Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"எனக்கு பிடித்த அனிமல்... கெஸ் பண்ணுங்களேன்!' - காஜல் அகர்வால் சவால் #VikatanExclusive

காஜல்

கால்கள் ஒரு இடத்தில் நிற்க மறுக்கின்றன. கைகளின் அசைவுகள் ஒரு நொடி கூட அடங்கவில்லை. பரபரப்பாகவே இருக்கிறார்... படபடவென பேசுகிறார். ""எல்லோருக்கும் வணக்கம்... நான் காஜல் அகர்வால்..." என்பதைத் தாண்டி தமிழ் வரவில்லை. ஆனால், தமிழ் சாகவில்லை. சிரித்துக் கொண்டே இருக்கிறார்... 

"உங்களின் சிரிப்பு ரொம்ப இயல்பா,அழகா இருக்கே ??" என்று கேட்டால்... அதற்கும் நீண்ட நேரம் சிரிக்கிறார். சினிமாவில் அல்ல, காஜல் நிஜத்திலேயே வெட்கப்படுகிறார்.... " நன்றி... கண்டிப்பாக இது நடிப்பு இல்லை. நான் நானாகவே இருக்கிறேன். வாழ்வில் நான் எப்போதுமே நடிப்பதில்லை. மனதில் நினைப்பதை முகத்தில் அப்படியே பிரதிபலிப்பேன்... ஒரு நடிகையாக அது தவறு தான். ஆனால், நான் இப்படித்தான்..." என்று மீண்டும் சிரிக்கிறார். 

கவலைகளற்று சிரித்துக் கொண்டிருந்த காஜலிடம் "கவலை வேண்டாம்" என்பதிலிருந்தே தொடங்கினோம்...

இதுவரை நீங்கள் செய்த கதாபாத்திரத்தில் இருந்து "கவலை வேண்டாம்" திவ்யாவில் என்ன வித்தியாசம் இருக்கிறது?

" நிச்சயம் வித்தியாசம் இருக்கிறது. திவ்யா, யதார்தத்திற்கு மிக நெருக்கமான ஒரு கதாபாத்திரம். சுதந்திரமான, தைரியமான, உறுதியான ஒரு பெண் கதாபாத்திரம். அதே சமயத்தில் எப்பொழுதும் ஒரு வித குழப்பத்திலேயே இருக்கும் பெண். இந்த கதாபாத்திரம் சமூகத்தின் பெரும்பான்மை பெண்களை  பிரதிபலிக்கும்.  "

ஜீவா ரொம்ப கலாட்டாவான ஆளாச்சே?

" ஐயோ... நிச்சயமா. அவரு மட்டுமா இந்தப் படத்தின் இயக்குநர் டீகேவும் கூடத் தான். படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் அவ்வளவு கலாட்டாவாக இருக்கும். ஆர்.ஜே. பாலாஜி, மயில்சாமி, பாபிசிம்ஹா என பெரும் பட்டாளமே இருக்கும். ஷூட்டிங்க் முழுக்கவே விழுந்து விழுந்து சிரிச்சேன்னு சொல்வாங்களே. அப்படித்தான். அதே சமயம் அனைவருமே வேலையில் ரொம்ப கெட்டிக்காரர்கள். கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தான் இருக்கணும் "

படப்பிடிப்பில் நடந்த அப்படியான ஏதாவது கலாட்டா?

" ம்ம்ம்ம்ம்.... ( நீண்ட நேரம் யோசிக்கிறார்), டக்குன்னு ஞாபத்துக்கு வரவில்லையே. ஆனால், ஒவ்வொரு நாளுமே சிரிப்பு சரவெடியாகத் தான் இருக்கும். இந்தப் படத்தைப் பொறுத்தவரைக்கும் ஷூட்டிங் போன மாதிரியான உணர்வே இல்லை. ஏதோ, விடுமுறைக் கொண்டாட்டத்தில் இருந்தது போன்ற உணர்வு தான் இருந்தது."

அப்போ இந்தப் படத்தில் நடிப்பது மிகவும் எளிதாக இருந்ததா?

" அப்படி சொல்லிவிட முடியாது. சிச்சுவேஷன் எனக்கு பிடிச்ச மாதிரி இருந்துச்சு. அதே சமயம் இந்தப் படத்தின் சில காட்சிகளில் நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். குறிப்பாக, க்ளைமாக்ஸ் காட்சில ஒரு பாத்ரூமில் உட்கார்ந்து  அழுவது போல காட்சி... நிறைய எமோஷன்ஸ். எக்ஸ்பிரஷன்ஸ். ரொம்ப சவாலா இருந்தது.

"மாரி" படத்திற்குப் பிறகு உங்கள் தோற்றத்திலும், நடிப்பிலும் ஒரு மெருகேற்றம் தெரிகிறதே?

