வெளியிடப்பட்ட நேரம்: 16:59 (09/06/2016)

கடைசி தொடர்பு:10:40 (10/06/2016)

'மகிழ்ச்சி’ ரஜினியின் பன்ச் ஆன ரகசியம் சொல்கிறார் ’மெட்ராஸ்’ ரித்விகா!

ரு நாள் கூத்து படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவர், கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் நடிப்பு என ரித்விகா கொஞ்சம் உற்சாக மிகுதியிலேயே இருந்தார்.

எப்படி சினிமா என்ட்ரி.. சொல்லுங்களேன்?

” பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னை தான். பிஎஸ்.சி பிஸிக்ஸ் ஏஸ்.ஐ.டி காலேஜ். எம்.பி.ஏ கரஸ்ல படிச்சேன். நான் அப்பா, அம்மா, அக்கா நாலு பேரு. எனக்கு சினிமா பின்புலம்  சுத்தமா கிடையாது. காலேஜ் முடிச்சுட்டு வேலைக்குப் போகணும் அவ்ளோ தான். அப்படித்தான் அக்கா பண்ணினாங்க. நான் மட்டும் சினிமா, நடிப்புன்னு ஆர்வம் காட்டினேன். வீட்லயும் ஓகே சொல்லிட்டாங்க. அப்பா வெல்டர், வெல்டிங்  பயிற்சி குடுக்கறாரு. அம்மா வீட்டைப் பார்த்துக்கறாங்க”

நடிப்பு மேல ஆர்வம் எப்ப வந்துச்சு? 

“ சின்ன வயசுல இருந்தே நடிப்புல ஆர்வம்தான். குறும்படங்கள்ல எல்லாம் நடிச்சேன். அப்போ தான் நண்பர்களெல்லாம் சேர்ந்து நீ நடிக்கலாமேன்னு சொன்னாங்க. நல்ல வாய்ப்புக் கிடைச்சது. இப்போ நல்ல நல்ல கேரக்டர்கள் வருது!”.

சினிமாவுல பெண் கதாபாத்திரங்களுக்கு  நடிக்கறதுக்கான வாய்ப்புகள் ரொம்பக் குறைவா இருக்கே. இது மாறும்னு நினைக்கிறீங்களா?

“ மாறணும். 80கள் 90கள்ல படங்கள் பார்த்தா ஹீரோயினே முழு கதையையும் தூக்கி நிறுத்துவாங்க. அப்படிப்பட்ட கதைகள் இப்போ வர்றதே இல்ல. இல்ல மக்களே அதை ஏத்துக்கறது இல்லையான்னு தெரியல. அதுமாதிரியான படங்கள் வரணும். அந்த மாதிரிக் கதைகள்ல நான் இருக்கணும்னு ஆசைப் படறேன்!”.

இந்தப் படத்த மட்டும் திரும்ப ரீமேக் பண்ணினா சம்பளமே இல்லாம நடிப்பேன்னு சொன்னா எந்தப் படம் சொல்லுவீங்க?

” ‘ மறுபடியும்’ அந்தப் படத்துல ரேவதி கேரக்டரா இருந்தாலும் ஓகே, ரோகிணி கேரக்டரா இருந்தாலும் ஓகே. செம படம்!”

’ஒரு நாள் கூத்து’ படம் உங்க கேரக்டர் பத்தி சொல்லுங்களேன்?

“ மூணு ஹீரோயின்ஸ், அவங்களோட கல்யாணம் அதுதான் படத்தோட கான்செப்ட். ‘சுசிலா’ங்கற கேரக்டர்ல நடிச்சிருக்கேன். நான் படத்துல எஃப்.எம் ஆர்.ஜே. தைரியமா எதையும் சுயமா முடிவெடுக்கற பொண்ணு. மைக் ஆன் பண்ணினா ஒரு மாதிரியும், மைக்கை ஆஃப் பண்ணினா வேற மாதிரியும் இருப்பேன்!”.

’கபாலி’ சான்ஸ் ... அந்த அனுபவங்கள சொல்லுங்களேன்?

“ ’மெட்ராஸ்’ நடிச்சதுனால தான் கபாலி சான்ஸ் கிடைச்சது. இல்லன்னா நான்லாம் ரஜினி சார் பக்கத்துல கூட நின்னிருப்பேனான்னுகூடத் தெரியல. ‘ மெட்ராஸ்’க்கு அப்பறம் ரஜினிசார் கூட  ரஞ்சித் சார் படம் பண்ணப் போறாருன்னு தெரிஞ்ச உடனே அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு. எங்களுக்கும் வாய்ப்பு இருக்கும்னு நம்பிக்கைல இருந்தோம். அதே மாதிரி ’மெட்ராஸ்’ படத்துல நடிச்ச கார்த்தி சார், கேத்ரீன் தவிர எல்லாருமே அப்படியே இந்தப் படத்துல நடிச்சிருக்கோம்!”.

