ஹன்சிகாவை வெட்கப்பட வைக்கிறது ஈஸி! - 'மனிதன்' அகமது சொல்லும் சிரிசிரி சீக்ரெட்

வாமனன், என்றென்றும் புன்னகை படங்களை இயக்கிய அகமது இயக்கத்தில் உதயநிதி, ஹன்சிகா, பிரகாஷ்ராஜ், ராதாரவி நடித்து ஏப்ரல் 29ல் திரைக்குவரவிருக்கும் படம் மனிதன்.   படத்தைப் பற்றியும், படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யங்களையும் பகிர்ந்துகொள்கிறார் இயக்குநர் அகமது.

மனிதன் என்ன கதை?

பொள்ளாச்சியிலிருந்து சென்னைக்கு வரும் சின்ன வக்கீல், கஷ்டப்பட்டு எப்படி வாழ்க்கையில் முன்னேறுகிறார் என்பதே மனிதன் பட ஒன்லைன். அதற்காக அவர் வாதாடும் வழக்கு, அதனால் அவர் வாழ்க்கை எப்படி மாறுது என்பதே கதை.  சமூகக் கருத்தும், அதே நேரத்தில் ஜனரஞ்சகமான கதையும் இந்தப் படத்துல இருக்கு.

 'இதயம் முரளி'  படத்தை பாதியில் நிறுத்திவிட்டு, இந்தக் கதையை கையில் எடுக்க காரணம்?

உதயநிதி ஹீரோவாக நடிக்க, நாயகியாக ஹன்சிகாவை தேர்வு செய்திருந்த படம் தான் இதயம்முரளி. முழுக்க முழுக்க அமெரிக்காவில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனா படத்தோட பட்ஜெட் அதிகமாக இருந்ததால் தான்,  மனிதன் படத்தை முதலில் எடுத்துட்டு அப்புறம் அந்தப் படத்த எடுக்கலாம்னு
திட்டமிட்டிருக்கிறோம்.

ஹன்சிகாவிற்கு இந்தப் படத்தில் என்ன ரோல்?

உதயநிதியின் கதாபாத்திரத்தின் பெயர் சக்தி. இவரின் மாமா பொண்ணு தான் ஹன்சிகா. பொள்ளாச்சியில் டீச்சராக இருக்காங்க. ஹீரோவுக்கு முக்கியமான தருணத்தில் அறிவுரைகள் கூறும் ஸ்டிரிக்ட் டீச்சர். இதுவரை ஜாலி மோட்ல தான் ஹன்சிகாவ பார்த்திருப்போம். இந்தப் படத்துல கொஞ்சம் சீரியஸ் டீச்சராக நடிச்சிருக்காங்க.

கோர்ட் ரூம் காட்சிகள்  படமாக்கும்போது இருந்த சவால்கள் என்ன?

நீதிமன்றத்தில் வழக்காடும் காட்சிகள் தான் படத்திற்கு உயிரே. அதனால அந்தக்காட்சிகளுக்காக முழுமையான செட் பக்காவா ரெடிபண்ணிட்டோம். அந்தக் காட்சிகளில் ஒரு பக்கம் பிரகாஷ்ராஜ், ராதாரவி, விவேக். இன்னொரு பக்கம் நம்ம ஹீரோ உதயநிதி.

சீனியர் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பு உதயநிதிக்கு சவாலா இருந்திருக்குமே?

உதயநிதி எப்போதுமே மெதுவா பேசுறவரு. ஆனா பிரகாஷ்ராஜ் கம்பீரக்குரல்ல 4 நிமிட வசனத்தையும் ஒரே ஷாட்ல ஓகே பண்ணிருவாரு. பிரகாஷ்ராஜ் பேசுறத மீறி உதயநிதி பேசுனா தான், பிரகாஷ்ராஜை கோர்ட்ல வாதாடி ஜெயிச்சாருனு ஆடியன்ஸ் நம்புவாங்க. அதற்கான உழைப்பை உதயநிதி கொடுத்துருக்காரு. பிரகாஷ்ராஜ்,  ராதாரவிக்கு நிகரா உதயநிதி இந்தப்படத்துல நடிச்சிருக்காரு.

ஹீரோவும், தயாரிப்பாளரும் ஒன்றாக இருந்தால் ஏதும் சிக்கல் இருக்காதா?

தயாரிப்பாளரும், நடிகரும் (உதயநிதி) ஒரே ஆள்னதும் முதல்ல, நானே பயந்தேன். ஹீரோ மட்டும்னா மிரட்டி வேலை வாங்கிடலாம், தயாரிப்பாளரும் அவர்தான் எனும்போது எப்படி இவர திட்டறதுனு கவலையா இருந்துச்சி. ஆனா, இயக்குநரையும் ஹீரோவையும் விட தயாரிப்பாளர் தர சுதந்திரம் தான் படத்தை வெற்றியாக்கும். அது மாதிரிதான்  உதயநிதி. எனக்கான சுதந்திரத்தைக் கொடுத்து, நான் சொன்னத மட்டும் செய்தார். அதுமட்டுமல்லாம, எத்தனை தடவ ரீடேக் சொன்னாலும் சலிக்காம செய்துட்டே இருந்தார்.

இந்தப் படத்துல சந்தானம் மிஸ்ஸாகிட்டாரே ஏன்?

சந்தானம் என்னோட நெருங்கிய நண்பன். இந்தப் படத்துல காமெடிக்கான வாய்ப்பு தேவைப்படல. கேரக்டர் ரோல்ல விவேக் இருக்காரு, ஆனா அப்பப்ப காமெடியும் பண்றார்.

தேர்தல் நேரம், கட்சித்தலைவரின் மகன் - படப்பிடிப்பிலோ, ரிலீஸிலோ ஏதும் பிரச்னை இருக்கிறதா?

உதயநிதியை நான் கட்சித்தலைவரின் மகனாக பார்க்கவில்லை, காலேஜில் ஜூனியர். அவ்வளவு தான். யாரா இருந்தாலும், இயக்கம் என்று வரும்போது நானே மொத்த பொறுப்பு. இதையெல்லாம் பார்த்து நான் பயந்தோ, குழம்பிபோய்ட்டேன் என்றால் படம் தயாராகாது.

ஹன்சிகாவைப் பற்றி ஜாலியா ஒண்ணு சொல்லுங்க?

ஹன்சிகாவை புகழ்ந்து பேசிட்டா போதும், அப்படியே வெட்கம் வந்துடும், அதனால ஒரு நாள் படப்பிடிப்பில் எல்லோரும் சேர்ந்து புகழ்ந்து பாராட்டி பேச, ஹன்சிகா வெக்கப்பட்டு பேசும், அத வீடியோவா எடுத்து ரிலீஸ் பண்ணோம். அந்த அனுபவங்களை மறக்கமுடியாது.

பி.எஸ்.முத்து

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!