" ம்ம்ம்... ஆமாம். ஒவ்வொரு படத்திலுமே ஏதாவது புதுசா செய்யணும்னு நினைப்பேன். ஒரு நடிகையா தொடர்ந்து  கத்துக்கிட்டே இருக்கேன். திறமையான நடிகர்கள், நல்ல இயக்குநர்களோடு பணிபுரியும்போது அது இன்னும் அதிகமாக வெளிப்படுது. என் உழைப்பு கவனிக்கப்படுவது எனக்கு மகிழ்ச்சி".

தெலுங்கில் டபுள் ஹீரோயின் சப்ஜெக்டில் நடிக்கிறீர்கள். ஆனால், தமிழில் அப்படி நடிப்பதில்லையே?

" தமிழில் அப்படியான கதாபாத்திரங்களோடு என்னை யாரும் அணுகவில்லை என்பதே உண்மை. அப்படியான கதையோடு யாராவது வந்தால், நிச்சயம் அதில் நடிப்பேன்."

பெரிய நடிகர்கள், பெரிய பேனர்களின் படங்களில் மட்டுமே நடிக்கிறீர்களே ?

" அப்படி இல்லை. எனக்கு ஸ்கிரிப்ட் தான் முக்கியம்."

ஒரு புகழ்பெற்ற நடிகையாக இருப்பதால், பழைய சராசரி வாழ்வை மிஸ் செய்கிறீர்களா?

" அப்படி சொல்ல முடியாது. நடிகையாக இருந்தாலும், குடும்பத்திடமும், நண்பர்களிடமும்... நான் அதே பழைய காஜல்தான். உறவுகளை சரிவர சமமாக சமாளிப்பதால், அந்தப் பிரச்சினை எனக்கில்லை."

ஒரு நடிகையாக இருப்பதில் சந்தோஷம் என்ன? வருத்தம் என்ன?

" சந்தோஷம் தான். இதில் வருத்தப்பட எனக்கு ஏதுமில்லை. எத்தனை பேருக்கு இப்படியான வாய்ப்பு கிடைக்கும். வெரைட்டியான வாழ்க்கை, பலவிதமான உணர்வுகள் என நடிகையாக என் வாழ்க்கை திருப்தியா இருக்கு."

ராஜமெளலியின் "மஹதீரா" ஹீரோயின் நீங்கள். பாகுபலியில் நடிக்க அழைக்கவில்லை என்ற வருத்தம் உள்ளதா?

" கண்டிப்பா இல்லை. இதுவரை ராஜமெளலி போல சிறந்த இயக்குநரை என் வாழ்நாள்ல சந்திக்கலை. அவரோட ஒரு படத்துதுல நடிச்சதையே பெரும் பாக்கியமாகவும், வரமாகவும் நினைக்கிறேன். பாகுபலி படத்திற்கு எந்த கதாபாத்திரங்கள் தேவையோ அதை அவர் தேர்வுசெய்திருக்கிறார். அதில் நான் இடம்பெறாததில் பெரிய வருத்தம் ஒன்றுமில்லை." என்று சிறிய புன்சிரிப்போடு சொல்லி முடிக்கிறார். அடுத்த கேள்விக்குப் போகும் முன்னரே தடுக்கிறார்... " ரொம்ப பசிக்குகுது... என்னால் பசியை அடக்க முடியாது..." 

சாப்பிட நடக்கும் நேரத்தில் காஜலிடம் சில க்விக் கேள்விகள்

1. பிடித்த நிறம் ?

 " வெள்ளை"

2. பிடித்த உணவு?

" ஆசிய உணவுகள். குறிப்பாக தாய் உணவுகள்."

3. நீங்கள் வைத்திருக்கும் கார்? உங்களின் கனவு கார்?

" இப்பொழுது ஆடி வைத்திருக்கிறேன். கார் குறித்த கனவெல்லாம் எனக்கில்லை."

4. இந்தியாவில் பிடித்த இடம்? உலகளவில் பிடித்த இடம்?

" இந்தியாவில் கோவா மற்றும் ஜம்மு கஷ்மீர். உலகளவில் ப்ரான்சின் ப்ரெஞ்ச் ரிவெய்ரா"

5. உங்கள் பொழுதுபோக்கு?

" படிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். படங்கள் பார்ப்பது, சமைப்பது, நடனம், பயணம்."

6. பிடித்த மிருகம்?

" குதிரை".

7. பிடித்த படம்?

" பிஃபோர் சன்ரைஸ், பிஃபோர் சன்செட்"

8. நீங்கள் நடித்ததில் பிடித்தது?

" அதை இனிமேல் தான் நடிக்க வேண்டும்"

-இரா.கலைச்செல்வன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்