'உலக லெவல்ல தன்னைத் தானே அறிமுகப்படுத்திகிட்ட ஒரே இயக்குநர் யார் தெரியுமா..?' - பார்த்திபன்

வரும் டிசம்பர் 23-ம் தேதி பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகவுள்ள 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தின் இசை வெளியீடு டிசம்பர் 4 அன்று மாலை நடைபெறுகிறது. இசை வெளியீட்டோடு நடிகரும், இயக்குநருமான பாக்யராஜூக்கு 'திரை பாக்கியம் திரு.கே.பாக்யராஜூக்கு சாதனை சல்யூட்' என்கிற பெயரில் பாராட்டு விழாவை அதே மேடையில் நடத்தவிருக்கிறார் பார்த்திபன். திரை உலகத்தினர் ஒன்று கூடும் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு வேலைகளில் பிஸியாக இருந்தவரிடம் பேசினோம்,

''இந்த நிகழ்ச்சிக்கு ஸ்பெஷல் கெஸ்டாக யாரையாவது அழைத்திருக்கிறீர்களா..?''

''திரை உலகத்தினர் எல்லாருமே இந்த நிகழ்ச்சிக்கு வரவிருக்கிறார்கள். ஸ்பெஷல் கெஸ்டாக அமிதாப் மற்றும் அனில் கபூர் இரண்டு பேரிடம் பேசிட்டு இருக்கேன். பார்ப்போம், அவங்களோட நேரத்தைப் பொறுத்து வரக்கூடிய வாய்ப்பு இருக்கு. இந்த மாதிரி ஒரு விழாவை நடத்துறோம்னு நான் அவர்கிட்ட சொன்னப்போ, 'எதுக்குப்பா இதெல்லாம்' னு மறுத்தார். நாங்க நடத்த ஆசைப்படுறோம்னு சொல்லி சம்மதம் வாங்கிட்டேன். ஒருவருக்கு சரியான குரு அமைஞ்சுட்டாலே அவன் பாதி ஜெயிச்ச மாதிரி. நான் அப்படி ஒரு குருவை பெற்றிருக்கேன் என்பது நான் செய்த பாக்கியம்''.

''இப்போதெல்லாம் படம் இயக்குபவர்களை விட அதில் நடிப்பவர்கள்தான் அதிகமாகியிருக்கிறார்களே?''

'' நடிக்கக் கூடிய தகுதி தனக்கு இருக்கிறதா நினைக்கிறவங்க  நடிக்க ஆரம்பிச்சிருக்காங்க. இதுல தவறு எதுவும் இல்லையே. கே.பாலசந்தர் அறிமுகப்படுத்தின ரஜினி, கமல் இருவரும்தானே அவரை விட அதிகமாக மக்கள்கிட்ட பிரபலமாகியிருக்காங்க. அதனால இயக்குவதை விட நடிப்பதன் மூலம்  சீக்கிரத்தில் மக்கள் மத்தியில பிரபலம் ஆகிடலாம் என்கிற ஆசையிலும் பல பேர் நடிக்க ஆரம்பிச்சிருக்காங்கனு நினைக்கிறேன். இது ஒரு பப்ளிசிட்டி நோக்கம் தான். ஆனா, உலக லெவலில் தன்னைத் தானே அறிமுகப்படுத்திகிட்ட ஒரே டைரக்டர் நான் தான். நான் முதன் முதல்ல இயக்கின படத்துல நான் தான் ஹீரோ. எனக்கு தெரிந்த வரைக்கும் வேற யாரும் இல்லை. எந்த சப்பக்கட்டும் இல்லாம என் முதல் படமான 'புதிய பாதை' படத்தில நடிச்சிருக்கேன்''. 

''காமெடி நடிகர், நடிகைகள் அதிகம் உருவாகாமல் இருக்கக் காரணம் என்ன?''

