை என்று ஒன்றும் கிடையாது. இருந்தது வெறும் அனுபவங்கள் மட்டுமே. வாழ்விலிருந்து பல விஷயங்களை கோர்த்து எழுதி நான் இயக்கிய திரைப்படம் தான் ‘கருப்பசாமி குத்தகைதாரர்’. கதைக்காக எவரிடமும் பேசவில்லை. முழுமையாக என் சொந்த முயற்சியில் உருவாக்கிய அந்த படத்தின் வரவேற்பு எனக்கு மகிழ்ச்சிகரமானதே.
 

நான் இயக்குநராக ஆக வேண்டும் என்று முயன்று கொண்டிருந்த காலங்களில் எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தது மூவர் 1. எனது நண்பர் வெங்கி. பல இடங்களுக்கு நான் அலைய வேண்டி இருக்கும் என்று எனக்காக ஒரு வண்டி வாங்கிக் கொடுத்து தினமும்  200 ரூபாய் பணமும் கொடுத்தார். 2. என் நண்பர் ரவி, அவர் என் மாதாந்திர செலவுகளுக்கு வீட்டிற்கே பணம் அனுப்பி வைத்தார். 3. இயக்குநர் சசி, அவர் எனது உணவுச் செலவுகளை ஏற்றார். இந்த வகையில் நான் ஒரு அதிர்ஷ்டசாலி தான். இப்படியெல்லாம் என்னை ஏற்றுக்கொண்டு , ஊக்குவிக்கும் நண்பர்கள் அமைந்தது மிகவும் மகிழ்ச்சிகரமானது.

ஒரு இயக்குநராக மட்டுமல்லாது நடிகனாகவும் பிரகாசிக்க முயன்று வருகிறேன். அதன் முதல் படி தான் பிச்சைக்காரன் திரைப்படம். ஃப்பேஸ்புக்கில் ஒரு நாள் “ஊழலை ஒழிக்க எளிமையான தீர்வு- இந்த வீடியோவைப் பாருங்கள்” என்றொரு வாசகம் இருந்தது. அந்த வீடியோவைப் பார்த்ததும், பிரமிப்பும் பூரிப்பும் கொண்டேன். ஏனென்றால் அது  பிச்சைக்காரன் படத்தில் நான் பேசிய வசனம். பிறகு தான் அந்த வீடியோ வாட்சாப் பேஸ்புக் என்று அனைத்திலும் பகிரப்பட்டுக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

அந்தத் திரைப்படத்தின் மூலம் தான் உண்மையான வாழ்வியலைக் கற்றேன். பிச்சை எடுப்பவர்களைப் பார்த்து நாம் பரிதாபப்படுகிறோம். ஆனால் உண்மையில் எந்த ஒரு ‘கமிட்மென்ட்டும்’ இல்லாமல் அவர்கள் நிம்மதியாக இருப்பது யாருக்கும் தெரிவதில்லை. அந்தத் திரைப்படத்தில் நான் பெற்ற அனுபவங்கள் எனக்கு பெரிய பொக்கிஷமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

எனது இரு திரைப்படங்களில் வைகைப்புயல் வடிவேலுவுடன் பணி புரியும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் நான் கற்ற நக்கலும், நையாண்டியும், காமெடியும் தான் பிச்சைக்காரன் படத்தில் எதார்த்தமாக நான் நடிக்க உதவியது. அவருக்கும் நன்றிகள். இன்னும் சில தினங்களுக்கு நடிப்பில் சற்றே கவனத்துடன் முன்னேற நிறைய உழைக்கத் தயாராய் இருக்கிறேன்”

வாழ்வில் ஒரே குறிக்கோள் என்றில்லாமல் போகும் பாதையில் உள்ள அனைத்தையும் கடந்து செல்ல ஆசைப்படுகிற அவரது முயற்சிகளுக்கு வாழ்த்திவிட்டு விடைபெற்றோம்.
 

பா.அபிரக்ஷன்(மாணவப் பத்திரிக்கையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்