வீரப்பன் வில்லனா... ஹீரோவா... என்ன சொல்கிறார் ராம் கோபால் வர்மா?

ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில், சச்சின் ஜோஷி தயாரிப்பில் இந்தியில் வெளியாக இருக்கும் படம் ‘வீரப்பன்’ , கன்னடத்தில் கில்லிங் வீரப்பனாக வெளியான படமே தற்போது இந்தியில் வீரப்பனாகவும், தமிழில் வில்லாதி வில்லன் வீரப்பனாகவும் வெளியாக இருக்கிறது. இந்தியில் மே 27ம் தேதியும், தமிழில் ஜூன் 3ம் தேதியும் வெளியாக இருக்கிறது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு ப்ரசாத் லேபில் நடைபெற்றது. ராம் கோபால் வர்மா, சச்சின் ஜோஷி, சன்தீப் பரத்வாஜ், ஹீரோயின்கள் உஷா ஜாதவ் மற்றும் லிஸா ரே ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

ராம் கோபால் வர்மா பேசுகையில், இரண்டு மாநில காவல்துறைக்கும், அரசாங்கத்துக்கும் பெரும் சவாலாக இருந்த வீரப்பனின் வாழ்வில் கடைசி இரண்டு வருடங்கள் நடந்த சம்பவங்களும், அவரை காவல்துறையினர் திட்டமிட்டு எப்படி என்கவுண்டர் செய்தார்கள் என்பதும் தான் இந்த ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ . கடந்த இரண்டு வருடங்கள் பல உண்மைகள், கதைகள், தேடல்கள் எனக் கேட்டறிந்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன், வீரப்பன் குறித்த தேடலின் போது எனக்குப் பல விஷயங்கள் நம்ப முடியாமலும், ஆச்சர்யமாகவும் இருந்தன. இந்த ஆபரேஷனில் பங்கேற்ற காவலர்கள், அவர்களின் திட்டங்கள் என அனைத்தையும் இப்படம் விளக்கப் போகிறது எனக் கூறி அமர்ந்தார்.

படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சச்சின் ஜோஷி பேசுகையில், 20 வருடங்களுக்கு மேல் அரசாங்கத்துக்கு சவாலாக இருந்த வீரப்பன் பற்றிய கதை இது , நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நல்ல படம் என்பதை மட்டும் நான் உறுதியாகச் சொல்ல முடியும் எனக் கூறினார்.

தொடர்ந்து ராம் கோபால் வர்மாவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன..

நீங்கள், வீரப்பன் ரஜினிகாந்தைத் தான் முதலில் கடத்தத் திட்டமிட்டதாகக் கூறியுள்ளீர்கள்? இதற்கு ஆதாரம் என்ன?

“ வீரப்பன் தினம் தினம் செய்திகளில் வருவதையும், பிரபலமாக இருப்பதையும் அதிகம் விரும்பியவர். 2004ல் வீரப்பன் ரஜினிகாந்தைத் தான் கடத்தத் திட்டமிட்டார். இதற்கு ஆதாரம் என்று எதையும் காட்டமுடியாது, எனக்குக் கிடைத்த தகவல்கள், மற்றும் வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் இருந்த அலுவலர்கள் சொன்ன விஷயங்கள் ஆகியனவற்றை வைத்தே இதைச் சொல்கிறேன். அப்படிப் பலரிடமும் திரட்டிய தகவல்கள் தான் இந்தப் படம் வீரப்பன் பப்ளிசிட்டியின் பின்னால் செல்லவில்லை என்பதே உண்மை...

நீங்கள் எதன் அடிப்படையில் அவர் விளம்பர விரும்பி எனக் கூறுகிறீர்கள்?

“ நீங்கள் எப்படி அவர் விளம்பர விரும்பி இல்லை எனக் கூறுகிறீர்கள்? என திருப்பிக் கேட்டவர், தொடர்ந்து பேசும்போது, யாருமே வீரப்பனின் நெருங்கிய வட்டத்திலோ, அல்லது அவரைச் சுற்றியோ என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கேட்கவில்லை. நீங்களும் செவி வழியாக பலர் சொன்ன தகவல்களை ஆராய்ந்து தான் இந்தக் கேள்விகளைக் கேட்கிறீர்கள், நானும் எனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன்!”

இதே கதையை மையமாக வைத்து நிறையப் படங்கள் இருக்கின்றன, இந்தப் படம் அவைகளில் இருந்து எப்படி வேறுபடப் போகிறது?

“ உண்மையைச் சொன்னால் வீரப்பனின் கதை இதுதான் என யாரும் சரியான ஆவணங்களை உருவாக்கவில்லை, எல்லாமே செவி வழிக் கதைகளாகவும், அவரவருக்குக் கிடைத்த தகவல்களாகவும் தான் இருக்கின்றன. அதன் அடிப்படையில் ஒவ்வொரு படமும் உருவாகின்றன. அப்படித்தான் எனக்குக் கிடைத்த தகவல்களின்படி இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். ஹிட்லர் என்ற ஒற்றை மனிதனின் வாழ்க்கையை மையமாக வைத்து சுமாராக 30 படங்களுக்கு மேல் இருக்கிறது. ஒன்றுக்கொன்று தொடர்புகள் இல்லாமல் தான் இருக்கும். அப்படித்தான் இந்தப் படமும்!”

வீரப்பனை ஒரு ஹீரோவாகப் பார்க்கிறார்கள் மக்கள், இந்தப் படத்தில் வீரப்பனை வில்லனாகக் காட்டியிருக்கிறீர்கள், அப்படியெனில் ஹீரோ போலீஸா?

”இங்கே ஹீரோ, வில்லன் என யாரும் இல்லை உண்மை தான் ஹீரோ!”

பொதுவாகவே ட்விட்டர், முகநூலில் அமிதாப், ரஜினிகாந்த், கமல் பற்றியெல்லாம் சர்ச்சையான ட்வீட்டுகளை பதிவிடுகிறீர்களே அவை உங்கள் கருத்தா இல்லை பப்ளிசிட்டிக்காகவா?

“ நான் ஒரு சினிமா படைப்பாளி, கண்டிப்பாக என் மீது அனைவரின் பார்வையும் விழ வேண்டும் என்ற நோக்கம் இருக்கத்தான் செய்யும். அதே சமயம் சமூக வலைதளங்கள் நம் கருத்துகளை , எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள, அதில் சில நேரங்களில் மக்களும் பங்கேற்கும் போது அது பெரிதாக்கப்படுகிறது!”

வீரப்பன் கதையைப் பொறுத்தமட்டில் பல அரசியல்வாதிகளின் தலையீடுகள் இருக்கின்றன. வீரப்பனுக்கு ஆதரவாக இருந்த அப்பகுதி பெண்கள் பலரும் போலீஸாரால் தவறாக நடத்தப்பட்டுள்ளனர். இதையெல்லாம் இந்தப் படத்தில் நீங்கள் காட்டியுள்ளீர்களா?

“ வீரப்பனின் கடைசி இரண்டு வருட வாழ்க்கை தான் இந்தப் படத்தின் கதை, எப்படி போலீஸார் திட்டமிட்டு வீரப்பனைப் பிடித்தனர், அதில் நடந்த ஆபரேஷன் மட்டுமே திரைக்கதை. நீங்கள் சொன்ன விஷயங்கள் இருக்கும் ஆனால் மாண்டேஜாக ஆங்காங்கே இருக்கும்!”

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!