ராதாவை கலங்க வைத்த ஜெயலலிதாவின் கேள்வி!


'முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க நானும் என் அக்காவும் காத்திருந்தோம். மனசுக்குள் ஒரு படபடப்பு, பயம். ஒரு மாநிலத்தின் முதல்வர், தைரியப்பெண்மணி. எப்படி அவரை சந்திக்கப் போகிறோம் என கை, கால் படபடப்புடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது 'அம்மா' புன்னகைத்தபடியே நடந்து வந்தார்...' ஜெயலலிதாவைச் சந்தித்த தருணத்தைப் பேசும் போதே சிலிர்க்கிறார் நடிகை ராதா. ''எனக்கு ஒரு நடிகையாக அவரை ரொம்பப் பிடிக்கும். என்ன ஒரு அழகான நடிப்பு, உடை நேர்த்தி. அப்பப்பா.. அவங்களைப் புகழ்ந்து சொல்லிட்டேப் போகலாம். என்னுடைய ஹேர் ஸ்டைலிஷ்ட் பார்த்தசாரதி ஒரு முறை ஜெயலலிதா அவர்கள் படத்தில் பயன்படுத்திய விக் ஸ்டைல் பத்தி சிலாகிச்சி சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு அப்போதே, இது போல ஒரு ஹேர் ஸ்டைல் செய்தால் என்ன... எனத் தோன்றியது. அடுத்து நான் நடித்தப் படத்தில் அதே போல ஒரு விக் ஸ்டைல் செய்து அணிந்து நடித்தேன். 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் பூக்களால் ஆன உடையை ஒருபாடலில் அணிந்திருப்பார். அது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஆடைகளில் ஒன்று. அதே மாதிரி நானும் அணிந்து நடிக்க ஆசைப்பட்டேன். நிறைவேறவே இல்லை.

நாங்க நடிக்க வந்த காலத்தில் ஜெயலலிதா, சரோஜா தேவி, பத்மினி இவங்க எல்லோரும்தான் இன்ஸ்பிரேஷன். அப்போது எல்லாம் டி.வி, இன்டர்நெட் அதிக அளவு இல்லாத காலம். அவங்களுடைய ஒவ்வோர் அசைவையும் நான் ரசிச்சிருக்கேன்.

நான் சந்தித்த நபர்களிலேயே அவங்களைப் போல அழகான ஸ்கின் டோனுடன் இருந்தவங்களைப் பார்த்ததே இல்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பன்னீர் ரோஜா செடி இருக்கும். அந்தப் பூவின் நிறம்தான் அவங்களுடையது.

ஒரு முறை அவங்களுடைய தேர்தல் வேலை காரணமாக மூன்று நாட்கள் சென்னை வந்து வேலைகளில் மூழ்கியிருந்தேன். அதற்கு முன்பு அவரை நானும், என் அக்கா அம்பிகாவும் சந்தித்தோம். அந்த சந்திப்பின்போது தேர்தல் வேலை சம்பந்தமான பேச்சும் வந்தது. அப்போது அவர், 'குழந்தைகளை விட்டுட்டு வந்திருக்கீங்களே.. கணவர் ஒத்துப்பாரானு' கேட்டாங்க. எனக்கு ஒரு நிமிஷம் என்ன சொல்வதென்றே தெரியல. அப்போதுதான் அவங்க மீதும், என் குடும்பத்து மீதும் எவ்வளவு அன்பும், அக்கறையும் வச்சிருந்தாங்கனு தெரிஞ்சது. அன்றைக்கு அவருடன் எடுத்துக் கொண்ட படத்தை பத்திரமாக வச்சிருக்கேன். அவங்க சந்திக்க வரும் அறையில் அவங்க சின்ன வயசுப் போட்டோ வச்சிருந்தாங்க. அதைப் பார்த்து அப்படியே மெய்சிலிர்த்து உட்கார்ந்திருந்தோம். அவங்க வந்ததுக்குப் பிறகு, அவங்க முன்னாடி ஒரு சிலை போல நிற்கிறோம். அவங்க மெஸ்மரிசம் செய்யக் கூடிய அழகு என்பதை நேரில் பார்த்தப் பின்பு உறுதியாக நம்பினேன். அப்படி ஒரு அழகு தேவதை அவங்க. நாங்க சந்திச்சப்போ கண்ணுக்கு ஒரு மை கூட வைக்கல. மேக்கப் சுத்தமாக் கிடையாது. அவங்கதான் உண்மையில், நேச்சுரல் பியூட்டி.   

அவங்க இறந்த அன்று இரவே மும்பையில் இருந்து சென்னைக்கு 2.15 மணி விமானத்துக்கு புக் செய்திருந்தேன். பிரதமர் மோடி, குடியரசு தலைவர், மற்ற மாநில முதலைச்சர்கள் என எல்லோருமே சென்னைக்கு வருவதால பல பிளைட் கேன்சல், டிலே எனப் பிரச்னைகள். எனக்கு அவங்களுக்கு அஞ்சலி செலுத்த வர முடியல என்பது ரொம்ப வருத்தமாகவும், வேதனையாகவும் இருக்கிறது'' என்றார் ராதா கனத்தக் குரலில்.

- வே. கிருஷ்ணவேணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!