Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

” நான் தமிழ்நாட்டுக்கு வந்து 30 வருடங்கள் ஆயிடுச்சு!” - HBD குஷ்பு

குஷ்புவை அரசியலில் எதிர்ப்பவர்கள் இப்போது  பலர் இருந்தாலும் சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரத்தில்  ஒட்டுமொத்த தமிழ்நாடு கொண்டாடியது. அதிலும் குஷ்பு கோயில்..? உலக அளவில் உயிரோடு இருப்பவருக்கு, அதுவும் ஒரு நடிகைக்குக் கோயில் கட்டியது குஷ்புக்காகத்தானே! இன்று அவரின் பிறந்த நாள் கொண்டாடாமல் விடலாமா? 

குஷ்பு மிகச்சிறந்த நடிகை என்பது தமிழ்நாடே அறிந்த ஒன்று. தர்மத்தின் தலைவன், வருஷம் 16, வெற்றிவிழா, சின்னத்தம்பி என திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொட்ட இடங்களிலெல்லாம் வெற்றியை பரிசாக பெற்றவர்.  அரசியலிலும் தனக்கான பாணியில் செயல்பட்டுவருபவர்.

“‘ஜனநாயகம்’தான் அரசியல்ங்கிற வார்த்தைக்கு அர்த்தம். மக்களுக்குச் செய்யும் சேவைதான் அரசியல். அதைத் தொழிலா பார்க்கக் கூடாது. வெளியே இருந்துக்கிட்டு ‘அரசாங்கம் இது செய்யலை, அது செய்யலை’னு சொல்றதோட நிறுத்திக்காம, அரசாங்கத்தோட ஆணிவேர் வரைக்கும் புரிஞ்சுக்கணும்!” என்று அரசியலைப் பற்றி தெளிவான விளக்கவுரை தந்தவர்.  

1970ல் மும்பையில் பிறந்து வளர்ந்த குஷ்புவை அரவணைத்து வாழ்க்கை கொடுத்தது தமிழ்சினிமா தான். சினிமாவிற்கு வந்த காலங்களில் தமிழில் ஒரு வார்த்தைக்கூட தெரியாது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்து தமிழை சரளமாக பேசக்கற்றுக்கொண்டவர். இப்பொழுது குறிப்புச்சீட்டுக்கூட இல்லாமல், பொதுமேடைகளில் ஏறி தமிழில் கோஷம் போடும் அளவிற்கு முன்னேறிவிட்டார். புதிய மொழியைக் கற்றுக்கொள்ள விரும்பாத இந்த  உலகத்தில், குஷ்புவின் தமிழ் ஆச்சரியம்தான்.

1991ல் கிழக்கு கரை படத்தின் படப்பிடிப்பிற்காக குஷ்பு, பிரபு மற்றும் இயக்குநர் வாசு மூவரும் ரயிலில் திருநெல்வேலி சென்று கொண்டிருக்கிறார்கள். அதே ரயிலில் தான் கலைஞர் கருணாநிதியும் சென்றார். ரயிலில் இயக்குநர் வாசு முதன்முறையாக குஷ்புவை கலைஞருக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். அதுதான் குஷ்பு, கலைஞரை சந்தித்த முதல் தருணம். 

அரசியலோ, சினிமாவோ வீட்டில் குஷ்புவும், சுந்தர்.சியும் பேசிக்கொள்வதே கிடையதாம். வீட்டிற்குச் சென்றால் பேச ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது என்பதே குஷ்புவின் கருத்து. வீட்டை சுத்தம் செய்வது, பூந்தொட்டியை சரிசெய்வது, உணவுமேஜையை அலங்கரிப்பது இவரின் விருப்பமான செயல்பாடுகள். 

குஷ்புவின் குடும்பம் ரொம்ப அழகானது. இரண்டும் பெண் குழந்தைகள். மூத்த மகள் அவந்திகா இவரின் செல்லம். இளையமகள் அனந்திதா  அப்பா செல்லம். அப்பா பாசமழை பொழியும் நேரங்களில், மிகவும் கண்டிப்பான தாய் குஷ்பு. 

 சென்னை மின்சார டிரெயின்ல வாசலில் நின்று காற்றில் முடிபறக்க டிராவல் பண்ணவேண்டும் என்பது தான் குஷ்புவின் நீண்ட நாள் ஆசை. இதற்கான வாய்ப்பு நகரம் பட ஷுட்டிங்கின் போது கிடைத்திருக்கிறது. பறக்கும் ரயிலில் நடந்த படப்பிடிப்பின் போது, குஷ்பு ரயிலில் ஏறி மகிழ்ந்திருக்கிறார். 

