நான் இன்னும் நல்லபடம் எடுக்கல! - இயக்குநர் பாண்டிராஜ் | Director Pandiraj about films and critics

வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (11/08/2016)

கடைசி தொடர்பு:13:08 (31/01/2017)

நான் இன்னும் நல்லபடம் எடுக்கல! - இயக்குநர் பாண்டிராஜ்

நீண்ட இடைவேளை இழுபறிக்கு பிறகு சிம்பு-நயன்தாரா  நடிப்பில் இது நம்ம ஆளு திரைப்படம் வெளியானது. இந்நிலையில், அந்தபடத்தில் இயக்குநர் பாண்டிராஜ், தனது அடுத்தக்கட்ட படத்திற்காக தயார்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்காக திருச்சி வந்திருந்த பாண்டிராஜிடம் சில கேள்விகள் முன்வைத்தோம்.

இப்போதெல்லாம் படம் வெளிவருவதே பிரச்னையாக இருக்கு, அதிலும் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் படத்தணிக்கைக்கு சென்றுவருவதில் சிக்கல் இருக்கிறது.  இந்த தொடர்ச்சியான சிக்கல் ஏன்?

 தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் அத்திப்பூத்தாற்போல் படங்கள் வெளியாகும். ஆனால் இப்போது அப்படியில்லை. பல படங்கள் வெளியாகிக்கிட்டே இருக்கு. வந்ததும் தெரியல, போவதும் தெரியல. இதேபோல் இந்தப் படங்கள் சில சமயம்  படத்தணிக்கை குழுவில் சிக்கி, அங்கங்க வெட்டி எடுக்கப்படும் நிலை இருக்கின்றது. இதற்குக் காரணம் தணிக்கை குழு மட்டுமல்ல. படம் எடுக்கும் நாமும்தான். நாம் ஒரு படத்தை எடுக்கும்போது சென்சார் செய்யப்படாத விசயங்களாக எடுத்திருக்க வேண்டும். குறிப்பாக  ஒருவன்  பார்க்கின்ற பார்வையில் இருந்தே நாம் விஷயத்தை உணர்த்த முடியும். கொலை செய்துவிட்டான் என்பதை ஒருத்தரின் முகபாவனை, பார்வையில் இருந்து கூட ஆடியன்ஸ்க்கு சொல்லமுடியும். சில விஷயங்களில் நாமும் எச்சரிக்கையாக இருக்கணும்.  நாம் வன்முறையை குறைத்து, நடிகைகளின் அங்கங்களை காட்டுவதை குறைத்து வெளியிட்டால் எல்லோரும் பார்க்க வழிவகை செய்யப்படும். அப்படிப்பட்ட படங்களை  சில பேருக்கு பிடிக்கும், ஆனால் 90 சதவிகித ஆடியன்ஸ்க்கு பிடிக்காது. அதனால்தான் என்னுடைய படங்களில் இதுபோன்ற காட்சிகளை நான் வைப்பதில்லை. சில நேரங்களில் எதார்த்தமாக வைக்க வேண்டியிருக்கும். ஆனால், அது அளவுக்கு அதிகமாக இருக்காது. இது போன்ற முன்னெச்சரிக்கையாக நாம் படம் எடுத்து சென்சாருக்கு கொண்டு சென்றால் பல பிரச்னைகள் குறையும். சினிமா ஒரு பொழுது போக்குக்கான ஏரியா, அதில் எப்படி டீசன்ட்டாக எடுத்துக்கிட்ட விசயத்தை சொல்லிடணும்னு நாம்தான் முடிவு செய்யணும்.

ஒப்பீட்டளவில் இயக்குநர்களை விட சினிமா நடிகர்களுக்குத் தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இவர்களுக்கு நடிப்பை சொல்லிக்கொடுப்பதே இயக்குநர்கள்தான். ஆனால், உங்களுக்கு தருகின்ற மரியாதைகள் நடிகர்களுக்கு போய் விடுகிறதே என்று எண்ணியதுண்டா?

அப்படியெல்லாம் இல்லை. நான்  இந்தளவுக்கு வளர்ந்து இருப்பதன் பெருமை எங்கம்மா, அப்பாவுக்கும் போய்ச் சேரும். கூடவே என் வெற்றி என் ஆசிரியருக்குமானதுதான். அவர்கள் தரமாக வளர்த்ததால்தான் நான் இந்தளவுக்கு வந்திருக்கிறேன். இயக்குநர்கள் வாத்தியார்கள் போல, ஒரு நடிகர் மாணவன் போல, மாணவர் படித்து உயர உயர போகும் போது எப்படி ஓர் ஆசிரியர் என் மாணவர்  உயரப்போகும்போது சந்தோஷம்  இருக்குமே அப்படித்தான் இயக்குநரின் சந்தோஷம்.

