'ரஜினிக்கு நான் ரசிகன்.. ஜாக்கிசான் என் பிக் பிரதர்!

மகிழ்ச்சி...’ என கபாலி அகில உலக டிரெண்ட் அடிக்க, அந்த கபாலி யை ’நெருப்புடா’ என மிரட்டவிருக்கும் வில்லன்... தைவான் நடிகர் “வின்ஸ்டன் சாவோ”.

தைவான் மொழியில் 'வணக்கம்' என்பதற்கு என்ன என்று கூகுளிட்டுக் கொண்டே சென்றால், பார்ட்டி “வணக்கம்” என்று சொல்லி நம்மை வரவேற்கிறார்.
 
"  ‘கபாலி’யில் மலேசியாவில் செட்டில் ஆகியிருக்கும் சைனாக்காரனாக நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு சமயம் தமிழ் பேசிப் பேசி, இப்போ என் காட்சிகளுக்கு நானே தமிழில் டப்பிங் பேசியிருக்கேன். ரஜினிகாந்துக்கு 60 வயசுக்கு மேலனு அப்புறம்தான் எனக்குத் தெரியும். ஆனா, அதெல்லாம் தெரியாத அளவுக்கு அவர் செம உற்சாகமாக இருக்கார். 

படத்தில் ஒரு காட்சியில் ஒரு முழு நிமிஷம் அவர் வசனம் பேசணும். பேசிட்டு திரும்புறார்.... ‘கட்’ சொல்லக் கூட மறந்து மொத்த செட்டும் பிரமிச்சு நிக்குது. “ரோபோட்” (எந்திரன்) பார்த்தேன். அதில் டாக்டர் வசீகரனாகவும், வில்லன் சிட்டியாகவும் வித்தியாசமா நடிச்சு அசத்தியிருப்பார். அவர் சிம்பிள் நடிப்பும் ஸ்டைல் வேகமும்தான் ரசிகர்களுக்கு அவரைப் பிடிச்சிருக்கக் காரணம்னு நினைக்கிறேன்."நீங்க யார்.... எப்படி கபாலில  நடிக்க வாய்ப்பு கிடைச்சது?

    ’’ நான் தைவான்காரன். The Wedding Banquet-னு ஒரு சீனப் படத்துல அறிமுகமாகி, அப்படியே தைவான், சிங்கப்பூர், அமெரிக்கா, யூரோப்னு  பல நாடு, பல மொழிகளில் நடிச்சேன். கிட்டத்தட்ட 25 வருஷம்... நான் - ஸ்டாப் நடிப்பு. ஒரு நாள் இந்தியாவிலிருந்து, ‘தமிழ்ப் படத்தில் நடிக்கணும்’னு அழைப்பு வந்தது. எனக்கு ஆச்சர்யம். அப்புறம் ப்ராஜெக்ட் பத்தி தெரிஞ்சுக்கிட்டு ஆர்வமா இறங்கிட்டேன்.   25 வருஷமா நிறைய இயக்குநர்களுடன் பணியாற்றிவிட்டேன். சிலர் நல்ல இயக்குநர்கள், சிலர் மோசமான இயக்குநர்கள்னு பிரிச்சுடலாம். ஆனா, ரஞ்சித்  மிகச்சிறந்த இயக்குநர்!’’
 


மூணு தடவை சென்னை வந்திருக்கீங்க! சென்னைல என்ன பிடிச்சிருக்கு?

    " நான் 'ஸ்பைஸி' உணவுகளை விரும்புபவன். அதனாலேயே சென்னை உணவுகள் ரொம்பப் பிடித்துவிட்டது. ஷூட்டிங்கில் சாப்பிட்டு உடல் எடையும் கூடிவிட்டது. இங்கு பொதுமக்கள், நாய், பூனைகள்னு விலங்குகளிடம் அவ்வளவு பாசத்தோட இருக்கிறது நெகிழ்ச்சியா இருக்கு.  அப்புறம் , சென்னை பார்த்தசாரதி கோயிலும்... ஐ லைக் இட்!’’

ஜாக்கி சானோட நடிச்சிருக்கீங்க... இப்போ ரஜினி... ரெண்டு பேர்ல நீங்க யாருக்கு ரசிகன்?

’’ஜாக்கி சான் என் சகோதரர் மாதிரி. பிக் பிரதர். போன வருசம் அவரோட நான்  நடிச்ச படம் சீக்கிரமே  வெளியாகவிருக்கிறது. இப்போதான் ரஜினி கூட நடிச்சிருக்கேன். அவரை எனக்கு ஒரு நடிகரா ரொம்பப் பிடிச்சிருக்கு. அதனால,  அவருக்கு ரசிகன்..!’’

 நெருப்புடா..!

- எம். குணா
படங்கள்: கே. கார்த்திகேயன்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!