அந்தப் பேரக்கேட்டாலே பதட்டமா இருக்கு! வெற்றிமாறன் ஸ்பெஷல் பேட்டி!

லத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே வெளியாகி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் விசாரணை. பிராந்திய மொழிப் பிரிவில் தமிழின் சிறந்தப் படமாக விசாரணை தேசிய விருதினை அள்ளியிருக்கிறது. அதுமட்டுமின்றி சிறந்த எடிட்டராக கிஷோரும், சிறந்த துணை நடிகராக சமுத்திரகனியும் விருதுகளைப்பெற்றிருப்பது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த கவுரவம். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் விசாரணை இயக்குநர் வெற்றிமாறனை, விருது அறிவித்த உடனே நேரில் சந்தித்துப் பேசினோம்.

விருது பெற்றதும் உங்கள் மனநிலை என்னவாக இருக்கிறது?


விருது கிடைக்கும்னு எதிர்பார்த்தது தான். ஆனா விருதிற்காக படம் எடுக்கவில்லை. நமக்குப் பிடிச்ச விஷயத்தை கதையாக மாற்றி படமாக எடுக்கிறோம். அந்தப் படத்திற்காக 100 சதவிகிதம் உழைக்கணும், தயாரிப்பாளருக்கு படத்திற்கான சரியான பணம் கிடைக்கணும், அவ்வளவு தான். விருதிற்காக படம் என்றில்லாமல், விருதை ஊக்கமாக தான் பார்க்கிறேன்.

எடிட்டர் கிஷோருக்கு விருது கிடைச்சிருக்கு, ஆனா இப்போ அவர் இல்லையே?

கிஷோரின் கடைசி சிந்தனை விசாரணைப் படம் பற்றி தான். படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது தான் மயங்கி கிழே விழுந்தாரு. விழுந்தவரு அதற்கு அப்புறம் எழுந்திரிக்கவே இல்லை. அவருக்கு விருது கிடைச்சது எங்களுக்கு மட்டுமில்லாம அவர் குடும்பத்திற்கும் ஆறுதலா இருக்கும்.

சமுத்திரகனிக்கு இந்தப் படத்தில் விருது கிடைக்க காரணம்?

சமுத்திரகனியோட நடிப்பு இந்தப் படத்துல ரொம்ப சவாலான வேலை. கெட்டவனாவோ நல்லவனாவோ நடிக்கிறது சுலபம். ரெண்டுக்கும் நடுவுல இருக்குற ஒரு மனுசனோட தடுமாற்றம், வசனங்களே இல்லாம நடை, பாவனையில் மட்டுமே வெளிப்படுத்தவேண்டிய கட்டாயம், அதையும் எளிதா பண்ணிருந்தது தான் விருது கிடைப்பதற்கான காரணமா நினைக்கிறேன்.

ஆழமான கதைக்களத்துடன் மூன்று படங்கள் குடுத்துட்டீங்க! அடுத்தப் படம்?

அடுத்தப்  படம் பற்றி இப்போதைக்கு எந்த சிந்தனையும் இல்லை, விசாரணை படத்தை விட்டு வெளியே வருவதற்கே கொஞ்ச காலம் எடுக்கும், அதற்கு அப்புறம் தான் யோசிக்கணும்.

தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் இது நான்காவது படம்! சக்ஸஸ் சீக்ரெட் என்ன?

ஒரு தயாரிப்பாளரா, நடிகரா அவர்மேல் எனக்கு இருக்கும் நம்பிக்கையும், இயக்குநரா, திரைக்கதையாசிரியரா என் மேல் அவருக்கு இருக்கும் நம்பிக்கையும் தான் காரணம். எந்த ஒரு கட்டத்திலும் ஒருத்தருடைய முடிவை இன்னொருவர் மாற்றணும்னு நினைச்சது கிடையாது, எங்களுக்குள் கருத்துவேறுபாடும் வந்தது கிடையாது.

“வடசென்னை” எப்போ?


எல்லோரையும் விட எனக்குத்தான் பதட்டம் அதிகமா இருக்கு. வடசென்னை என்ற வார்த்தைய கேட்டாலே பயமா இருக்கு. தொடர்ந்து அந்தப் படம் பற்றி சொல்லிட்டே இருக்கோம் ஆனா, வெவ்வேறு காரணங்களால அது தள்ளிப்போய்ட்டே இருக்கு. அதுனால இப்போதைக்கு படம் பற்றி சொல்லாம இருக்குறது தான் நல்லது. 

பி.எஸ்.முத்து

வெற்றிமாறன் நேர்காணல் வீடியோவிற்கு:

Do you like the story?

Please Appreciate the Author by clapping!