உங்களுக்கும் ரஜினிக்கும் இடையில ஸ்க்ரீன் ஷேரிங் இருக்கா? உங்க கேரக்டர் பத்தி சொல்லுங்களேன்?

“ இருக்கு...மலேசியாவுல நடக்குற கதைன்னு எல்லாருக்குமே தெரியும். அதுல என்னோட கேரக்டர் பேரு மீனா. பயங்கர சென்சிடிவ் பொண்ணு. இப்போதைக்கு இது போதுமே ப்ளீஸ்!”

ரஜினி என்ன சொன்னாரு..அவருகிட்ட பேசினீங்களா?

“ சூப்பர் சூப்பர்னு சொன்னாரு. ஆக்சுவலி அவரும் மெட்ராஸ் பார்த்துருக்காரு. என்னைய தெரியல. ஒரு சீன் அவர் கூட நடிச்சு முடிச்சதுக்கு அப்புறம் தான் ரஞ்சித் கிட்ட, ‘யாரு இந்தப் பொண்ணு?’ன்னு கேட்டாரு. சார் ‘மெட்ராஸ்’ படத்துல அன்பு மனைவி கேரக்டர்ல நடிச்ச பொண்ணு சார்’ன்னு ரஞ்சித் சொன்ன உடனே ‘ஓ அந்தப் பொண்ணா சூப்பர் சூப்பர்’னு பாராட்டினாரு!”

மகிழ்ச்சி....

நாம் கேள்வியை தொடங்குமுன் உற்சாகமாகத் தொடர்கிறார்; “ நான் எல்லாத்துக்குமே இதச் சொல்லுவேன். ’கபாலி’ படத்துக்கு முன்னாடி ‘மெட்ராஸ்’ பட செட்டுலயே ’மகிழ்ச்சி’ செம ஃபேமஸ். ரஞ்சித் சாரோட அசிஸ்டெண்ட் அதியன் அடிக்கடி சொல்லுவாரு. அப்படியே ரஞ்சித் சாரும் ஒவ்வொரு நல்ல ஷாட் முடிஞ்சா அல்லது நல்ல விஷயம் நடந்தா உடனே மகிழ்ச்சினு சொல்லுவாரு. அத நாங்களும் கோரஸா சொல்லிச் சொல்லி, இப்போ ‘கபாலி’ பட டீஸர்ல ரஜினி சொல்லவும், செம வைரல் ஆகிடுச்சு. எங்க பார்த்தாலும், யாரப் பார்த்தாலும் ‘மகிழ்ச்சி’ன்னு சொல்றாங்க. சூப்பர்ல?. ரெகார்ட் ப்ரேக் பண்ணின டீசர்ல வந்ததுன்னா சும்மாவா!”

ரஞ்சித் பத்தி சொல்லுங்களேன்..

“ அவரு கூட இருக்கற எல்லாரும் மேல வர எவ்வளவு நல்லது பண்ண முடியுமோ அவ்வளவு ஹெல்ப் பண்ணுவாரு. கோ-டைரக்டர்கள் கிட்ட அவரு சொல்ற ஒரே விஷயம் இதுதான். பெரிய ஆர்டிஸ்ட்டோ , சின்ன ஆர்டிஸ்ட்டோ எல்லாரையும் ஒரே மாதிரி மதிக்கணும்னு சொல்லுவாரு!”

அடுத்தடுத்த படங்கள் பத்தி சொல்லுங்களேன்?

“ ’கபாலி’ ரிலீஸ் ஆகப் போகுது.. இருமுகன் படத்துல சின்ன ரோல். விக்ரம் சார் படத்துலயும் நடிச்சிட்டேன். என்ன எனக்குப் பிடிச்ச நயன்தாரா கூடத்தான் எனக்கு சீனே இல்ல. வருத்தமா இருக்கு!”

ரஜினிகாந்த் கூட நடிச்சிட்டீங்க. அடுத்து யார் கூட நடிக்கணும்?

“ ரஜினி சார் கூட நடிச்சா அடுத்து கமல் சார் தான். வெயிட் பண்றேன். எனக்கு பெர்சனலா பிடிச்ச ஹீரோக்கள்னா அதர்வா, விஜய் சேதுபதி, தனுஷ்!”.

தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு நீங்க வைக்கிற கோரிக்கை என்ன?

“ சொந்தக் குரல்ல டப்பிங் பேச வாய்ப்புக் கொடுத்தா நிறைய தமிழ் பேசுற நடிகைகள் வருவாங்க. இப்போ நான் என் கேரக்டருக்கு டப்பிங் பேசிடுறேன். அந்த மாதிரி தான் அவங்கவங்க நடிக்கிற கேரக்டருக்கு அவங்கவங்க டப்பிங் பேசினா தான் அந்த ரோல் பெர்ஃபெக்டா அமையும்!”

-ஷாலினி நியூட்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க