’என் மாமா ஓ.பன்னீர்செல்வம் மீம்ஸ் எனக்கே வரும்!’’ - நடிகரின் ரியல் லைஃப் காமெடி


''தற்போது முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் எனக்கு மாமா முறை. அவரை மாதிரி சிம்பிளான ஒரு ஆளை நீங்க பார்க்கவே முடியாது. நல்ல மனிதர்..' என தனது மாமா ஒ.பி.எஸ் பற்றி விரிவாகப் பேசுகிறார் இயக்குநர், நடிகர் சிங்கம் புலி,

''மிகச்சாதாரண இடத்தில் இருந்து படிப்படியாக முன்னேறி இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். மாமா ரொம்ப நல்ல மனிதர். அவருக்கு பண்ணை, மாடுகள், விவசாயத்தின் மீது அதிக ஆர்வம் உண்டு. அவருக்கு தண்ணீர் ராசி. நீங்கள் கவனித்திருந்தால் தெரியும், அவர் ஆட்சியில் உட்காரும் பொழுதெல்லாம் தமிழகத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்திருக்கும். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். ஒரு நாளைக்கு அரைமணி நேரமாவது பூஜை அறையில் உட்கார்ந்திருப்பது வழக்கம். உறவினர்கள் அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர். எந்த இடமாக இருந்தாலும் சரி, சாதாரணமாக தரையில் உட்கார்ந்து சாப்பிடுவார். சிம்பிளானவர். 


வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் அவருடைய தொகுதியான போடிநாயக்கனூர் மக்களிடம் குறை தீர்க்கும் முயற்சியில் இருப்பார். மாமாவின் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட ஜெயலலிதா அவர்கள் பேசிய போது, 'ராமர் வனவாசம் சென்றபோது அவருடைய செருப்பை அரியணையில் வைத்து ஆட்சி செய்தார் பரதன். இது இதிகாசத்தில் நடந்தது. ஆனால், இந்த கலிகாலத்தில் நான் என் முதல்வர் பதவியை ஓ.பி.எஸ் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பி வந்தபோது திருப்பிக் கொடுத்தார். நான் பதவியை அவரிடம் கொடுத்துவிட்டு திரும்பப் பெறும்போது, 'உங்களுக்குக் கொடுக்கத்தான் அம்மா காத்திருக்கிறேன்' என சொன்னார். உலக அரசியலில் இப்படி ஒரு நிகழ்வை உங்களால் பார்க்க முடியாது எனப் புகழ்ந்தார் ஜெயலலிதா. அப்படி எதிலும் நேர்மையாக செயல்படக்கூடியவர் ஓ.பி.எஸ் மாமா. பொதுவாக மந்திரியாக இருந்தாலே தொகுதி மக்கள் முதல் தமிழக மக்கள் வரை உதவி கேட்டு வருவார்கள். யாருக்கும் இதுவரை முகம் சுளித்து அவர் மறுத்ததே இல்லை!’’ என்று சிலாகித்தார்.

அவரிடம், 'தேசிங்கு ராஜா' படத்தில் 'பாயாசம் எங்கடா' என நீங்கள் கேட்கும் காட்சி மீம்ஸ் ஆக கலாய்க்கப்பட்டு வருகிறதே!’ என்று கேட்டேன்.

 
 'வடிவேல் சாருடைய நிறைய டயலாக் படங்களைத்தான் கலாய்க்கப் பயன்படுத்துறாங்க. அது எவ்வளவு பெரிய விஷயம். நானும் அந்த வரிசையில் வந்திருப்பது சந்தோஷம். ’ம.தி.மு.க-வுல வேற யாருடா போனது?’, அம்மாவுக்கு நினைவு வந்ததும்,  தரைதளத்தில் இருந்த ஓ.பி.எஸ் ஐ கேட்பது போல், 'ஓ.பி.எஸ் எங்கப்பா?' என என் போட்டோ வைத்து பல மீம்ஸ் எனக்கே வந்துருக்கு. அதையெல்லாம் ஜாலியா ரசிப்பேன். இப்போ நடிக்கிற 'மன்னர் வகையறா,  'யாக்கை' படங்கள்ல இருந்தும் அப்படி மீம்ஸ் வந்தா சந்தோஷம்!’’ எனச் சிரிக்கிறார் சிங்கம் புலி.  

-வே. கிருஷ்ணவேணி
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!