ரஜினியா? கமலா? யாரைப்பிடிக்கும் என்று கேட்டால், யோசிக்காமல் கமல் தான் என்பர். ஏனெனில் குஷ்புவின் நெருங்கிய நண்பர் கமல். வீட்டு நிகழ்ச்சிகள் வரையிலும் கமல், கெளதமி கலந்துகொள்வார்களாம். ரஜினி அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருக்கிறாராம். குஷ்புவின் மரியாதைக்குரியவர்களில் ஒருவர் ரஜினிகாந்த்.  

மெளன ராகம் ரேவதி கதாபாத்திரத்தின் மீது அதீத லவ் குஷ்புவிற்கு. பாலசந்தர் படங்களைப் பார்த்துவிட்டு, அவரின் எல்லா படங்களிலும் நடித்திருக்கலாமே என்று நினைத்திருக்கிறார் குஷ்பு. அமிதாப்பச்சன், தபு நடித்த சீனி கம் படத்தினை பார்த்துவிட்டு, தபு கேரக்டர் பிடித்து போக, தபுவை மெசேஜில் பாராட்டியிருக்கிறார். கூடவே நான் நடிக்கவில்லையே என்ற பொறாமையில் திட்டவும் செய்தாராம். அந்த அளவிற்கு சினிமாவை நேசிப்பவர்

“நான் கேரக்டர் ரோலில் நடித்து ரொம்ப வருஷமாகிடுச்சி, சீக்கிரமே மறுபடியும் நடிப்பேன்” என்று சில மாதங்களுக்கு முன்பு பேட்டிக்காக அழைத்த போது நம்மிடம் பகிர்ந்துகொண்டார் குஷ்பு. அதை நிறைவேற்றியும் காட்டிவிட்டார். ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் குஷ்பு, ஊர்வசி, சுஹாசினி, ராதிகா நால்வரும் நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடந்துகொண்டிருக்கிறது. அதற்கான படப்பிடிப்பிற்காக தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் குஷ்பு. 

இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் வாழ்த்துகள் சொல்வதற்காக, தொலைப்பேசியில் அவரை தொடர்புகொண்டோம். தொலைப்பேசியில் அழைத்த போது தான், அவர் இந்தியாவில் இல்லையென்பதை கஸ்டமர் வாய்ஸ் உணர்த்தியது. ஏமாற்றத்தில் கட் செய்யும்போது, “ஹலோ என்ற குஷ்புவின் குரல் எதிரில் கேட்கவும் குஷியில் வாழ்த்துக்களைச் சொல்லவும் ஆச்சர்யத்தில் பேசத்தொடங்கினார். 

”ஆஸ்திரேலியாவின்  மெல்பர்ன் சிட்டில இருக்கேன், எப்படி என்ன பிடிச்சீங்க... ரொம்ப நன்றி. இந்த பிறந்த நாள் எனக்கு ரொம்பவுமே ஸ்பெஷல். ஏன்னா,  ”நான் தமிழ்நாட்டுக்கு வந்து 30 வருடங்கள் ஆயிடுச்சு.  30 வருஷமா சென்னையில் நல்லபடியாக என்னை பார்த்துக்கிச்சி. முதலில் ரசிகையா, அப்புறம் மருமகளா, இப்போ மகளா என்னை அரவணைச்சது இந்த சென்னை தான். ரொம்ப சந்தோஷமா இருக்கேன். 

இது என்னுடைய தாய் வீடுன்னு கூட சொல்லலாம். என்னா, அம்மாவும் இங்கே தான் இருக்காங்க. இவ்வளவு அன்பு, பாசம்ன்னு என் மேல அளவில்லாம பார்த்துக்கொண்ட ரசிகர்களுக்கு என் நன்றையை இந்த நேரத்தில் சொல்லியே ஆகணும். ”

ஷுட்டிங் ஸ்டார்ட் ஆகிடுச்சா? 

எனக்கு ஷூட்டிங் 1ம் தேதி தான் ஆரம்பிக்கிறது. ரொம்ப ஹாப்பியாவே இந்த நாளைத் தொடங்குறேன், என்னை வாழ்த்திய, அன்பு செய்த, பாசம் வைத்த அனைவரும் அன்பு நன்றிகள். 

- ஹாப்பி பர்த்டே குஷ்பு! 

- பி.எஸ்.முத்து- 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement