பாபி சிம்ஹாவுக்கும் எனக்கும் நடுவுல என்னனு யாருக்காவது தெரியுமா?' - chat with ரேஷ்மி மேனன்

 

'காதலில் சொதப்புவது எப்படி?' படத்தின் மூலம் பாபி சிம்ஹாவும், 'இனிது இனிது' படத்தின் மூலம் ரேஷ்மி மேனனும் முதன் முதலில் தமிழில் அறிமுகம் ஆனார்கள். 'உறுமீன்' படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இந்த சமயத்தில் இருவருக்கும் இடையில் இருந்த நட்பு, காதலாக மாறியது. கடந்த ஏப்ரல் மாதம் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது பாபி சிம்ஹா 'வல்லவனுக்கும் வல்லவன்' படத்தில் நடித்து வருகிறார். இருவருக்கும் திருமணம் ஆன சில மாதங்களிலேயே கருத்து வேற்றுமை ஏற்பட்டு, பிரிந்து வாழ்வதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இந்தத் தகவலை இருவருமே மறுத்து வந்தனர். திருமணத்துக்குப் பிறகு புதிதாக எந்தப் படத்திலும் ரேஷ்மி மேனன் கமிட் ஆகவில்லை. பாபி சிம்ஹாவுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். 

ரேஷ்மி மேனனிடம் பேசினோம்,


''திருமணத்துக்குப் பிறகு நடிக்கும் எண்ணம் இருக்கிறதா?''

''அப்படியொரு எண்ணம் இதுவரையில் இல்லை. திருமணத்துக்குப் பிறகு வீட்டைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றுதான் விரும்பினேன். இப்போது அதைத் தான் செய்து கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு எந்த படத்திலும் நடிக்கும் எண்ணம் இல்லை.'' 

''காதலித்தபோது கிடைத்த, அதே அன்பு உங்கள் கணவரிடம் கிடைக்கிறதா?'' 

''அப்போது எப்படி இருந்தாரோ, இப்போதும் அப்படித்தான் இருக்கிறார். பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. அதே அன்பு அப்படியே தொடர்வதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.''

 


''வீட்டில் உங்களை எப்படி அழைப்பார்?''

''எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். அது தனிப்பட்டதாகவே இருக்கட்டுமே. எல்லா பிரபலங்களைப் போலத்தான் நாங்களும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.''

''படத்திலும் கமிட் ஆகவில்லை... வீட்டிலேயே இருக்க போர் அடிக்கவில்லையா?''

''அப்படியெல்லாம் இல்லை. எனக்கு போர் அடிக்கும் விதமாக நான் எப்போதும் இருக்க மாட்டேன். ஏதாவது புத்தகங்களைப் படிப்பேன். சயின்ஸ் ஃபிக்‌ஷன், ரொமான்டிக் படங்கள் நிறைய பார்ப்பேன். பிடித்தமான உணவுகளை சமைப்பேன். அதையும் மீறி போர் அடிப்பது போல் இருந்தால் நண்பர்களுடன் வெளியில் போவேன். விழாக்களில் கலந்து கொள்வேன்.'' 

''சென்னையில் உங்களுக்குப் பிடித்த இடம்?''

''சென்னையில் அண்ணாநகரில் உள்ள மகாலிங்கபுரம் கோயிலுக்குப் போக மிகவும் பிடிக்கும். அவரும் என்னுடன் வருவார். வேறு வழி'' (சிரிக்கிறார்). 

''கூட்டுக் குடும்பமாக இருக்கிறீர்களா?''

''நாங்கள் இருவர் மட்டும்தான் இருக்கிறோம். மாமனார், மாமியார், கணவர் உடன் பிறந்தவர்கள் எல்லாம், கொடைக்கானல்ல இருக்காங்க. ஆனாலும், மாதம் தவறாமல் சென்னைக்கு வந்து எங்களை பார்த்துட்டுப் போவாங்க. நான் ரொம்ப ஜாலியான டைப். அதனால் அவங்க வந்தா வீடே கலகலனு இருக்கும்.''

''உங்களைப் பற்றிய திடீரென வதந்தி வர என்னதான் காரணம்?''

''எங்களுக்கும் அதுதான் புரியவில்லை. எங்களைப் பிடிக்காத யாரோதான் இதுபோன்று செய்திகளைப் பரப்பி விடுகிறார்கள். பாபி சிம்ஹாவுக்கும் எனக்கும் நடுவுல இருக்கிற விஷயம் யாருக்காவது தெரியுமா..? அதைப் பற்றித் தெரியாமலே இப்படி தவறாக பரப்பி விடுகிறார்கள். பிரபலங்கள் என்றாலே இதுபோன்ற செய்திகள் வருவது சகஜம்தான். இருந்தாலும், என்னுடைய தூரத்து உறவினர்களோ, நண்பர்களோ கேள்விப்படும்போது, போன் செய்து விசாரிப்பார்கள். நல்ல விஷயங்களை மீடியாக்கள் எழுதும்போது சந்தோஷமாக இருக்கிறது. இதுபோன்ற வதந்திகள் வரும்போது, தயவு செய்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுத் தெரிந்துவிட்டு எழுதுங்கள். ஏனென்றால், நல்ல விஷயங்களை விட தவறான செய்திகள் தீ போல பரவும். எங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு எங்களைப் பற்றி நன்றாகத் தெரியும் என்பதால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எங்கள் வாழ்க்கையை நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.''

- வே. கிருஷ்ணவேணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!