பசங்க போன்ற கருத்துப்படங்கள் எடுத்த நீங்கள், இது நம்ம ஆளு போன்ற கமர்ஷியல் படங்களும் எடுத்துள்ளீர்கள். இது பற்றி...

என்னுடைய முதல் படம் பசங்க, தேசிய விருதெல்லாம் வாங்கியது. ஆனால், அந்தப் படம் எடுத்ததுக்கு பிறகு எனக்கு படமே கிடைக்கவில்லைன்னு சொன்னால் நம்புவீங்களா? கருத்தியலா அந்த படம் பயங்கர சக்ஸஸ். கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் கமர்ஷியலாக எடுத்த பிறகுதான் எனக்கான சில நிதிப்பிரச்னைகள் தீர்ந்தது. கடைசியாக, வசனங்களை மட்டும் வைத்துக் கொண்டு இது நம்ம ஆளு படத்தை எடுத்தோம். கருத்துள்ள படங்கள் எடுப்பதற்கு மத்தியில் இப்போ கமர்ஷியலான படங்களும் எடுக்கவேண்டிய கட்டாயமிருக்கிறது. கருத்துள்ள படங்கள் மட்டும்தான் எடுப்போம் என்றால் அது சரியாக இருக்காது. நமக்கு சைவம் கொடுத்தாலும் சாப்பிடுவோம். அசைவம் கொடுத்தாலும் விளாசிக்கட்டுவோம் அப்படித்தான் நாம் படம் எடுக்கிறது. கருத்துள்ள படங்கள் எடுப்பது சமூகத்திற்கானது, கமர்சியல் படங்கள் என்பது என் குடும்பத்தை காப்பாற்ற.

உதவி இயக்குநராக  இருந்த உங்கள் அனுபவம் பற்றி சொல்லுங்களேன் ?

சேரன் சார் கிட்டதான் நான் உதவி இயக்குநராக இருந்தேன். நான் நினைத்த சினிமாவை அவர் எடுத்துக்கிட்டதால அவரோடு இணைந்து பணியாற்ற ஆசைப்பட்டு வேலைக்கு சேர்ந்தேன். இப்போது, சினிமாவில் ஒரு லட்சம்பேர் உதவி இயக்குநராக இருப்பாங்க. அதில் குறைந்தபட்சம் 100 பேர்தான்  படம் எடுப்பார்கள். அந்தப் படங்களில் திரைக்கு வரும் படங்கள் என்றால் மிக சொற்பம். திரைக்கு வந்த படங்களில் வெற்றியடைந்த படங்கள் என்றால் மிகக் குறைவு. இப்படியான சூழலில் நம் படத்தையும் பேச வைத்து அதில் வெற்றியடைவதுதான் மிகப்பெரிய நெருக்கடி. ஒரு படம் வெற்றியடைந்தால் அந்த வெற்றி நடிகருக்கும், ஒரு படம் தோல்வி அடைந்தால் அது இயக்குநரின் தோல்வியாக பார்ப்பதும் தமிழ் சினிமாவின் எதார்த்தமாகி விட்டது. ஆனால், ஒரு சினிமாவை தியேட்டரில் பார்க்கும் போது திரையரங்கில் உட்கார்ந்து பார்க்கும் ரசிகர்கள் கொடுக்கும் கைதட்டல்கள்தான் இயக்குநருக்கு கிடைக்கும் உண்மையான அங்கீகாரம்/

தமிழ் சினிமாவில் வசனகர்த்தா நிலை எப்படி இருக்கிறது...?

ஹாலிவுட், பாலிவுட் படங்களை ஒப்பிடுகையில் தமிழில் வசனகர்த்தா என ஒருவர் இருப்பது மிகவும் குறைவு. அவரவர் சொந்த படங்களுக்கு அவர்களே இயக்கம், வசனம், திரைக்கதை போன்றவற்றை பார்த்துக் கொள்கின்றனர். நாம் நம்முடைய படங்களில் வசனம் எழுதுவது என்பதைவிட அடுத்தவர்கள் படத்தில் வசனம் எழுதுவது என்பது, அடுத்தவர் வீட்டுக்குள் சில மாற்றங்களை நாம் செய்வது போலத்தான். அறிவுறுத்த முடியுமே தவிர  நிர்பந்திக்க முடியாது.

உங்களின் முதல் படத்திற்கு விருதுகள்  கிடைத்தபொழுது உங்களுடைய உணர்வு...

பாக்யாவில் அலுவலக உதவியாளாராக இருந்த பாண்டிராஜ், ஏவிஎம் ஸ்டூடியோவில் செக்யூரிட்டியாக இருந்த நான், பசங்க படம் எடுத்தபோது தேசிய விருதுகள், விகடன் விருதுகள் என அடுத்தடுத்த விருதுகள் கிடைத்தன. மகிழ்ச்சிதான். ஆனாலும் முன்பே நான் சொன்னதைபோல, ரசிகர்கள் கொடுக்கும் கைத்தட்டல்கள்தான் ஒரு இயக்குநருக்கு கிடைக்கும் உண்மையான அங்கீகாரம். இது பைக், கார் எதுவும் வாங்காமல் நேரடியாக விமானம் வாங்கியது போன்று உணர்வு கிடைக்கும்.