''இருக்கிறதுலயே காமெடி ரொம்ப பெரிய விஷயம். தியேட்டர்ல உட்கார்ந்திருக்கிற ஒவ்வொருத்தரையும் கிச்சு கிச்சு மூட்டி எல்லாம் சிரிக்க வைக்க முடியாது. அதுக்குப் பெரிய புத்திசாலித்தனம் வேணும். கலைவாணர், வடிவேலு, தம்பி ராமையா  எல்லார் பின்னாடி இருக்கிற பெரிய புத்திசாலித்தனம் தான் இன்னிக்கு வரைக்கும் அவங்களை நினைச்சாலே சிரிப்பை வரவழைக்கத் தூண்டுது. இன்னும் சொல்லப் போனால் நகைச்சுவை என்பது இயல்பாகவே இருக்க வேண்டும். அவர்கள் கண்டிப்பாக ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு''.

''உங்களைப்போன்ற பிரபலங்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் என உங்களுடைய படங்கள் குறித்து நீங்களே ரிலீஸ் செய்து கொண்டால் பி.ஆர்.ஓ.க்களுக்கு வேலை இல்லாமல் போய்விடுமே..?''

''இப்பவும் எல்லா விஷயத்துக்கும் பி,ஆர். ஓ கிட்டத்தான் கேட்கிறேன். உலகம் ரொம்ப விரிந்திருக்கு. ஒரு விஷயத்தைக் கொண்டு சேர்க்க போஸ்ட்மேன் பத்தாது. குதிரை, வாகனங்கள் வேகங்களையும் தாண்டி, இன்னும் வேகம் தேவையாக இருக்கு. அதுக்கு இந்த சமூக வலைதளங்கள் உதவியா இருக்கு. ஆனால், பி.ஆர்.ஓ.க்களின் வேலைகளை யாராலும் நிறுத்தவே முடியாது. அதனால, அவங்களுக்கான இடம் கண்டிப்பாக இருக்கும்''.

''நீங்கள் இணையதள பத்திரிகை தொடங்குவதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே..?''

''இப்போதைக்கு இல்லை. பொடி டப்பாவுக்குள்ள வெடிகுண்ட இறக்கி விட்ட மாதிரி இந்த வருஷம் நான்கு படம் வேகமா தயாரித்து நடிச்சாச்சு. அடுத்த வருடமும் நிறைய படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கேன். அதனால இதுக்கெல்லாம் இப்போ நேரம் இல்லை. ஆனா, நிறைய கதைகள் வச்சிருக்கேன்''.  

''நீங்கள் சிரமமாக நினைப்பது டைரக்‌ஷனா, ஆக்டிங்கா?''

''நான் ஒரு படம் இயக்குவதுக்குள்ள 15 படம் நடிச்சிடலாம். நான் என்னோட குருநாதர் பாக்யராஜ் சார்கிட்ட கத்துக்கிட்டது டெடிகேஷன், மெனக்கெடல். ஒரு படத்துக்காக அவ்வளவு தூரம் மெனக்கெடுவேன். பூ கட்டுவது போல என்னோட படங்களை அழகுபடுத்துவேன். சில சமயம் எனக்கே அது பிடிக்காமப் போகும். ஏன், இவ்வளவு நேரத்தை வீணாக்குறேனு. எனக்கு நடிப்பதை விட இயக்கம் தான் கடினம்''. 

''இப்போதெல்லாம் நடிகர்கள் பாடுவது இயல்பாகிவிட்டது? நீங்கள் பாடுவதற்கான வாய்ப்பு?''

'' 'பச்சக்குதிர' படத்துல என்னோட போர்ஷனுக்கு ஒரு பாட்டு பாடியிருந்தேன். அதுக்கப்புறம், அதை விட நாம செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு என்பதால, அந்த வேலைகளை பார்க்க ஆரம்பிச்சுட்டேன். எனக்கு சங்கீதம் வராது. அதனால அதுல எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்.  தெரிஞ்ச விஷயத்தை சரியா செய்தாலே போதும்''. 

- வே. கிருஷ்ணவேணி 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!