கபாலியை கவ்வும் தெறி சர்ச்சை..!

தாணு தன்மீது கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் பன்னீர் செல்வம்.

அதில் அவர் கூறியதாவது;

தனிப்பட்ட குற்றச்சாடுக்களை என்மீது கூறி, செங்கல்பட்டு ஏரியாவில் தெறி வெளியாகாததற்கு நானே காரணம் என்று பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார் தாணு. பணம் போட்டு படத்தை எடுத்தவர் அவர். நான் ஒற்றை மனிதனாக எப்படி பட வெளியீட்டிற்கு தடையாக இருக்க முடியும்? இது தாணுவே எடுத்த முடிவு. அவர்தான் விடாப்பிடியாக செங்கலப்பட்டிற்கு படத்தை தராமல் இருக்கிறார்.

கணிதன் படத்திற்கு, விநியோகஸ்தர்களிடம் மினிமம் கேரண்டியாக 25 லட்சம் கேட்டிருக்கிறார். அவர் படத்திற்கு நாங்கள் எப்படி வெற்றியைத் தீர்மானித்து மினிமம் கேரண்டி கொடுக்க முடியும்? தெறி பிரச்சினையின்போதே, ‘இருவரும் ஒரு மேடையில் அமர்ந்து பத்திரிகையாளர்கள் முன் பேசுவோம்’ என்று கூறினேன். இப்போதுவரை அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. தனியாக பத்திரிகையாளர்களிடம் பேசி, எனக்கு சாபம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

என் மகன் திருமணத்திற்கு விஜய் வராததால்தான் இப்படி செய்கிறேன் என்று தாணு சொல்லியிருக்கிறார். அஜித், கார்த்தியும்தான் திருமணத்திற்கு வரவில்லை. அவர்களின் வேதாளம், தோழா படங்கள் பிரச்சினை ஏதுமின்றி வெளியானதே.

என்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, தன்னையே தாழ்த்திக் கொண்டிருக்கிறார் தாணு. அந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் தாணு பதில் சொல்லியே ஆகவேண்டும். உண்மையில் என்மீது தவறு இருந்தால், நான் சினிமாவை விட்டே விலகத்தயார்.  தாணு தலையிடாமல், ரஜினியே  அழைத்து, அவர் அலுவலகத்தில் எங்களிடம் பேசினால் கபாலி படத்தை வெளியிடத்தயார். படமும் ரசிகர்களைச் சென்று சேர்ந்து, அது வெற்றி பெற எத்தனை உழைக்க வேண்டுமோ அத்தனை உழைக்கத்தயார். கலைப்புலி தாணு இப்படியெல்லாம் செய்து கொண்டிருந்தால், ரசிகர்களை படங்கள் சென்று சேராது. மேலும் சிக்கல்களையே உருவாக்கும்.

தொடர்ந்து செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் கண்ணப்பன் பேசுகையில், ‘தெறி படம் வெளியாகாததற்கு முழுக்க முழுக்க தாணுவின் அடாவடியே காரணம். தேவையில்லாத தனிப்பட்ட விஷயங்களை அவர் பேசிக்கொண்டிருக்கிறார். பன்னீர்செல்வத்தை சங்கத்திலிருந்து நீக்க வேண்டும் என்கிறார். எங்கள் சங்கத்தில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல அவருக்கு அருகதை இல்லை. எங்களை ‘தேர்ட் பார்ட்டி’ என்கிறார். பணம்கொடுத்து படம் வாங்கும் நாங்கள் எப்படி தேர்ட் பார்ட்டி ஆவோம்? தாணு நாவை அடக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.

ரஜினியின் கால்ஷீட்டை எப்படிப் பெற்றீர்கள், லிங்கா படத்தின் நஷ்டத்தை எப்படி ஈடு செய்தீர்கள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியும். லிங்கா படத்தின் நஷ்டத்திற்காக ரஜினி கொடுத்த 12 லட்சத்தை கலைப்புலி தாணு எங்களுக்கு கொடுக்கவில்லை. ரஜினியே நேரடியாக எங்களிடம் கொடுத்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது.

தயாரிப்பாளர் சங்கத்தலைவராக, சங்கத்திற்காக தாணு என்ன செய்தார்? ரஜினியை வைத்து படமெடுக்க வேண்டும் என்ற  அவர் கனவை சாத்தியமாக்கிக் கொண்டார். எங்கள் தொழில், படம் வெளியிடுவது. எங்களுக்கு இந்த நடிகர்கள்  என்ற பாரபட்சம் கிடையாது. இப்பொழுதும், ரஜினி பழைய முறைப்படி அவரே அழைத்து படத்தைக் கொடுத்தால் கபாலி படத்தை வெளியிடத்தயார்.
 

தாணு எங்கள் மீது சொன்ன குற்றச்சாட்டுக்கும், சுமத்திய களங்கங்களுக்கும் விளக்கம் அளிக்க அவர் பத்திரிகையாளர்கள் முன்பு எங்களை அழைத்து பேசவேண்டும். இருபது நாட்களாக நாங்கள் அழைத்துக் கொண்டிருக்கிறோம். அவர் பதிலே சொல்லாமல் இருக்கிறார்.”
 

இவர்கள் பேசியிருப்பதன்மூலம் தெறி படத்தில் ஆரம்பித்த இந்த பிரச்சினை, கபாலி படத்திலும் தொடர்வது போலத் தெரிகிறது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!