உங்களுடைய கனவு படம் எப்படியிருக்கணும்..?

எல்லாருமே பார்த்து ரசிக்கக்கூடிய, ஒரு படம் பண்ணணும், ஒரு படம் எல்லோரையும் திருப்திபடுத்திவிட முடியாது. அப்படி ஒரு ஒரு படம் பண்ணணும். அதுதான் என் ஆசை.

 நீண்ட இழுபறிக்கு பிறகு இது நம்ம ஆளு முடிந்தது, அடுத்தபடம் என்ன?

இது நம்ம ஆளு பக்கா கமர்சியல் படம், ஆனால் அடுத்தபடம் என்பது சோசியல் மெசேஜ் சொல்லும் படமாக இருக்கும். அதற்கான தயாரிப்பில்தான் இருக்கிறேன் அதைப் பற்றி விரைவில் அறிவிப்பேன்.

 இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் உங்களுக்கு எந்தத்துறை நிறைய வலிகளை தந்துள்ளது?

நான் குழந்தையாக வயிற்றில் இருந்தபோதே, கருவிலேயே இறந்ததாக டாக்டர் சொல்ல, அதன்பிறகு பிழைத்ததாக சொல்லுவாங்க. அடுத்து 6 வயதில் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு போன போது இறந்திருக்கணும். இப்படி பல முறை தப்பிப்தப்பி பல கஷ்டங்களை கடந்தாச்சு. ஒரு கட்டத்தில் எல்லா கஷ்டங்களையும் ரசிக்க ஆரம்பித்தேன். அதுதான் என்னை இந்தளவுக்கு வளர்த்துள்ளது. ஆக எந்த வலியாக இருந்தாலும் அது நம்மை உயர்த்தவே. 

ஒரு காலத்தில் சினிமா விமர்சனங்கள்,  படத்தை பார்க்க தூண்டுவதாக இருக்கும். ஆனால், இப்போது  படம் வெளியான சில நிமிடங்களில்  வெளியாகும் விமர்சனங்கள் படத்தை பார்க்கலாம் கூடாது என தீர்மானிக்கும்படியாக வெளியாகிறதே  இதுகுறித்து உங்கள் கருத்து...

ஒரு கலைஞன் என்பவன் அம்மாவைப் போன்றவன். அம்மா தன் குழந்தையை திருப்திப்படுத்த அனைத்தும் செய்வது போல ஒரு கலைஞன் ரசிகனை தனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் திருப்திப்படுத்த வேண்டும். அதற்காக, நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. முன்பெல்லாம் சில மீடியாக்களில் தான் விமர்சனம் வரும். ஆனால், இப்போது படம் பார்க்கிற எல்லோரும் விமர்சகர்களாக மாறி விட்டார்கள். அதனால் தான் சினிமா வந்த அடுத்தநொடி  விமர்சனங்கள் வருகின்றது. ஆனால் நல்லபடம் யார் தடுத்தாலும் வெற்றியடையும். ஒரு நல்ல கலைஞன், விமர்சனங்களை ஆரோக்கியமானதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  

திரையுலகில் சாதிக்க விரும்புபவர்களுக்கான அறிவுரை...

திறமையும்,கதை எழுதும் ஆற்றலும் இருந்தால் தைரியமாக குறும்படம் மூலம் கூட இயக்குனர் ஆகலாம். அனுபவம் என்பது கட்டாயமில்லை. இப்போது நிறைய பேர்  குறும்படம் எடுத்த கையோடு இயக்குநர்களாகி இருக்கிறார்கள்.

தேசிய விருது வழங்குவதில் பாரபட்சம் இருக்கிறது என குற்றச்சாட்டு உள்ளதே?

நல்லாசிரியர் விருது வாங்குவதிலேயே நிறைய பாலிடிக்ஸ் இருக்கிறது. அதுபோலத்தான் விருது வழங்குவதிலும் நிறைய பாலிடிக்ஸ் இருக்கு. எல்லோரும் தரமான படங்களை அங்கீகரிப்பதில்லை. அதை சக கலைஞர்களே தடுக்க நினைப்பதும் வேதனை. இயக்குநர் பாலா பலமுறை சொல்வார், ரசிகனின் கைதட்டல்தான் ஒவ்வொரு இயக்குநருக்கும் கிடைக்கும் உன்னதமான விருதுன்னு. அது போதும்.

- சி.ய. ஆனந்தகுமார்
மு.சாருமதி
(மாணவப் பத்திரிகையாளர்)
படங்கள்: என்.ஜி. மணிகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்